தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு புதுமையான களமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் பெரிய கட்சிகள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக கூட்டணி சேராத சூழல் நிலவுகிறது. அரசியலில் தனிமைப்படுத்தப்படுவது என்பது ஒரு பின்னடைவாக பார்க்கப்பட்ட காலம் மறைந்து, தற்போது அதுவே விஜய்க்கு சாதகமான ஒரு ‘அனுதாப அலையாக’ மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க துடிக்கும் ஒரு இளைஞனுக்கு, நீண்ட காலமாக அதிகாரத்தில் இருக்கும் எந்தவொரு கட்சியுமே கைகொடுக்கவில்லை என்ற எண்ணம் அடித்தட்டு மக்களிடையே ஒரு பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தனிமை என்பது விஜய்யின் பலவீனமாக இல்லாமல், மக்களின் பார்வையில் அது அவரது நேர்மைக்கான அடையாளமாக மாறிவருகிறது. “யார் கைகொடுத்தால் என்ன, நாங்கள் இருக்கிறோம்” என்று மக்கள் முடிவெடுத்து விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் தற்போதைய பலமான இரு திராவிட அணிகளுமே எதிர்பாராத விதமாக ‘ஸ்வீப்’ செய்யப்படும் அபாயம் உள்ளது. தமிழக மக்கள் எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கும் குணம் கொண்டவர்கள். ஜெயலலிதா அல்லது கருணாநிதி போன்ற ஆளுமைகள் தனிமைப்படுத்தப்பட்ட போதெல்லாம் மக்கள் அவர்களுக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியிருக்கிறார்கள். அந்த வரலாறு தற்போது விஜய்யின் விஷயத்திலும் மீள தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் அரசியலை ஒரு புனிதமான சேவையாக பார்க்காமல், பல கட்சிகள் அதனை ஒரு லாபகரமான ‘பிசினஸாக’ மாற்றி கொண்டுள்ளன என்ற கசப்பான உண்மை மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது. தேர்தல் நேரத்து கூட்டணிகள் என்பவை கொள்கை அடிப்படையில் அமையாமல், வெறும் சீட் பங்கீடு மற்றும் பண பலன்களை அடிப்படையாக வைத்தே அமைகின்றன. இத்தகைய சூழலில், விஜய் எந்தவொரு பேரத்திற்கும் இடமளிக்காமல் “தனித்து போட்டி” என்று நிற்பது, அவர் அரசியலை பிசினஸாக பார்க்கவில்லை என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்துள்ளது. இந்த எண்ணம் மக்களிடம் வலுப்பெற்றால், அது பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
விஜய்யை தனிமைப்படுத்துவதன் மூலம் அவரது அரசியல் வாழ்வை முளையிலேயே கிள்ளிவிடலாம் என்று கணக்கு போடும் கட்சிகளுக்கு, மக்களின் அமைதியான புரட்சி ஒரு சரியான பதிலடியாக இருக்கும். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு மூன்றாவது சக்தியை தேடிகொண்டிருந்த நடுநிலை வாக்காளர்களுக்கு விஜய்யின் இந்த தன்னிச்சையான முடிவு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மற்ற கட்சிகளின் தயவின்றி அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரது ஆளுமையை வளர்ப்பதோடு, இளைஞர்களிடையே ஒரு மாபெரும் ஈர்ப்பை உண்டாக்கியுள்ளது. கூட்டணி பலத்தை விட மக்கள் பலமே ஒரு தலைவனை அரியணையில் ஏற்றும் என்பதை 2026 தேர்தல் நிரூபிக்கக்கூடும்.
குறிப்பாக, தமிழகத்தின் கிராமப்புறங்களில் “நம்ம பையன் தனியா நிக்கிறான், அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம்” என்ற பேச்சுக்கள் இப்போதே எழ தொடங்கியுள்ளன. கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இருக்கும் கட்சிகள், மக்களின் இந்த மனமாற்றத்தை கவனிக்க தவறிவிடுகின்றன. அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்றாலும், மக்களின் உணர்ச்சிகளை சரியாகப் புரிந்துகொண்டு நகரும் தலைவனே வெற்றி பெறுகிறான். விஜய் மீது தொடுக்கப்படும் அரசியல் ரீதியான விமர்சனங்களும், அவரை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் உண்மையில் அவருக்கு தெரியாமலேயே ஒரு மாபெரும் மக்கள் ஆதரவை திரட்டி கொடுத்து கொண்டிருக்கின்றன.
இறுதியாக, 2026-ஆம் ஆண்டு மே மாதம் வெளிவரும் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொடுக்கும். “கூட்டணி இல்லை என்றால் வெற்றி இல்லை” என்ற பழைய அரசியல் சூத்திரத்தை விஜய் தகர்க்கப் போகிறாரா அல்லது பழைய கட்சிகளே மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா என்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, விஜய்யை நோக்கி வீசப்படும் கற்களே அவருக்கு ஒரு பாதுகாப்பான கோட்டையை கட்டி தருகின்றன. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணி; மக்கள் மாற்றத்தை விரும்பினால், எந்தவொரு பெரிய கூட்டணியும் அந்த அலைக்கு முன்னால் நிற்க முடியாது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
