isha

விஜய் வெறும் வாக்குகளை உடைக்கும் ஸ்பாயிலரா? இரு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி ஆட்சியில் அமர போகும் சாதனையாளரா? அரசியல் விமர்சகர்களுக்கே புரியாத புதிர்.. கருத்துக்கணிப்பு எடுக்கும் நிறுவனங்களுக்கே பெரும் குழப்பம்.. திமுக, அதிமுக என 2 கட்சிகளின் வாக்குகளையும் சரமாரியாக உடைக்கிறார் விஜய்.. தமிழகம் இதுவரை பார்க்காத ஒரு தேர்தல் தான் 2026..

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னெப்போதும் இல்லாத ஒரு பெரும் மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. சுமார் 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிட பேரியக்கங்களான…

vijay and four

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னெப்போதும் இல்லாத ஒரு பெரும் மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. சுமார் 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிட பேரியக்கங்களான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஒரு மூன்றாவது மாற்றாக உருவெடுத்துள்ளது.

இது வெறும் திரைத்துறையிலிருந்து வந்த ஒரு பொழுதுபோக்கு அலையல்ல என்பதை அக்கட்சியின் சமீபத்திய செயல்பாடுகள் மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக, இன்று சேலத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் பேசிய “அதிகாரப் பகிர்வு” என்ற அறிவிப்பு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு ‘அரசியல் குண்டு’ என வர்ணிக்கப்படுகிறது.

இந்த மாற்றத்தை ஒரு ‘கொரில்லா அட்டாக்’ என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் விஜய்யின் வளர்ச்சியை தீவிரமாகக் கவனித்து வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவெக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களின் ஆதரவு குறித்து ரகசிய கணக்கெடுப்பு நடத்தி வருவது ஆளும் தரப்பிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சென்னையில் இத்தகைய களப்பணிகளில் ஈடுபட்டிருந்த தவெக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், இந்த தேர்தல் களம் வன்முறையை நோக்கியும் நகர்வதை காட்டுகிறது. விஜய்யை பார்த்து திமுகவும் அதிமுகவும் பயப்படுகின்றன என்பது இதன் மூலம் வெளிப்படையாக தெரிகிறது.

வாக்கு வங்கி அரசியலில் விஜய் ஒரு ‘ஸ்பாய்லர்’ ஆக இருப்பார் என்று கணிக்கப்பட்டாலும், அவர் இரு திராவிடக் கட்சிகளின் அடித்தளத்தையுமே அசைத்து பார்க்கிறார். பாரம்பரிய திமுக குடும்பங்களில் உள்ள இளைஞர்களின் வாக்குகள் 10-ல் 7 முதல் 8 வரை விஜய்க்கு செல்ல வாய்ப்பிருப்பதாக தற்போதைய கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் அதிமுகவின் வாக்கு வங்கியிலும் 90 சதவீதத் தாக்கத்தை அவர் ஏற்படுத்துகிறார். இதனை சமாளிக்கத் திமுக அரசு, மகளிர் உரிமை தொகையை முன்கூட்டியே வழங்குதல் மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பு போன்ற அறிவிப்புகளை அவசர அவசரமாக வெளியிட்டு வருவதை, விஜய்யின் செல்வாக்கிற்கு எதிரான ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது.

2026 தேர்தல் களம் என்பது வெறும் தத்துவ மோதல்கள் மட்டுமல்ல, அது வன்முறை மற்றும் அடக்குமுறையையும் சுமந்து நிற்கிறது. 1972-ல் எம்ஜிஆர் அவர்கள் அதிமுகவை ஆரம்பித்தபோது ஏற்பட்ட அதே போராட்ட சூழல் இப்போதும் நிலவுகிறது. தமிழகத்தின் பல மாவட்ட செயலாளர்கள் தங்களது பிராந்திய அதிகாரத்தை தக்கவைக்க தவெகவின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். அடக்குமுறைகள் அதிகரிக்க அதிகரிக்க தான் ஒரு புதிய கட்சி மக்களிடையே தீவிரமான அனுதாபத்தை பெற்று வளரும் என்பது அரசியல் எதார்த்தம். இதற்கு உதாரணமாக, கரூர் மற்றும் சென்னையில் நடந்த சம்பவங்களுக்கு பின் விஜய்க்கான மாஸ் குறையாமல் இன்னும் அதிகரித்து வருவதைக் குறிப்பிடலாம்.

விஜய்யின் பாப்புலாரிட்டி உச்சத்தில் இருந்தாலும், அவர் சில முக்கிய மக்கள் பிரச்சனைகளில் மௌனம் காப்பது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. குறிப்பாக, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையைப் பாதித்துள்ள டிஎன்பிஎஸ்சி TNPSC குளறுபடி விவகாரத்தில் அவர் வெறும் அறிக்கையோடு நின்றிருக்கக் கூடாது என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பு. அதேபோல், “தனித்து நிற்பேன்” என்ற அவரது பிடிவாதம், ஒரு வலுவான கூட்டணியை அமைத்து போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளுக்கு முன்பாக சிறு பின்னடைவாக அமையலாம். தமிழக வரலாற்றில் மெகா கூட்டணி அமைத்தவர்களே கோட்டையை பிடித்துள்ளனர் என்ற எதார்த்தத்தை விஜய் எப்போது உணர்வார் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

இறுதியாக, 2026 சட்டமன்ற தேர்தல் என்பது நான்கு முனை போட்டியாகவே அமையப்போகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக-பாஜக-பாமக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என தேர்தல் களம் சிதறி கிடக்கிறது. வாக்குகள் மூன்றாகவோ அல்லது நான்காகவோ சிதறும்போது, அது ஆளும் கட்சியான திமுகவிற்கே ‘கிளியர் அட்வான்டேஜ்’ ஆக முடியும். எது எப்படியோ, 2026-ல் ஆட்சியை யார் பிடிக்கப் போகிறார்கள் என்பதை விட, யாருடைய வாக்குகளை விஜய் அதிகம் உடைக்கப் போகிறார் என்பதுதான் அந்த வெற்றியாளரை தீர்மானிக்க போகிறது.