இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட அடுத்த நாளே இன்னொரு கப்பல்.. பெரும் அச்சத்தில் இலங்கை.. மத்திய கிழக்குல ஆரம்பிச்ச நெருப்பு, இப்போ இந்தியப் பெருங்கடல்ல வந்து நிக்குது… இது வெறும் கப்பல் மூழ்கடிப்பு இல்ல, இந்தியா, இலங்கையோட பாதுகாப்பு விஷயம்.. அமெரிக்கா குறி வைக்கும், இஸ்ரேல் வழி காட்டும்… ஆனா இந்திய பெருங்கடல் அமைதியா இருக்குமாங்கிறது இப்போ ஒரு பெரிய கேள்விக்குறி!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்கள் தற்போது இந்திய பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது என்பதும், இதனால் இந்தியா, இலங்கை அரசுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதையும்…

iran warship

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்கள் தற்போது இந்திய பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது என்பதும், இதனால் இந்தியா, இலங்கை அரசுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று ஈரானின் இரண்டாவது போர்க்கப்பல் ஒன்று இலங்கையின் கடல் எல்லை நோக்கி நகர்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நாள், இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானின் போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டு 87 மாலுமிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், தற்போது வரும் புதிய கப்பலும் இலக்காக மாறக்கூடும் என்ற அச்சம் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடையே எழுந்துள்ளது.

இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க, நாட்டின் மூத்த அரசு மற்றும் பாதுகாப்பு தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரானிய போர்க்கப்பலை இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதிக்குமாறு ஈரான் விடுத்துள்ள கோரிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் பேசுகையில், ஈரானின் கப்பல் தற்போது இலங்கையின் கடல் எல்லைக்கு சற்று வெளியே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இக்கப்பலில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

முன்னதாக, காலியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமெரிக்காவின் டார்பிடோ தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ஈரானிய போர்க்கப்பலில் பலியான 87 மாலுமிகளின் உடல்களை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் காலி துறைமுக நகரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று அதிகாலை ஆபத்து கால சமிக்ஞையை அனுப்பிய சிறிது நேரத்திலேயே அந்த போர்க்கப்பல் கடலில் மூழ்கியது. இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் புத்திக சம்பத் கூறுகையில், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பே கப்பல் மூழ்கிவிட்டதாகவும், மாயமான ஏனைய மாலுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த 32 ஈரானிய மாலுமிகள் தற்போது காலி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை மற்றும் அதிரடிப்படையினரின் சிறப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் இவர்களுக்காக தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும், சிலருக்கு எலும்பு முறிவு மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான இந்த போர்க்கப்பல், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த போது தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

ஈரான் இந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், சர்வதேச அளவில் இந்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு இந்த மோதலில் தனது நடுநிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என்று இலங்கை சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஈரானுடன் கொண்டுள்ள வர்த்தக உறவுகள், குறிப்பாக தேயிலை ஏற்றுமதி போன்ற பொருளாதார காரணங்களால் இலங்கை ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது.

இந்தியாவுக்கு அருகில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது பிராந்திய பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒருபுறம் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியின் ராணுவ நடவடிக்கைகள், மறுபுறம் ஈரானின் பாதுகாப்பு கோரிக்கைகள் என இலங்கை ஒரு நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதி ஒரு போர்க்களமாக மாறுவதை தவிர்க்க இலங்கை அரசு சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. அடுத்த சில நாட்களில் ஈரானின் இரண்டாவது கப்பல் குறித்த இலங்கையின் முடிவு, இப்பிராந்தியத்தின் அமைதியை தீர்மானிக்கும் காரணமாக இருக்கும்.