தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த “பணத்தை கொடுத்தால் வாக்குகளை வாங்கிவிடலாம்” என்ற மரபுசார்ந்த அரசியல் கணக்கு, இந்த தேர்தலில் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்திருக்கிறது. பொதுவாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் தங்களின் வாக்கு வங்கியை தக்கவைக்க பணத்தை ஒரு முக்கிய ஆயுதமாக பயன்படுத்துவது வழக்கம். சுமார் 7 சதவீத வாக்காளர்கள் யாரிடம் பணம் வாங்குகிறார்களோ அவர்களுக்கே வாக்களிக்கும் மனநிலையில் இருப்பார்கள். ஆனால், இன்றைய சூழலில் ஒரு கட்சியின் தீவிர விசுவாசியாக அறியப்படுபவர்களே பணம் வாங்கிக்கொண்டு, வாக்களிக்கும்போது மாற்றுச் சக்தியை தேர்வு செய்யும் ஒரு புதிய கலாச்சாரம் வேரூன்றி இருப்பது திராவிட கட்சிகளை நிலைகுலைய செய்திருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத ஒரு விசித்திரமான சூழல் இப்போது உருவாகியுள்ளது. ஒரு குடும்பத்தில் ஐந்து ஓட்டுகள் இருந்து, அவர்கள் பாரம்பரியமாக திமுக அல்லது அதிமுகவின் ஆதரவாளர்களாக இருந்தாலும், இப்போது தாராளமாக பணத்தை பெற்றுக்கொண்டு வாக்களிக்கும்போது மட்டும் தங்களின் மனசாட்சிப்படி அல்லது மாற்றத்தை விரும்பி செயல்படுகிறார்கள். குறிப்பாக, திமுகவின் ‘கட்சி குடும்பம்’ என்று அழைக்கப்படும் தீவிர விசுவாச ஓட்டுகளே கூட, பணத்தை பெற்றுக்கொண்டு உதயசூரியனுக்கு வாக்களிக்காமல் தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய வரவுகளை நோக்கி திரும்பியிருப்பது அரசியல் வியூக வகுப்பாளர்களை திணறடித்துள்ளது. இதே நிலைதான் அதிமுகவிலும் பிரதிபலிக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை, தங்கள் கட்சியின் கிளை செயலாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளின் ஓட்டுகளை உறுதி செய்யவே பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். மாற்று ஓட்டுகளை கவருவதை விட, தங்கள் கட்சியின் ஓட்டுகளே சிதறிவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனம் செலுத்தினர். ஆனால், இவ்வளவு பண பட்டுவாடா நடந்த பிறகும், அந்த ஓட்டுகள் அப்படியே தவெக போன்ற புதிய கட்சிகளுக்கு மடைமாறியுள்ளது. குறிப்பாக 50 வயதிற்கு உட்பட்ட வாக்காளர்கள், திராவிட கட்சிகளின் வழக்கமான அரசியல் பாணியால் சலிப்படைந்து, பணத்தை ஒரு ‘உரிமையாக’ வாங்கிக்கொண்டு வாக்குகளை ‘மாற்றாக’ பதிவு செய்ய தயாராகிவிட்டனர்.
இந்த மாற்றம் தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாகும். “மக்கள் முட்டாள்கள், ஐந்து வருடம் கொள்ளையடிக்கலாம், தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள்” என்ற பழைய சித்தாந்தம் இனி செல்லுபடியாகாது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது. ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டும், ஊழல் புகார்களை பரிமாறிக்கொண்டும் மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணத்தை மக்கள் உடைத்தெறிந்துள்ளனர். அரசியல்வாதிகள் தங்களை சீர்திருத்திக்கொள்ள வேண்டிய அல்லது புதிய கால மாற்றத்திற்கு ஏற்பத் தங்களின் அணுகுமுறையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறார்கள்.
இறுதியாக, தமிழக வாக்காளர்கள் பணத்தை ஒரு வாழ்வாதார தேவையாக பார்த்தாலும், தங்களின் அரசியல் உரிமையை தற்காத்து கொள்வதில் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். சித்தாந்த ரீதியாக மக்களை பிரித்து வைத்திருந்த திராவிட கட்சிகளுக்கு, அடுத்த தலைமுறை வாக்காளர்கள் ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறார்கள். பணம் கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்ற திமிர் இனி எந்த கட்சிக்கும் எடுபடாது. மக்களின் தேவைகளை உணர்ந்து, நேர்மையான அரசியலை முன்வைக்கும் சக்திகளுக்கே எதிர்காலம் என்பதை உணர்த்தும் ஒரு புதிய அரசியல் புரட்சிக்கு தமிழகம் வித்திட்டுள்ளது. இப்போதாவது அரசியல் தலைவர்கள் விழித்துக்கொள்ளாவிட்டால், காலப்போக்கில் அவர்கள் காணாமல் போவது உறுதி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
