தமிழக ஊடகங்களின் இரட்டை நிலையை சாடும் வகையில் தற்போது சமூக வலைதளங்களில் எழுந்துள்ள விவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகையை விமர்சனம் செய்துகொண்டே, மறுபுறம் அவரது ஒவ்வொரு அசைவையும் நேரலையில் ஒளிபரப்பி காசு பார்க்கும் ஊடகங்களின் போக்கை பலரும் கடுமையாக சாடி வருகின்றனர்.
மற்ற அரசியல் தலைவர்கள் செய்தியாளர்களை அழைத்து தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது மதிக்காத ஊடகங்கள், விஜய்யை பார்த்தால் மட்டும் கேமராக்களுடன் ஓடுவது ஏன் என்ற கேள்வி உரக்க ஒலிக்கிறது. குறிப்பாக, தங்களை மதிக்காத ஒருவருக்காக மணிக்கணக்கில் காத்து கிடப்பது ஊடகவியலாளர்களின் சுயமரியாதையை கேள்விக்குறியாக்குகிறது.’

விஜய்யை பொறுத்தவரை அவர் ஊடகங்களை சந்திப்பதையோ அல்லது பேட்டி அளிப்பதையோ விரும்புவதில்லை; மாறாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் நேரடியாகத் தனது ரசிகர்களுடன் பேசிக்கொள்கிறார். அப்படி தன்னை மதிக்காத ஒருவரின் பின்னால் ஊடகங்கள் ஏன் இவ்வளவு தூரம் அலைகின்றன என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இதற்கு பின்னால் இருக்கும் ஒரே காரணம் “டிஆர்பி” மற்றும் பணம் மட்டுமே. விஜய்யின் ஒரு சிறு வீடியோ அல்லது புகைப்படம் ஒளிபரப்பானால் நொடிக்கு நொடி சேனல்களுக்கு காசு குவிகிறது. தனது லாபத்திற்காக விஜய்யை பயன்படுத்திக்கொள்ளும் ஊடகங்கள், அதே சமயம் அவரை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது என்ற கோபம் தவெக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
ஊடகங்கள் நினைத்தால் எந்தவொரு பிம்பத்தையும் உடைக்க முடியும் அல்லது உருவாக்க முடியும். ஒருவருக்கு தேவைப்படும் “பப்ளிசிட்டி” எனும் ஆக்சிஜனை தீர்மானிப்பதே ஊடகங்கள்தான். அப்படி இருக்கும்போது, தங்களை ஒரு பொருட்டாக கூட மதிக்காத ஒருவரை ஏன் காலையிலிருந்து நள்ளிரவு வரை பின்தொடர வேண்டும்? அவர் வீட்டை விட்டு வெளியே வரும்போது நான்கு மணிக்கு கூட்டம் என்றால், அதிகாலை ஆறு மணிக்கே லைவ் ஒளிபரப்பு செய்யும் ஊடகங்கள், பின்னர் அவரை பற்றிப் பேசும்போது மட்டும் நடுநிலைமை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஊடகங்கள் தங்களின் சுயமரியாதையை பேண நினைத்தால், இத்தகைய ஒருதலைப்பட்சமான ஓட்டத்தை நிறுத்த வேண்டும்.
குறிப்பாக, திமுக ஆதரவு சேனல்களும், அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களால் நடத்தப்படும் ஊடகங்களும் விஜய்யை வைத்து தங்கள் கல்லாவை கட்டுகின்றன என்பதுதான் கசப்பான உண்மை. விஜய்யின் அரசியல் வருகை குறித்து எதிர்மறையான விமர்சனங்களை முன்வைக்கும் அதே வேளையில், அவரை பற்றிய செய்திகளை போட்டு ரேட்டிங் ஏற்றிக்கொள்ளும் இந்த செயல் “மானங்கெட்டப் பிழைப்பு” என்று விமர்சிக்கப்படுகிறது. தங்களுக்கு பிடிக்காத ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்பாக, அவரை வைத்து வருமானம் ஈட்டுவதை நிறுத்த வேண்டும் என்பதே நியாயமான கேள்வியாக முன்வைக்கப்படுகிறது.
இறுதியாக, ஊடகங்கள் தங்களின் பலத்தையும் பலவீனத்தையும் உணர வேண்டிய தருணம் இது. விஜய் இல்லாமல் ஒரு நிமிடம் கூட தங்கள் சேனலை ரன் பண்ண முடியாது என்ற நிலையில் இருக்கும் ஊடகங்கள், அவரோடு மோதிக்கொள்வது என்பது முரண்பாடானது. மக்கள் எதை கவனிக்கிறார்கள் என்பது ஊடகங்களுக்கு தெரியும், அதனால்தான் அவர்கள் விஜய்யை பின்தொடர்கிறார்கள். ஆனால், தங்களை மதிக்காத ஒரு தலைவரின் பின்னால் இவ்வளவு தூரம் ஓடுவது ஊடகங்களின் தரத்தையே குறைக்கிறது. இந்த தேவையற்ற முக்கியத்துவத்தை ஊடகங்கள் குறைத்துக்கொண்டால் மட்டுமே, அவர்கள் மீது மக்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச மரியாதையாவது மிஞ்சும். உங்களை மதிக்காதவரை நீங்கள் ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்விக்கு ஊடகங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.





