தமிழக காங்கிரஸ் கமிட்டியின் வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள கடும் இழுபறி மற்றும் உட்கட்சி மோதல்கள் இப்போது டெல்லி வரை எதிரொலிக்க தொடங்கியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட குழுக் கூட்டத்தில், ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்டு வந்த வேட்பாளர் பட்டியலை பார்த்த ராகுல் காந்தி, அதில் தகுதியானவர்களுக்கு பதில் செல்வாக்கு மிக்கவர்களின் உறவினர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான், அவர் அந்த பட்டியலை ஏற்க மறுத்து, தமிழக காங்கிரஸ் தலைமையை நோக்கி தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 28 இடங்களுக்கு போட்டியிட நூற்றுக்கணக்கானோர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், யாரை தேர்வு செய்வது என்பதில் மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, பி. சிதம்பரம் தரப்பு ஒரு பட்டியலையும், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றொரு பட்டியலையும் முன்வைத்ததாக தெரிகிறது. இந்த கோஷ்டி பூசல்களால் அதிருப்தி அடைந்த ராகுல் காந்தி, “உங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாதபோது, எப்படி தேர்தலில் வெற்றி பெறுவீர்கள்?” என்று கேள்வி எழுப்பியதாகவும், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், தமிழக காங்கிரஸ் விவகாரங்களில் தான் தலையிட விரும்பவில்லை என்ற தொனியில் பேசியதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
ராகுல் காந்தியின் கோபத்திற்கு பின்னால் மற்றொரு முக்கியக் காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிட்டு, கடினமான தொகுதிகளை பெற்றிருப்பதாக அவர் கருதுகிறார். இது குறித்து மாநிலத் தலைமையிடம் கேட்டபோது, அவர்கள் சரியான விளக்கம் அளிக்க தவறியதாகத் தெரிகிறது. “எல்லாவற்றையும் ப. சிதம்பரம் மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடமே கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள், என்னிடம் எதற்கும் வராதீர்கள்” என்று அவர் கூறியதாக பரவும் தகவல்கள், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் அகில இந்திய தலைவரே இவ்வளவு விரக்தியாக பேசியிருப்பது, கூட்டணியில் காங்கிரஸின் பலவீனத்தையே காட்டுகிறது.
உட்கட்சிப் பூசல்கள் ஒருபுறமிருக்க, வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற புகாரும் ராகுல் காந்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பணம் மற்றும் செல்வாக்கிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறி ஒரு காங்கிரஸ் எம்பியே தலைமைக்கு கடிதம் எழுதியிருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. கேரளாவில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களின் இந்த செயல்பாடுகளால் மிகவும் களைப்படைந்துள்ளாராம். தமிழக காங்கிரஸ் “எக்கேடும் கெட்டு போகட்டும்” என்ற ரீதியில் அவர் வெளிப்படுத்திய ஆதங்கம், கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையே ஒருவித சோகத்தையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
இறுதியாக, வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்த அதிருப்தி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் பெரும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டாலும், ராகுல் காந்தி தனது நிலையில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. “வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை கொண்டு வாருங்கள், வாரிசுகளை அல்ல” என்பதுதான் ராகுலின் தாரக மந்திரமாக உள்ளது. ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் பிடிவாதத்தை கைவிடாத வரை, இந்த பிரச்சினை ஓயாது என்றே தோன்றுகிறது. ராகுல் காந்தியின் ஆத்திரம் தணிந்து, ஒரு சுமுகமான முடிவு எப்போது எட்டப்படும் என்பதே இப்போது தமிழக காங்கிரஸின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
