தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீதான விமர்சனங்களும் கேலிப் பேச்சுகளும் சமூக வலைதளங்களில் உச்சத்தை எட்டியுள்ளன. “ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் ரசிகன் இருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை இல்லையே” என்ற வாதத்தை விஜய் எதிர்ப்பாளர்கள் முன்வைத்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சிறுவர்களே விஜய்யின் பெரும்பான்மை ரசிகர்கள் என்றும், தேர்தல் நேரத்தில் இவர்கள் ஓட்டு போட முடியாது என்பதால் விஜய்யின் வாக்கு வங்கி வெறும் காகிதப் புலி என்றும் கிண்டல் செய்யப்படுகிறது.
விஜய்யின் அரசியல் வருகை என்பது வெறும் ஆன்லைன் வாக்கெடுப்புகளில் மட்டுமே வெற்றியை தரும் என்றும், நிஜமான வாக்குச்சாவடிகளில் அவருக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பகிரப்படும் மில்லியன் கணக்கான லைக்குகளும், கமெண்டுகளும் வாக்குகளாக மாறாது என்பது இவர்களின் முக்கிய வாதம். “ஆன்லைனில் தேர்தல் நடத்தினால் வேண்டுமானால் விஜய் முதலமைச்சராகலாம்” என்ற இத்தகைய கேலிப் பேச்சுகள் விஜய் ரசிகர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளன.
மறுபுறம், ரஜினி, அஜித், சூர்யா, கார்த்தி போன்ற மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் விஜய்க்கு ஓட்டு போடுவார்களா? என்ற கேள்வியும் வலுவாக எழுப்பப்படுகிறது. சினிமாவில் நிலவும் ரசிகர் மோதல்கள் அரசியலிலும் எதிரொலிக்கும் என்றும், தனது அபிமான நடிகருக்கு போட்டியாக கருதப்படும் விஜய்யை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. குறிப்பாக, சமீபத்தில் மதுரையில் அஜித் ரசிகர்கள் சிலர் “விஜய்க்கு ஓட்டுப் போடாதீர்கள்” என்று பகிரங்கமாக முழக்கமிட்டது இத்தகைய பிம்பத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
ஆனால், இந்தக் கேலி கிண்டல்களுக்கெல்லாம் விஜய் இதுவரை எந்தவொரு நேரடி பதிலையும் அளிக்கவில்லை. மௌனத்தையே ஆயுதமாக கொண்டுள்ள அவர், தனது கவனத்தை முழுமையாக கட்சிப்பணிகள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பதில் செலுத்தி வருகிறார். “விமர்சனங்களுக்கு செயலில் பதில் சொல்வோம்” என்ற அவரது பாணி, அவரது ரசிகர்களிடையே ஒரு பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. சமூக வலைதள கிண்டல்களை பற்றி அவர் கவலைப்படாமல், அடிமட்ட தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
அரசியல் கள எதார்த்தத்தை உற்று நோக்கினால், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்கு பெரிய அளவில் இருப்பதாக சமீபத்திய சில கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 18 வயது பூர்த்தியான லட்சக்கணக்கான இளைஞர்கள் விஜய்யின் புதிய அரசியலை வரவேற்க தயாராக உள்ளனர். “ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு” என்ற பழைய பார்வையை மாற்றி, ரசிகர்களை பொறுப்பான வாக்காளர்களாக மாற்றும் பணியில் தவெக நிர்வாகிகள் ரகசியமாக செயல்பட்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில், மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கூட ஒரு மாற்றத்தை விரும்பி விஜய்யை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பு நம்புகிறது. சினிமாவில் உள்ள போட்டி என்பது வேறு, ஒரு மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் என்பது வேறு என்பதை மக்கள் உணர்ந்து செயல்படுவார்கள் என்பதே தவெகவின் எதிர்பார்ப்பு. விஜய் எதிர்ப்பாளர்களின் இத்தகைய கிண்டல்களுக்கு உண்மையான பதில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அந்த நாளில் தான் தெரியும். அதுவரை இந்தக் ‘கேலி – மௌனம்’ ஆட்டம் தொடரத்தான் செய்யும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

