யாரையும் நம்பி பிரயோஜனமில்லை.. நானே களத்தில் இறங்க போறேன்.. இஸ்லாமாபாத் சென்று ஈரானுடன் ஒப்பந்தம் போடுவேன்.. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்.. அணு ஆயுதங்களை ஈரான் உருவாக்குவதும் தடுக்கப்படும்: டிரம்ப் உறுதியான கருத்து..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி உடன்படிக்கை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கையெழுத்தானால், தாம் அங்கு நேரில் செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் உடனான…

trump2

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி உடன்படிக்கை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கையெழுத்தானால், தாம் அங்கு நேரில் செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஆற்றி வரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வெகுவாக பாராட்டினார். “இஸ்லாமாபாத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானால் நான் நிச்சயமாக அங்கு செல்வேன்; அவர்கள் நான் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்,” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் உடனான தற்போதைய பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஒரு நல்ல செய்தி வெளியாகக்கூடும் என்றும் அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவது தடுக்கப்படும் என்பதுடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற எண்ணெய் போக்குவரத்து உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் “வரலாற்றிலேயே மிக மோசமான பணவீக்கத்தை நான் முந்தைய அரசிடம் இருந்து பெற்றேன், ஆனால் இப்போது நிலைமை மாறிவருகிறது. ஈரான் உடனான மோதல் போக்கு குறைந்து வருவதன் எதிரொலியாகவே எரிசக்தி விலைகள் கட்டுக்குள் வர தொடங்கியுள்ளன. அணு ஆயுத அச்சுறுத்தலை நீக்குவது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு மிக முக்கியமானது என்று டிரம்ப் கூறினார்.

பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர் தற்போது தெஹ்ரானில் முகாமிட்டு, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முடங்கிக் கிடக்கும் அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான சிக்கலான அம்சங்களில் ஒருமித்த கருத்தை எட்ட பாகிஸ்தான் அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இந்த மத்தியஸ்த முயற்சிகளின் ஒரு பகுதியாக முனீர் விரைவில் வாஷிங்டன் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் சில முக்கியத் தடைகள் இன்னும் நீடிக்கின்றன. குறிப்பாக, ஈரான் எவ்வளவு காலம் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தி வைக்க வேண்டும் மற்றும் அதன் தற்போதைய கையிருப்பை எப்படி கையாள்வது என்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஒருவேளை இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் மோதல் வெடிக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். எனினும், தற்போதைய போர்நிறுத்த சூழலை பயன்படுத்தி, இஸ்லாமாபாத்தை மையமாக வைத்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.