இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல்முறையாக, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானிய போர்க்கப்பலை தாக்கி மூழ்கடித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்திய பெருங்கடலில் சர்வதேச கடல் எல்லைக்குள் பாதுகாப்பாக இருப்பதாக கருதிய ஈரானின் ‘ஐரிஸ் டெனா’ கப்பல், ‘மார்க் 48’ ரக டார்ப்பிடோ மூலம் தாக்கப்பட்டு கடலுக்கு அடியில் அனுப்பப்பட்டுள்ளது. 1945-ஆம் ஆண்டிற்கு பிறகு எதிரி நாட்டின் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஒன்று மூழ்கடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த தாக்குதல் குறித்த வீடியோவை பென்டகன் வெளியிட்டுள்ளது; அதில் கப்பல் பயங்கர வெடிப்புடன் வானத்தை நோக்கி எழும்பி, பின்னர் கடலுக்குள் மூழ்குவது தத்ரூபமாக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்புக்கு அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஈரானின் மிக நவீனமான போர்க்கப்பல்களில் ஒன்றான ‘ஐரிஸ் டெனா’வில் சுமார் 180 ஊழியர்கள் இருந்ததாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், 32 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய கடற்படை இப்போது பாரசீக வளைகுடாவின் அடிப்பகுதியில் ஓய்வெடுக்கிறது என்று ஹெக்செத் தனது உரையில் கிண்டலாக குறிப்பிட்டது போரின் உக்கிரத்தை வெளிப்படுத்துகிறது.
கடந்த 100 மணிநேரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ போர் நடவடிக்கையில், அமெரிக்கா இதுவரை ஈரானில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியுள்ளது. ஈரானின் வான்பரப்பை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள அமெரிக்கா, இப்போது லேசர் மற்றும் ஜிபிஎஸ் மூலம் இயங்கும் துல்லியமான ‘கிராவிட்டி பாம்ஸ்’ குண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது. ஒரு டோமாஹாக் ஏவுகணையின் விலை 20 லட்சம் டாலர்களாக இருக்கும் நிலையில், இந்த வகை குண்டுகள் வெறும் 25,000 டாலர்களில் அதே அளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. தன்னிடம் இத்தகைய குண்டுகளின் இருப்பு எல்லையற்ற அளவில் இருப்பதாக அமெரிக்கா மார்தட்டியுள்ளது.
போர் தொடங்கி ஐந்து நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஈரானில் குறைந்தது 1,045 பேரும், இஸ்ரேலில் 11 பேரும், லெபனானில் 50-க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஆறு அமெரிக்க வீரர்களும் இந்த மோதலில் பலியாகியுள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த போச் சூழலால் சர்வதேச சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக கப்பல்கள் பெரும் அச்சத்தில் உள்ளன. ஈரானின் கடற்படை பலத்தை ஏறக்குறைய அழித்துவிட்டதாகவும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இறுதியாக, அமெரிக்காவின் இந்த தொடர் தாக்குதல்கள் ஈரான் ஒரு நவீன நாடாக செயல்படுவதையே முடக்கி வருகிறது. கடல் மற்றும் ஆகாயம் என இரண்டு வழிகளிலும் ஈரானை பலவீனப்படுத்திய பிறகு, அமெரிக்கா தனது அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. ஈரானின் புதிய தலைமை இந்த நெருக்கடியை எப்படி சமாளிக்கப் போகிறது என்பது உலக நாடுகளிடையே பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இந்த போர் மத்திய கிழக்கின் வரைபடத்தையும், வல்லரசுகளின் ஆதிக்கத்தையும் நிரந்தரமாக மாற்றக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
