தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க மாற்றம் தற்போது நிகழ தொடங்கியுள்ளது. பொதுவாக ஒரு கட்சியின் தலைவர் வீதி வீதியாக சென்று மக்களைச் சந்தித்து வாக்கு கேட்பதே வழக்கமான நடைமுறை. ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீட்டை விட்டு குறைவான அளவே வெளியே வருகிறார்.
ஆனாலும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள வீடுகளுக்குள் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதை வழிமொழியும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சமீபத்தில் பகிர்ந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வயது குழந்தை கூட தனது தாத்தாவிடம் “இந்த முறை விஜய்க்கு ஓட்டுப் போடுங்க” என்று கேட்பது, விஜய் மக்கள் மத்தியில் ஒரு தலைவராக மட்டும் அல்லாமல், குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே மாறிவிட்டதை காட்டுகிறது.
கருத்துக்கணிப்பு வல்லுனர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் இந்த மாற்றத்தை ஒரு “சைலண்ட் புரட்சி” என்று வர்ணிக்கின்றனர். இதற்கு முன் ஒரு கட்சியின் பலம் என்பது அதன் கடந்த கால வாக்கு சதவீதத்தை வைத்தே கணக்கிடப்பட்டது. ஆனால், விஜய் அந்த பழைய கணக்கு முறைகளையெல்லாம் மொத்தமாக புரட்டி போட்டுள்ளார். மற்ற கட்சியினர் விஜய்யை கிண்டலடித்தாலும், தரைமட்ட அளவில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு பேராவது விஜய்யின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. விஜய் நேரில் வராமலேயே, ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் அவருக்காக ஒரு தன்னார்வ பிரச்சார படை உருவாகியிருப்பது திராவிட கட்சிகளுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வாக்களிக்கும் வயதை கூட எட்டாத சிறுவர்களும், பள்ளி மாணவர்களும் விஜய்யின் தீவிர தூதுவர்களாக மாறியுள்ளனர். தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டிகளிடம் விஜய்க்கு வாக்களிக்க சொல்லி அவர்கள் வைக்கும் கோரிக்கை உணர்ச்சிப்பூர்வமானது. “நாங்கள் எதிர்காலத்தில் நல்லாட்சியில் வாழ வேண்டும் என்றால், இந்த முறை விஜய்க்கு வாய்ப்பளியுங்கள்” என்று குழந்தைகள் கேட்கும் போது, அது பெரியவர்களின் அரசியல் நிலைப்பாட்டையே மாற்றி அமைக்கிறது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற கட்சிகள் பல ஆண்டுகளாக கட்டியெழுப்பிய வாக்கு வங்கியை, இந்த குழந்தைகளின் மழலைப் பேச்சும், இளைஞர்களின் மாற்றத்திற்கான தாகமும் மெல்ல மெல்ல சிதைத்து வருகின்றன.
விஜய் களத்திற்கு வந்து மக்களை சந்திக்கவில்லை என்று மற்ற கட்சிகள் முன்வைக்கும் விமர்சனம், தற்போதைய சூழலில் எடுபடாமல் போகிறது. “விஜய் தான் எல்லோர் வீட்டுக்கும் செல்வதில்லை, ஆனால் எல்லோர் வீட்டிலும் விஜய் இருக்கிறார்” என்கிற நிதர்சனமான உண்மை களத்தில் எதிரொலிக்கிறது.
மொத்தத்தில் 2026 தேர்தல் என்பது வெறும் அரசியல் மோதல் அல்ல, அது தலைமுறை மாற்றத்திற்கான ஒரு களமாக பார்க்கப்படுகிறது. வழக்கமான அரசியல்வாதிகளின் வெற்று முழக்கங்களை விட, தங்களுக்கு பிடித்தமான ஒரு நடிகர் மக்கள் சேவகராக வரும்போது மக்கள் கொடுக்கும் ஆதரவு அபரிமிதமானது. ஒரு கம்யூனிஸ்ட் தலைவரே வியந்து பேசும் அளவுக்கு விஜய்யின் தாக்கம் பெருகியுள்ள நிலையில், திராவிட கட்சிகள் தங்கள் பழைய உத்திகளை கைவிட்டுப் புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
