தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சி விவகாரங்களும் கூட்டணி குறித்த யூகங்களும் விவாத பொருளாகியுள்ளன. குறிப்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் அரசியல் கணக்குகளை அக்கட்சியின் தலைவர் விஜய் அதிரடியாக நிராகரித்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. த.வெ.க தனித்து போட்டியிட்டால் ஆட்சி அமைப்பது சாத்தியமா என்ற தயக்கம் புஸ்ஸி ஆனந்திற்கு இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது. கூட்டணி அமைந்தால் மந்திரி சபையில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிடலாம் என்பது அவரது தனிப்பட்ட திட்டமாக இருந்திருக்கிறது.
இது தொடர்பாக விஜய்யிடம் புஸ்ஸி ஆனந்த் பேசியபோது, விஜய் மிகவும் நிதானமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார். “கூட்டணி என்பது உங்கள் விருப்பமா அல்லது கட்சி நிர்வாகிகளின் விருப்பமா?” என்று விஜய் கேட்க, அதை தொடர்ந்து உடனடியாக மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை கூட்டி புஸ்ஸி ஆனந்த் கருத்து கேட்டுள்ளார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான நிர்வாகிகள், “கரை சேர வேண்டுமானால் கூட்டணி அவசியம்” என்று அழுத்தமாக தெரிவித்துள்ளனர். மிக சில நிர்வாகிகளே தனித்து போட்டியிடுவதை ஆதரித்து பேசியுள்ளனர். நிர்வாகிகளின் இந்த ஒருமித்த கருத்தை வெற்றிகரமாக விஜய்யிடம் கொண்டு சென்றார் புஸ்ஸி ஆனந்த்.
நிர்வாகிகளின் விருப்பத்தை புஸ்ஸி ஆனந்த் சொன்னபோது, விஜய் சற்றும் யோசிக்காமல் தனது முடிவை “ஒரே போடாக” போட்டுவிட்டாராம். “இந்த தேர்தலில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை அண்ணே… நாம் தனித்துத்தான் நிற்கப்போகிறோம், அதை நிர்வாகிகளிடம் சொல்லிவிடுங்கள்” என்று கறாராக கூறிவிட்டாராம் விஜய். விஜய்யின் இந்த திடீர் அதிரடியால் புஸ்ஸி ஆனந்த் கடும் அதிர்ச்சியிலும் அப்செட்டிலும் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியின் எதிர்காலம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்த தனது கணக்குகள் தவிடுபொடியானதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதேவேளை, த.வெ.க-வின் உட்கட்சி ஆலோசனைகள் மற்றும் கூட்டணி குறித்த தகவல்கள் கசிந்ததை ஆளுங்கட்சியான தி.மு.க தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. “த.வெ.க – அ.தி.மு.க கூட்டணி உறுதியாகிவிட்டது, 42 தொகுதிகள் ஒதுக்கீடு, துணை முதல்வர் பதவி” என்பது போன்ற செய்திகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவின. இத்தகைய செய்திகளை கிளப்பிவிட்டதே தி.மு.க தரப்புதான் என்பது அரசியல் வட்டாரத்தின் பேச்சாக உள்ளது. விஜய் நம்பகமானவர் அல்ல என்ற பிம்பத்தை உருவாக்கி, சிறுபான்மையின வாக்குகளை தக்கவைத்துக்கொள்வதே தி.மு.க-வின் முக்கிய வியூகமாக இருக்கிறது.
மறுபுறம், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் பலவீனமாக இருப்பதாகவும், விஜய்யின் தயவு இருந்தால் மட்டுமே அவர்களால் வெற்றி பெற முடியும் என்ற தோற்றத்தையும் தி.மு.க கட்டமைக்க பார்த்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் த.வெ.க-வுடன் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” என்று பகிரங்கமாக தெரிவித்து அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் தவெக தரப்பும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறி திமுகவின் சதியை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும் விஜய் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிடுவார் என்ற பிரசாரத்தை முன்னெடுக்கத் தி.மு.க தரப்பு தயாராகி வருகிறது. விஜய்யின் அரசியல் பயணம் தனித்தன்மையுடன் இருக்குமா அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கணக்குகள் மாறுமா என்பது புதிராகவே நீடிக்கிறது. புஸ்ஸி ஆனந்தின் அப்செட் ஒருபுறம் இருக்க, விஜய்யின் “தனிப்பாதை” முடிவு கட்சிக்குள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும், தேர்தல் களத்தில் இது யாருக்கு சாதகமாக முடியும் என்பதும் வரும் காலங்களில் வெளிச்சத்திற்கு வரும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
