தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ வருகை என்பது ஒரு சாதாரண நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், அவருக்கு காத்திருக்கும் சவால்கள் “மரண அடி” என்ற சொல்லுக்கு குறையாதவை என்பதை அரசியல் எதார்த்தங்கள் உணர்த்துகின்றன. இதுவரை திரையில் மட்டுமே சண்டையிட்டு கொண்டிருந்த அவருக்கு, நிஜ அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திமிங்கலங்களின் நேரடி தாக்குதலை எதிர்கொள்வது ஒரு மிகப்பெரிய அக்னி பரீட்சையாகவே அமையும். ஒரே குறிக்கோளுக்காக இரு திராவிட கட்சிகளும் கைகோர்க்காவிட்டாலும், விஜய்யின் வளர்ச்சியை தடுக்க அவை ஒரே நேர்க்கோட்டில் காய்களை நகர்த்தும் என்பதில் ஐயமில்லை. அதிகார பலம், பண பலம் மற்றும் பல ஆண்டு கால கட்டமைப்பு கொண்ட இந்த கட்சிகளை ஒரு புதிய கட்சி எதிர்கொள்வது என்பது “யானை தன் மீது மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு” ஒப்பானது.
விஜய்யின் மௌனமும், அவரது நிதானமான அணுகுமுறையும் அவரது ஆதரவாளர்களுக்கு வியூகமாக தெரிந்தாலும், அதுவே அவருக்கு பலவீனமாகவும் மாறக்கூடும். பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்தில் கால் பதிக்கத் துடிக்கும் வேளையில், விஜய்யின் வருகை அவர்களது வாக்கு வங்கியை சிதறடிக்கும் என்பதால் அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். விஜய்யின் திரைப்படம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள், மத்திய அமைப்புகளின் சோதனைகள் போன்றவை அவரது அரசியல் பயணத்தை தொடக்கத்திலேயே முடக்க பயன்படுத்தப்படும் கருவிகளாக மாறக்கூடும். அரசியலில் ஒருவரை வீழ்த்த கொள்கைகளை விட, அவரது தனிப்பட்ட பிம்பத்தை சிதைப்பதே தற்போதைய பாணியாக இருப்பதால், அனைத்து பக்கங்களிலிருந்தும் விஜய் மீது விமர்சன கணைகள் பாய தொடங்கும்.
இடதுசாரிகள் முதல் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வரை, விஜய்யின் கொள்கைகளை துளைத்தெடுக்க காத்திருக்கிறார்கள். குறிப்பாக, சீமான் போன்ற தீவிர தமிழ் தேசியவாதிகள், விஜய்யின் “மதச்சார்பற்ற சமூக நீதி” என்ற கொள்கைக்கும், அவரது திரைப்பின்னணிக்கும் எதிராகக் கடுமையான விமர்சனங்களை ஏற்கனவே முன்வைக்க தொடங்கிவிட்டனர். சீமானை பொறுத்தவரை, விஜய் தனது வாக்கு வங்கியை பிரிப்பவராகவே தெரிகிறார். இதனால், ஆளுங்கட்சி ஒருபுறம் என்றால், மாற்று அரசியலை முன்வைக்கும் கட்சிகள் மறுபுறம் என விஜய் ஒரு முக்கோண தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவார். இது ஒருவரை தானாகவே அரசியலை விட்டு ஓட வைக்கும் அளவுக்கு கடுமையான அழுத்தத்தை உருவாக்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் ஒதுங்கியதற்கான மிக முக்கியக் காரணமே, இந்த அரசியல் சேற்றுப் போரை அவர் விரும்பாததுதான். “உடல்நிலை” என்று ஒரு காரணத்தைச் சொன்னாலும், அரசியல் களம் எவ்வளவு அழுக்கானது என்பதும், ஒருவரின் பல கால உழைப்பை அது எப்படி ஒரு நொடியில் அழிக்கும் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ரஜினி பார்த்த அந்த விஸ்வரூபத்தைத்தான் இப்போது விஜய் நேருக்கு நேர் சந்திக்கப் போகிறார். சினிமாப் புகழ் என்பது தேர்தலுக்கு ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கலாமே தவிர, அதுவே வெற்றியைத் தந்துவிடாது என்பதை ரஜினி உணர்ந்திருந்தார். அதே எதார்த்தத்தை விஜய் எப்போது உணரப்போகிறார் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.
அரசியல் என்பது ஒரு சதுரங்க வேட்டை. இதில் ஒரு சின்ன தப்பும் சக்கரவியூகத்தில் சிக்க வைத்துவிடும். விஜய் “அமைதிப் புரட்சி” செய்கிறாரா அல்லது “ஆபத்தை” நோக்கி நடக்கிறாரா என்பது தேர்த்லின்போது தான் தெரியும். மற்ற கட்சிகள் அவரை விமர்சிப்பதன் மூலம் அவருக்கு புகழைத் தரலாம் அல்லது அவரது பிம்பத்தை பாதாளத்திற்கு தள்ளலாம். விஜய்யின் மௌனம் மற்றவர்களை பதற்றமடைய செய்தாலும், அதே மௌனம் அவரது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். திமுக-அதிமுக என்ற இரு பெரும் துருவங்களுக்கு இடையே மூன்றாவது ஒரு சக்தியாக நிலைபெறுவது என்பது சாதாரண காரியம் அல்ல; அதற்கு பெரும் மன உறுதி தேவை.
இறுதியாக, விஜய் அரசியலில் நீடிப்பாரா அல்லது பாதியிலேயே பின்வாங்குவாரா என்பது அவரது தனிப்பட்ட முடிவாக இருந்தாலும், ஒட்டுமொத்த தமிழக அரசியலும் அவருக்கு எதிராக திரும்பும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. “மரண அடி” என்பது அவரது அரசியல் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கு அமையலாம். இருப்பினும், விஜய் தனது சினிமா பாணியிலேயே “வெயிட் அண்ட் சீ” என்று காத்திருக்கிறார். அவர் ஒரு வலுவான தலைவராக உருவெடுப்பாரா அல்லது மற்றுமொரு “சினிமா அரசியல்வாதி” என்ற முத்திரையோடு காணாமல் போவாரா என்பதை தீர்மானிக்க போகும் காலம், அவருக்கு மிகவும் சவாலானதாகவே இருக்கப்போகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
