சரணடையுங்கள், இல்லையே மரணம் உறுதி.. ஈரான் ராணுவத்திற்கு டிரம்ப் எச்சரிக்கை.. சரணடைவதா? அது எங்கள் வரலாற்றிலேயே இல்லை.. ஈரான் பதிலடி? 6 நாள் போரில் ஈரானுக்கு பாதிப்பு அதிகம் என்றாலும் அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் சேதம் அதிகம்.. மற்ற நாடுகள் போல் ஈரானை அவ்வளவு எளிதில் அமெரிக்கா கட்டுப்படுத்த முடியாது.. ஒரு வல்லரசும், அதன் நட்பு நாடுகளும் சேர்ந்து ஒரு ஈரானை ஜெயிக்க முடியவில்லை என்றால் ஈரானின் பலம் எவ்வளவு என்பதை யோசிக்க வேண்டும்..!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானிய ராணுவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. ஈரானிய புரட்சிகர காவல்படை , ராணுவம்…

iran vs trump1

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானிய ராணுவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.

ஈரானிய புரட்சிகர காவல்படை , ராணுவம் மற்றும் காவல்துறை ஆகிய பிரிவினர் உடனடியாக தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்களுக்கு உறுதியான மரணம் காத்திருப்பதாகவும் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். உயிரிழந்த அயதுல்லா அலி காமேனிக்கு நேர்ந்த கதியையே ஈரானிய படையினரும் சந்திக்க நேரிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானியப் படையினர் இப்போதாவது எழுந்து நின்று தங்கள் நாட்டு மக்களுக்காக நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு சரணடைபவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் முழுமையான மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

ஆனால் டிரம்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஈரான் தனது வரலாற்றிலேயே மிக கடுமையான தாக்குதலை இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மீது நடத்தியது. நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தனது அண்டை நாடுகளை அச்சுறுத்திய ஈரான், அமெரிக்கா தனது போர்க்கப்பலை தாக்கியதற்காக விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சபதம் செய்தது. இந்த தாக்குதல்களின் விளைவாக சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மற்றும் அபுதாபியின் யாஸ் மெரினா பகுதிகளில் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. குறிப்பாக அபுதாபியில் நடந்த தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இந்த ஆக்ரோஷமான நகர்வுகள் பிராந்தியத்தில் இன்னும் பல நாடுகளைப் போருக்குள் இழுக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளன.

வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், ஈரான் இப்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் எந்த பயனும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஈரானிய தரப்பிலிருந்து ஒப்பந்தம் செய்யக் கோரி அழைப்புகள் வருவதாகவும், ஆனால் இப்போது அதற்கு ‘காலம் கடந்துவிட்டது’ என்றும் அவர் கூறினார். ஈரானை விட அமெரிக்காவே இப்போது அதிக உறுதியுடன் போரிட விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், உலகம் முழுவதும் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிகள் உடனடியாக தங்கள் பதவிகளை துறந்து விலக வேண்டும் என்றும், வரலாற்றின் சரியான பக்கத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள இதுவே தருணம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ஈரானின் ராணுவ பலம் ஏற்கனவே பெருமளவு சிதைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது உரையில் சுட்டிக்காட்டினார். கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஈரானிய கடற்படையின் 24 கப்பல்கள் அமெரிக்காவால் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஈரானிடம் கடற்படை என்பதே இல்லை என்றும் கூறினார். அதுமட்டுமின்றி, ஈரானிடம் தற்போது விமானப்படையோ அல்லது வான் பாதுகாப்பு அமைப்புகளோ செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்க ராணுவம் தனது இஸ்ரேலிய கூட்டாளிகளுடன் இணைந்து திட்டமிட்ட கால அட்டவணைக்கு முன்னதாகவே எதிரிகளை முழுமையாக தகர்த்து வருவதாகவும், மக்கள் இதுவரை கண்டிராத அளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையும் ஈரானுக்கு எதிரான தனது தாக்குதல்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஈரானிய ஆட்சியையும் அதன் ராணுவ கட்டமைப்பையும் மேலும் சிதைப்பதற்கான நடவடிக்கைகளில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் உறுதிபடக் கூறியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் இடைவிடாமல் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. போரின் தீவிரம் குறையாமல் இரு நாடுகளும் ஆக்ரோஷமாக மோதி கொள்வது மத்திய கிழக்கை ஒரு நிரந்தர பதற்ற நிலையில் வைத்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த போர் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளன. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கை ஈரானின் அதிகார மையத்தை முற்றிலுமாக அகற்றும் வரை ஓயாது என்றே தற்போதைய கள நிலவரங்கள் உணர்த்துகின்றன.