தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய திருப்பத்தை 2026 சட்டமன்ற தேர்தல் வழங்கப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் தற்போதைய கருத்துக்கணிப்புகள் மூலம் தென்படுகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மாநிலம் முழுவதும் சராசரியாக 20% வாக்குகளை பெறும் என்றும், சென்னை, மதுரை, கோவை போன்ற நகர்ப்புறங்களில் இது 30% வரை உயரக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிரடி வளர்ச்சி, பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க, புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவால் தவெகவின் வாக்கு சதவீதம் மேலும் 10% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். அவ்வாறு நடந்தால், தவெகவின் மொத்த வாக்கு வங்கி 30% முதல் 35% வரை எட்டும். இது நிகழ்ந்தால், தமிழகத்தில் ஒரு புதிய கட்சி ஆட்சியமைப்பது என்பது வெறும் கனவாக இல்லாமல் நிஜமாக மாறக்கூடும். குறிப்பாக, நகர்ப்புறங்களில் நிலவும் ஆளும் அரசுக்கு எதிரான மனநிலை மற்றும் மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக விஜய்யின் பக்கம் திரும்புவது மற்ற கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய கள நிலவரப்படி, எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத ‘தொங்கு சட்டமன்ற’ சூழல் உருவாகவும் அதிக வாய்ப்புள்ளது. திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று அணிகளும் சம பலத்துடன் வாக்குகளை பிரிக்கும்போது, ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை எந்த ஒரு கூட்டணியும் எட்ட முடியாமல் போகலாம். இத்தகைய சூழலில், கூட்டணி கணக்குகள் கைகொடுக்காவிட்டால் தமிழகம் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
நகர்ப்புறங்களில் 30% வாக்குகள் என்பது ஒரு சாதாரண விஷயமல்ல. இது சென்னை மற்றும் கோவை போன்ற மண்டலங்களில் இருக்கும் பல நட்சத்திர தொகுதிகளில் திராவிட கோட்டைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்டது. பாரம்பரியமாக திமுக அல்லது அதிமுக வசம் இருந்த தொகுதிகள், இந்த முறை மும்முனை போட்டியால் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தவெக வசம் செல்ல வாய்ப்புள்ளது. இது தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய ‘எக்ஸ்-பேக்டராக’ மாறி, ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக விஜய்யை உயர்த்தும்.
கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் உண்மையாகும் பட்சத்தில், 2026-ல் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறுவது உலக அதிசயமாக கருதப்படும். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு சினிமா பிரபலம் நேரடியாக வந்து கோட்டையை பிடிப்பது என்பது வரலாற்றில் இடம்பெறும். ஆனால், அதே சமயம் வாக்குகள் சிதறடிக்கப்பட்டால், எந்த முடிவும் எடுக்க முடியாத அரசியல் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டு, ஆளுநர் ஆட்சி அல்லது மறு தேர்தல் என்ற இக்கட்டான சூழலும் உருவாகலாம்.
எது எப்படியோ, 2026 மே மாதம் வெளியாகப்போகும் தீர்ப்பு, தமிழக அரசியலின் டிஎன்ஏவையே மாற்றப்போகிறது என்பது மட்டும் உறுதி. மக்கள் மாற்றத்தை விரும்பி ஒரு கட்சிக்கு முழு அதிகாரம் வழங்குவார்களா அல்லது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஒரு கூட்டணி ஆட்சியை தேர்ந்தெடுப்பார்களா என்பது மில்லியின் டாலர் கேள்வியாக உள்ளது. தற்போதைக்கு, விஜய்யின் தவெக ஒரு ‘புயலாக’ மாறி தமிழக அரசியல் கடலில் பெரிய அலைகளை உருவாக்கி கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

