அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, டெக்சாஸ் மாகாணத்தின் பிரவுன்ஸ்வில் பகுதியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படுவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், சுமார் 300 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.27,57,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தமாகும். இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீட்டு ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. ‘அமெரிக்காவின் நாட்டின் எரிசக்தி தேவையில் தன்னிறைவு பெறுவதையும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கு ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் தூய்மையான சுத்திகரிப்பு நிலையமாக செயல்படும் என்று ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தெற்கு டெக்சாஸ் பகுதியில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரிக்குறைப்பு மற்றும் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கியதன் விளைவாகவே ரிலையன்ஸ் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் அமெரிக்காவில் இவ்வளவு பெரிய முதலீட்டை செய்ய முன்வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச்சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தாக்கி வருகிறது. குறிப்பாக, உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், உள்நாட்டிலேயே எண்ணெய் உற்பத்தியை பெருக்குவது அமெரிக்காவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் லீவிட் இது குறித்து பேசுகையில், தற்போது அதிகரித்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தற்காலிகமானவை மட்டுமே என்று உறுதியளித்துள்ளார். ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ தனது இலக்குகளை முழுமையாக எட்டியவுடன், அமெரிக்க மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக்குறைந்த விலையில் எரிபொருளை பெறுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஈரான் இனி அமெரிக்காவையோ அல்லது அதன் நட்பு நாடுகளையோ அணு ஆயுதங்கள் மூலமாகவோ அல்லது எரிசக்தி விநியோகத்தை தடுப்பதன் மூலமாகவோ அச்சுறுத்த முடியாத ஒரு நிலையை உருவாக்குவதே தற்போதைய இராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டம், அமெரிக்காவை மீண்டும் எரிசக்தி துறையில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாற்றும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்துவதுடன், உலகளாவிய ஏற்றுமதி சந்தையிலும் அமெரிக்காவின் பிடியை வலுப்படுத்தும். போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தெற்கு டெக்சாஸ் பிராந்தியத்தில் ஒரு புதிய தொழில்புரட்சியை இந்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தும் என்றும், இது அமெரிக்க எரிசக்தி மேலாதிக்கத்தின் அடையாளமாக திகழும் என்றும் அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
