மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழ்ந்துள்ள நிலையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஆலை மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள எரிசக்தி நிலையங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ஈரானிய ஏவுகணை ஒன்று ராஸ் லஃப்பான் தொழில் நகரத்தை தாக்கியதில் அந்த வளாகம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. இதற்கு முன்னதாக நான்கு ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்ட போதிலும், ஒரு ஏவுகணை இலக்கை தாக்கியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களிலேயே அபுதாபியில் உள்ள ஹப்ஷன் எரிவாயு நிலையமும் தாக்குதலுக்குள்ளானதால், பாதுகாப்பு கருதி அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ராஸ் லஃப்பான் தொழில் நகரம் சுமார் 295 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட ஒரு பிரம்மாண்டமான எரிசக்தி மையமாகும். இது உலகளாவிய எல்என்ஜி விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் இங்கு உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நடத்தப்பட்டுள்ள ஏவுகணை தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்ட தீ விபத்து நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள வுட் மெக்கன்சி நிறுவனத்தின் இயக்குனர் டாம் மார்செக்-மான்சர், “உலகளாவிய இயற்கை எரிவாயு சந்தை எதை கண்டு பயந்ததோ, அது இப்போது நடந்துவிட்டது” என்று எச்சரித்துள்ளார். இதன் விளைவாக எரிவாயு விலைகள் விண்ணை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மோதலின் பின்னணியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான நேரடி தாக்குதல்கள் உள்ளன. இஸ்ரேல் ஈரானின் பிரம்மாண்டமான ‘தெற்கு பார்ஸ்’ எரிவாயு வயலை தாக்கியதற்கு பதிலடியாக, கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எரிசக்தி தளங்கள் அனைத்தும் தங்களது இலக்குகள் என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் முறியடித்துள்ளது. அதே நேரத்தில், ரியாத் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே ஏவுகணை சிதறல்கள் விழுந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இத்தகைய தொடர் தாக்குதல்களால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 111.90 டாலராக எட்டியுள்ளது.
கத்தார் அரசு இந்த தாக்குதலை தனது இறையாண்மை மீதான மிக மோசமான அத்துமீறலாகவும், தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தலாகவும் கருதுகிறது. இதன் விளைவாக, கத்தாரில் உள்ள ஈரானிய ராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய ஊழியர்களை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கத்தார் வெளியுறவு அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ராஸ் லஃப்பான் வளாகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் முன்னதாகவே வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக கத்தார் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உலகளாவிய எல்என்ஜி சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த தட்டுப்பாட்டினால் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
அபுதாபியின் ஹப்ஷன் பகுதியில் உள்ள எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பு எரிவாயு நிலையங்களில் ஒன்றாகும். இது நாளொன்றுக்கு 6 பில்லியன் கன அடி எரிவாயுவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது, இது தென் கொரியா போன்ற ஒரு நாட்டின் முழு தேவைக்கும் போதுமானது. இங்கு ஏவுகணை சிதறல்கள் விழுந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து ஏற்கனவே அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் முடங்கியுள்ள நிலையில், கத்தாரின் உற்பத்தி நிறுத்தம் உலகளாவிய எரிசக்தி விநியோக சங்கிலியை அடியோடு சிதைத்துள்ளது. இதனால் எரிவாயு இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் மாற்று வழிகளை தேடி அலைகின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள சேதங்களின் தீவிரத்தை பார்க்கும்போது, கத்தார் மீண்டும் சந்தைக்கு வருவதற்கு இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை ஆகலாம் என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை மையத்தை சேர்ந்த ஆய்வாளர் ஈரா ஜோசப் கணித்துள்ளார். ராஸ் லஃப்பான் வளாகத்தில் முதலீடுகளை கொண்டுள்ள ஷெல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்த தாக்குதலின் பாதிப்புகளை மதிப்பீடு செய்து வருகின்றன. வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்தை ஒரு மிகப்பெரிய மந்தநிலைக்குத் தள்ளக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. வரவிருக்கும் நாட்களில் ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும், விநியோகம் சீரடைய நீண்ட காலம் எடுக்கும் என்பதால் உலக நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
