2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக அரசியல் ஒரு முக்கியமான மாற்றத்தை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது, ஊடக வெளிச்சத்தில் இந்தத் தேர்தல் ‘விஜய் vs திமுக’ என்ற ரீதியில் சுருங்கிவிட்டதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆனால், கள நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கும் அரசியல் ஆய்வாளர்கள், இது வெறும் ஊடக பிம்பமா அல்லது உண்மையான அரசியல் மாற்றமா என்ற விவாதத்தை தூண்டியுள்ளனர். அதிமுக தரப்பில் ஒரு பெரிய ‘ஸ்டார்’ முகம் இல்லாதது எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், வெறும் திரையரங்கு ஆரவாரத்தை வைத்து மட்டும் தேர்தல் முடிவுகளை கணிக்க முடியாது என்பதே யதார்த்தம்.
திமுக தரப்பில் தவெகவின் வருகையை வெளிப்படையாக குறைத்து மதிப்பிட்டாலும், திரைமறைவில் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே செயல்படுகின்றனர். மகளிர் உதவித்தொகையை முன்கூட்டியே வழங்குவது மற்றும் புதிய சலுகைகளை அறிவிப்பது போன்றவை இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் விஜய் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளாகவே பார்க்கப்படுகின்றன.
குறிப்பாக, கொளத்தூர் மற்றும் பெரம்பூர் போன்ற தொகுதிகளில் ஸ்டாலினும் விஜய்யும் நேரடியாக களமிறங்குவது, அரசியல் களத்தில் நிலவும் கடும் போட்டியை உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், திமுகவின் வலுவான உட்கட்சி கட்டமைப்பு மற்றும் தேர்தல் வியூகங்கள் விஜய்யின் மக்கள் செல்வாக்கை எதிர்கொள்ள போதுமானதாக இருக்குமா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.
மறுபுறம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணி அமைதியாக தங்களது களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மற்ற கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பே அதிமுக தனது தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ஜெயலலிதா பாணியில் முந்திக்கொண்டது. ஊடகங்கள் விஜய்யின் வருகையை தலைப்பு செய்தியாக்கினாலும், கிராமப்புறங்களில் அதிமுகவின் அடிமட்ட தொண்டர் பலம் இன்னும் சிதையாமல் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, களத்தில் நிலவும் உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்துத் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறார்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரை, அது முழுக்க முழுக்க விஜய்யின் தனிப்பட்ட பிம்பத்தையே சார்ந்துள்ளது. விஜய் ஒரு மாஸ் தலைவராக தன்னை முன்னிறுத்தினாலும், திமுக அல்லது அதிமுகவை போன்ற வலுவான கட்சி இயந்திரம் அவரிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே என சில அரசியல் விமர்சகர்கள் கூறினாலும், விஜய்யின் பிரச்சாரங்கள் பெரும் கூட்டத்தை கூட்டினாலும், அந்த கூட்டம் வாக்கு சாவடியில் வாக்குகளாக மாறுமா என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் எழுப்பினாலும், ஒருவேளை இந்த கூட்டம் வாக்குச்சாவடிக்கு போய்விட்டால் இரண்டு திராவிட கட்சிகளும் ஸ்வீப் என்பதையும் ஒப்புக்கொள்கின்றனர். அப்படி ஒரு அதிசயம் தமிழகத்தில் நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில் தொலைக்காட்சி காட்சிகளுக்கும் களப்பணிகளுக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு, கிராமப்புறங்களில் அதிமுக மற்றும் திமுகவின் பலத்தோடு மோத வேண்டியிருக்கும். அதிமுகவின் அனுபவமும், திமுகவின் அதிகார பலமும், விஜய்யின் புதுமையும் மோதும் இந்த மும்முனை போட்டியில், ஊடகங்களின் கணிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், உண்மையான தீர்ப்பு மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்றுதான் தெரியும். இந்த தேர்தல் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுமா அல்லது திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே தொடருமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
