தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அசுர வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியான திமுக ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற முழக்கத்துடன் 234 தொகுதிகளிலும் தனது பரப்புரை பயணத்தை இப்போதே தொடங்கிவிட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சுழன்று அரசு நலத்திட்டங்களை விளக்கி வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ‘உருட்டுக்களும் திரட்டுகளும்’ என்ற பெயரில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி தோல்விகளை தரவுகளுடன் அம்பலப்படுத்தி வருகிறார். இரு பெரும் திராவிட கட்சிகளின் தொண்டர்களும் களத்தில் உற்சாகமாக வேலை செய்ய தொடங்கிவிட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிலை மட்டும் இன்னும் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
நடிகர் விஜய் தனது அரசியல் வருகையை அறிவித்து நீண்ட நாட்களாகியும், கட்சியின் களப்பணிகள் இன்னும் முழுவேகம் எடுக்கவில்லை என்பது தொண்டர்களிடையே ஒருவித சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் ‘ஒன் மேன் ஆர்மி’யாக தெரிவது எளிது, ஆனால் அரசியல் களத்தில் அடிமட்ட தொண்டன் சுறுசுறுப்பாக இயங்கினால் மட்டுமே வெற்றி சாத்தியம். திமுக, அதிமுக தொண்டர்கள் பூத் கமிட்டி அமைப்பது முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு வரை வேலையை தொடங்கிவிட்டனர். ஆனால், தவெக தொண்டர்களோ தலைமை எப்போது கட்டளையிடும், எப்போது பிரச்சார வாகனத்தின் சக்கரம் சுழலும் என்று தெரியாமல் திக்குமுக்காடி போயுள்ளனர்.
அரசியல் விமர்சகர்களின் பார்வையில், விஜய்யின் இந்த தாமதம் அவருக்கு பின்னடைவையே தரும் என கருதப்படுகிறது. “வெற்றியோ தோல்வியோ சண்டை செய்ய வேண்டும், ஆனால் விஜய் இன்னும் மைதானத்திற்குள்ளேயே வரவில்லை” என்பதுதான் நடுநிலையாளர்களின் விமர்சனமாக இருக்கிறது. குறிப்பாக, பிப்ரவரி 2-ம் தேதி கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவுள்ள சூழலில், இதுவரை ஒரு தெளிவான பிரச்சார வரைபடம் வெளியாகவில்லை. கட்சித் தலைவர் பனையூர் அலுவலகத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கும்போது, எதிரிகள் களத்தில் கோலோச்சுவது தவெகவின் வாக்கு வங்கியை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சமீபகாலமாக விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வெளியீடு மற்றும் சென்சார் பிரச்சனைகளில் அவர் காட்டிய ஆர்வம், அரசியல் களத்தில் பிரதிபலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மாமல்லபுர கூட்டத்தில் அவர் காட்டிய வேகம், அடுத்தடுத்த நாட்களில் தணிந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒருபுறம் அதிமுக தனது கூட்டணியை உறுதிப்படுத்தி, பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து வருகிறது. மறுபுறம் திமுக தனது கூட்டணி பலத்தை மேன்மேலும் மெருகேற்றி வருகிறது. இந்த இரு துருவங்களுக்கு இடையே ‘தனியாக போட்டி’ என்று அறிவித்துள்ள விஜய்க்கு, காலம் பொன் போன்றது என்பதை அவர் உணர வேண்டும்.
தன்னுடைய அரசியல் பயணம் நீண்ட காலத்திற்கானதாக இருக்கும் என்று விஜய் கூறினாலும், முதல் தேர்தலில் அவர் எடுக்கும் மதிப்பெண்களே அவரது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும். தொண்டர்கள் வெறும் ரசிகர்களாக மட்டுமே இருந்தால் போதாது, அவர்கள் அரசியல் வீரர்களாக மாற வேண்டும் என்றால் தலைவன் களத்தில் நிற்க வேண்டும். “கிங்கும் இல்லை, கிங் மேக்கரும் இல்லை” என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் உலவ தொடங்கிவிட்டன. விஜய்யின் அமைதி என்பது புயலுக்கு முன்னால் நிலவும் அமைதியா அல்லது திட்டமிடல் இல்லாத மௌனமா என்பதை அவரது அடுத்தகட்ட நகர்வுகளே முடிவு செய்யும்.
இருப்பினும், தவெக தரப்பிலிருந்து பிப்ரவரி முதல் வாரத்தில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட பிரச்சார தொடக்க விழா நடைபெறும் என்று செய்திகள் கசிந்துள்ளன. இந்த அறிவிப்பு தவெக தொண்டர்களுக்கு சற்று நிம்மதியை தந்தாலும், ஏற்கனவே முன்னிலையில் இருக்கும் திமுக, அதிமுகவை அவர் எப்படி முந்தப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அரசியலில் நேரம் என்பது மிக முக்கியம்; காலம் கடந்து எடுக்கப்படும் முடிவுகள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும், அவை தேர்தல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதே நிதர்சனம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
