ஈரானின் புதிய உச்சத்தலைவராக பொறுப்பேற்றுள்ள மோஜ்தபா காமேனி, தனது தந்தை அயதுல்லா அலி காமேனியின் மறைவுக்கு பிறகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் அதிரடி தகவல்களையும் எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். புனித ரமலான் மாதத்தின் பத்தாவது நாளில், திருக்குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த போதே தனது தந்தை வீரமரணம் அடைந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தனது தந்தையின் உடல் உறுதி மலை போல இருந்ததாகவும், அவரது கை முஷ்டி இறுகி இருந்ததாகவும் குறிப்பிட்ட மோஜ்தபா, ஈரானை பிளவுபடுத்தவும் ஆதிக்கம் செலுத்தவும் நினைக்கும் எதிரிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று முழங்கினார்.
இந்த தாக்குதலில் தனது தந்தை மட்டுமன்றி, தனது மனைவி, ஒரு சகோதரி, மருமகள் மற்றும் மைத்துனர் ஆகியோரும் கொல்லப்பட்டதை மோஜ்தபா காமேனி உறுதிப்படுத்தினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைமையிலான அகங்கார நாடுகளின் தாக்குதல்களுக்கு எதிராக துணிச்சலுடன் போரிட்டு வரும் ஈரானிய வீரர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார். ஈரானின் இறையாண்மையை பாதுகாக்க தங்களின் உயிரை தியாகம் செய்த ஒவ்வொருவரின் ரத்தத்திற்கும் பழிவாங்கப்படும் என்றும், அந்த பழிவாங்கும் நடவடிக்கை வெறும் ஒரு சம்பவத்தோடு முடிந்துவிடாது என்றும் அவர் எச்சரித்தார்.
குறிப்பாக, மினா பகுதியில் உள்ள ஷஜரே-தயேபா பள்ளியில் கொல்லப்பட்ட பள்ளிக்குழந்தைகளின் மரணம் ஒருபோதும் மன்னிக்கப்படாது என்று அவர் கூறினார். தியாகிகளின் ரத்தத்திற்கு பழிவாங்கும் திட்டம் இன்னும் இருக்கிறது; அது முழுமையாக நிறைவேற்றப்படும் வரை தூங்க மாட்டோம்’ என்று அவர் சூளுரைத்தார். எதிரிகள் செய்த ஒவ்வொரு அநீதிக்கும் தனித்தனியாக கணக்கு தீர்க்கப்படும் என்றும், இதில் ஈரானிய குழந்தைகள் மீதான தாக்குதலுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்படும் விவகாரம் குறித்தும் மோஜ்தபா விரிவாக பேசினார். உலக எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது என்ற முடிவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அவர் அறிவித்தார். இது எதிரிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற எதிரி நாடுகளுக்கு போதிய அனுபவம் இல்லாத புதிய போர்க்களங்களை ஏற்படுத்துவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் ஒரு மறைமுக எச்சரிக்கையை விடுத்தார். போர்ச்சூழல் நீடித்தால், எதிரிகளின் பலவீனமான புள்ளிகளை கண்டறிந்து புதிய முனைகளில் தாக்குதல் நடத்த ஈரான் தயங்காது என்றும் அவர் குறிப்பிட்டார். இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் இன்னும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
மோஜ்தபா காமேனியின் இந்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒரு செய்தி வாசிப்பாளர் மூலமே மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது; அவர் நேரடியாக கேமரா முன்னால் தோன்றி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிய மக்கள் மற்றும் போராளிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் அமைந்த இந்த உரை, அதே சமயம் சர்வதேச நாடுகளுக்கு ஒரு கடும் சவாலாகவும் பார்க்கப்படுகிறது. ஈரானின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அதன் புதிய தலைமையின் கீழ் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் என்பதை இந்த உரை கோடிட்டுக் காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
