வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளுடன் இணைந்து அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்புகளின் நேரடி தாக்குதல் சோதனையை பார்வையிட்டது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சுமார் 600 மிமீ ரகத்தை சேர்ந்த 12 ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் கிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள தீவு இலக்குகளை நோக்கி இந்த ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன. இந்த சோதனையானது வடகொரியாவின் தாக்குதல் திறனை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.
இந்த ராணுவ நடவடிக்கையின் போது கிம் ஜாங் உன்னுடன் அவரது மகள் கிம் ஜூ ஏ உடனிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த சில மாதங்களாக ராணுவ அணிவகுப்புகள் மற்றும் ஏவுகணை சோதனைகள் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் அவர் தனது தந்தையுடன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதன் மூலம், கிம் ஜாங் உன்னிற்கு பிறகு வடகொரியாவின் அடுத்த அதிகார மையமாக கிம் ஜூ ஏ உருவெடுப்பார் என்ற யூகங்கள் வலுவடைந்துள்ளன. தென்கொரிய உளவு அமைப்புகளும் அவர் வடகொரியாவின் அடுத்த வாரிசாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் நிகழ்ந்துள்ளன. பிப்ரவரி 28-ம் தேதி ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இந்தச் சூழலில் வடகொரியா ஈரானுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளதாகவும், ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ள மோஜ்தபா கமேனியின் நியமனத்தை வடகொரியா அங்கீகரித்துள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளும் பல ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன. ஈரானில் தற்போது நிலவும் போர்ச்சூழல், ஒரு நாடு தனது இறையாண்மையை பாதுகாக்க அணு ஆயுதங்கள் எவ்வளவு அவசியம் என்பதை வடகொரியாவிற்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருந்திருந்தால் அமெரிக்கா இவ்வளவு துணிச்சலாக தாக்குதல் நடத்தியிருக்காது என்ற எண்ணம் வடகொரியாவின் அணு ஆயுத கொள்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் வடகொரியா தனது அணுசக்தி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா நடத்தி வரும் ‘ஃப்ரீடம் ஷீல்ட்’ என்ற ராணுவ பயிற்சியை தங்களின் மீதான ஆக்கிரமிப்பு முயற்சியாக வடகொரியா கருதுகிறது. இதற்கு பதிலடியாக, சுமார் 420 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுத ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த சோதனைகளை நேரில் பார்த்த கிம் ஜாங் உன், இது எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் ஒரு “மரண ஆயுதம்” என்று புகழ்ந்துள்ளார். ஈரானில் போர் நடந்து வரும் சூழலில், தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் மாற்றப்படலாம் என்ற அச்சமும் தென்கொரிய மக்களிடையே நிலவுகிறது.
மொத்தத்தில் வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகள் வெறும் ராணுவப் பயிற்சி மட்டுமல்லாது, அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. ஈரான் போரில் வடகொரியா நேரடியாக இதுவரை தலையிடாவிட்டாலும், அரசியல் ரீதியாக ஈரானை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்குகிறது. ஒருவேளை ஈரானுக்கு நேரடியாக வடகொரியா ஆயுதங்கள் கொடுத்து உதவ முன் வந்தால் அமெரிக்காவுக்கு பெரும் திண்டாட்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
