பெயருக்கு தான் இஸ்ரேல் – ஈரான் போர்.. ஆனால் துபாயை தாக்கும் ஈரான்.. லெபனானை தாக்கும் இஸ்ரேல்.. சவுதியை தாக்கும் ஈரான்.. ஹிஸ்புல்லாவை தாக்கும் அமெரிக்கா.. ஒரு வீரனோட உடலைத் தேடி 40 வருஷத்துக்கு அப்புறம் ஒரு நாடே எல்லை தாண்டி வருதுன்னா, அந்த நாட்டோட உளவு நெட்வொர்க் எவ்வளவு ஆழமானதுன்னு பார்த்துக்கங்க! பழைய கணக்கை முடிக்க இஸ்ரேல் எதையும் செய்யும்ன்னா, அப்படி எல்லை தாண்டி வர்றவங்கள அடிச்சு விரட்டுவதில் ஹிஸ்புல்லாவும் கெத்து தான்..

  லெபனானின் கிழக்குப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று இரவு நடத்திய அதிரடி தாக்குதல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாக தரையிறங்கி மேற்கொண்ட ரகசிய ராணுவ நடவடிக்கை அந்த பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாபெக் மாவட்டத்தில்…

isreal attack

 

லெபனானின் கிழக்குப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று இரவு நடத்திய அதிரடி தாக்குதல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாக தரையிறங்கி மேற்கொண்ட ரகசிய ராணுவ நடவடிக்கை அந்த பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாபெக் மாவட்டத்தில் உள்ள நபி சிட் என்ற ஊரை இலக்காக கொண்டு இஸ்ரேலிய போர் விமானங்கள் அடுத்தடுத்து குண்டுகளை வீசின. இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாகவும், 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரேலிய ராணுவத்தின் இந்த தாக்குதல் வெறும் வான்வழி தாக்குதலுடன் நின்றுவிடவில்லை; தரை வழியாகவும் தாக்கியுள்ளது. சிரியா எல்லை பகுதியிலிருந்து நான்கு இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் நபி சிட் பகுதிக்குள் நுழைந்ததாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர்களில் இருந்து இறங்கிய இஸ்ரேலிய கமாண்டோ வீரர்கள், அந்த பகுதியில் ரகசிய தேடுதல் வேட்டையில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இஸ்ரேலிய வீரர்களுக்கும் இடையே நேரடி துப்பாக்கி சண்டை வெடித்தது. இதனை தொடர்ந்து இஸ்ரேலிய வீரர்கள் பலத்த வான்வழி பாதுகாப்போடு அங்கிருந்து பின்வாங்கியதாக தெரிகிறது.

இந்த ரகசிய நடவடிக்கையின் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் இருக்கலாம் என சவூதி அரேபியாவின் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1986-ல் லெபனான் வான்பரப்பில் விமானத்திலிருந்து குதித்து மாயமான இஸ்ரேலிய விமானப்படை மாலுமி ரான் அராட் என்பவரின் உடலைத் தேடும் முயற்சியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் ரான் அராட் குறித்த தகவல்களை திரட்ட இஸ்ரேல் உளவுத்துறை இன்னும் தீவிரமாக செயல்பட்டு வருவதையே இது காட்டுகிறது.

இருப்பினும், இந்த தாக்குதல் மற்றும் ரகசிய நடவடிக்கை குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை. பொதுவாக இத்தகைய ரகசிய ஊடுருவல்கள் வெற்றியடைந்தாலோ அல்லது இலக்கு எட்டப்பட்டாலோ மட்டுமே இஸ்ரேல் அதனை உறுதிப்படுத்தும். லெபனான் எல்லைக்குள் ஹெலிகாப்டர்களை தரையிறக்கி சோதனை நடத்துவது என்பது சர்வதேச விதிகளுக்கு புறம்பானது என லெபனான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவின் திசையிலிருந்து ஹெலிகாப்டர்கள் வந்திருப்பது, இந்த போரில் அண்டை நாடுகளின் வான்பரப்பும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.

நபி சிட் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை அழிப்பதற்கான ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வரும் மோதல், தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் பரவியுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வான்வழி தாக்குதலால் பல வீடுகள் மற்றும் பொதுக்கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன, இது அந்த பகுதி மக்களிடையே பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி என்பது தற்போதைக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. ஒருபுறம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான நேரடி மோதல் முற்றி வரும் வேளையில், மறுபுறம் லெபனான் எல்லையில் இஸ்ரேல் தனது தாக்குதல் வேகத்தை அதிகரித்துள்ளது. மாயமான தனது வீரரை தேடுவது என்ற காரணத்தை சொல்லி நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள், ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் அரசுக்கு விடுக்கும் நேரடி எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தக்கூடும் என்பதால் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.