தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கிய விதம், ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவர் களம் இறங்கியுள்ள நிலையில், அவரது ஒவ்வொரு அசைவையும் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாட்டின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. ஸ்டாலின், உதயநிதி அல்லது எடப்பாடி பழனிசாமி போன்ற அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்களுக்கு கூட கிடைக்காத ஒரு பிரம்மாண்டமான வரவேற்பும், நேரலை முக்கியத்துவமும் விஜய்யின் முதல் நாள் களப்பணிக்கே கிடைத்துள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
ஊடகங்களின் இந்த திடீர் ஆர்வம் என்பது வெறும் அரசியல் கடமைக்காக உருவானது அல்ல, மாறாக அது “விஜய்” என்ற பெயருக்கு பின்னால் இருக்கும் அசுரத்தனமான டிஆர்பி மதிப்பீட்டினால் உருவானது. வழக்கமாக அரசியல் தலைவர்களின் கூட்டங்களுக்கு மணிக்கணக்கில் நேரலை போடும்போது மக்கள் சேனல்களை மாற்றிவிடுவார்கள். ஆனால், விஜய் பிரச்சார வாகனத்தில் ஏறுவது முதல் அவர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவது வரை ஒவ்வொன்றையும் மக்கள் இமைக்காமல் பார்த்து கொண்டிருக்கின்றனர். ஒருவேளை ஊடகங்கள் விஜய்யை காட்ட தவறினால், மக்கள் தங்களது கைபேசிகளில் சமூக வலைத்தளங்களில் உள்ள நேரலையை பார்க்க தொடங்கிவிடுவார்கள் என்பது தெரிந்தே, வேறு வழியின்றி அனைத்து ஊடகங்களும் விஜய்யின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.
சில ஊடகங்கள் கொள்கை ரீதியாகவோ அல்லது அரசியல் அழுத்தங்கள் காரணமாகவோ விஜய்க்கு எதிராக இருக்கலாம். ஆனால், தொழில்முறை ரீதியாக பார்த்தால் விஜய்யை பகைத்து கொண்டு எந்தவொரு ஊடகமும் தற்போதைய சூழலில் இயங்க முடியாது. அவர் ஒரு கருத்தை சொன்னால் அது அன்றைய தினத்தின் மிகப்பெரிய விவாத பொருளாக மாறுகிறது. டிஜிட்டல் தளங்களில் விஜய்யின் பிரச்சார வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளை பெறுகின்றன. இது மற்ற அரசியல் தலைவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. மற்றவர்களுக்கு மணிக்கணக்கில் நேரலை போட்டாலும் வராத வரவேற்பு, விஜய்க்கு வெறும் சில நிமிடங்களிலேயே கிடைத்து விடுகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அல்லது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரச்சாரங்கள் பெரும்பாலும் அரசு இயந்திரத்தின் துணையோடு ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்வாக நடக்கும். அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரங்கள் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை மையப்படுத்தி இருக்கும். ஆனால், விஜய்யின் பிரச்சாரம் என்பது கட்சி எல்லைகளை தாண்டி, சாமானிய மக்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை ஈர்க்கும் ஒரு காந்த சக்தியாக மாறியுள்ளது. மற்ற தலைவர்களின் பேச்சை கேட்பதற்கு கூட்டத்தை கூட்டும் சூழலில், விஜய்யை பார்ப்பதற்காகவே மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பது திராவிட கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாகும்.
மொத்தத்தில் 2026 தேர்தல் என்பது ஊடகங்களுக்கும் ஒரு மிகப்பெரிய அக்னி பரீட்சை. விஜய்யின் வளர்ச்சியை மறைக்க நினைத்தாலும், அவரது டிஆர்பி பலம் அவர்களை தானாகவே முன்வந்து செய்திகளை ஒளிபரப்ப வைக்கிறது. “தவெகடா” என்ற முழக்கத்தோடு விஜய்யின் தொண்டர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழக அரசியலில் ஒரு புதிய சரித்திரத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. எதிர்ப்புகளை தாண்டி, தடைகளை தகர்த்து, மக்களின் பேராதரவோடும் ஊடகங்களின் கட்டாய நேரலைகளோடும் விஜய் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இது ஒருவேளை தமிழக அரசியலின் முகத்தையே மாற்றப் போகும் “விசில் புரட்சி”யாக அமையக்கூடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
