தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டையை அசைத்துப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளன.
குறிப்பாக, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான இந்த கூட்டணியில், ஒருகாலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் எதிரியாக பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்திருப்பது ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்புமுனையாக கருதப்படுகிறது. வரும் ஜனவரி 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் திரள வேண்டும் என்ற மோடியின் கண்டிப்பான உத்தரவு, பிரிந்து கிடந்த தலைவர்களை ஒன்றிணைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது கடந்த கால கசப்புகளை ஓரம் தள்ளிவிட்டு, டிடிவி தினகரனை வரவேற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டது, அடிமட்ட தொண்டர்களிடையே ஒரு புதிய எழுச்சியையும் இணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மெகா கூட்டணியை உருவாக்குவதில் திரைக்கு பின்னால் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தமிழக அரசியலை நன்கு அறிந்த பியூஷ் கோயல், தனது அந்தஸ்தை பாராமல் ஒவ்வொரு கட்சி தலைவரிடமும் இறங்கி சென்று பேச்சுவார்த்தை நடத்தி, முரண்பாடுகளை களைந்துள்ளார். அதேபோல், அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே ஒரு பாலமாக அண்ணாமலை செயல்பட்டு, டிடிவி தினகரன் போன்ற அனுபவம் மிக்க தலைவர்களின் வியூகங்கள் திமுகவை வீழ்த்த அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகும் அதிமுக நூறாண்டு காலம் ஆள வேண்டும் என்று விரும்பிய அந்த லட்சியத்தை நனவாக்க, தற்போதைய சூழலில் ஒற்றுமையே ஒரே வழி என்பதை உணர்ந்து இத்தலைவர்கள் கைகோர்த்துள்ளனர்.
திமுக கூட்டணியை பொறுத்தவரை, கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒரே கட்சிகள் அங்கேயே நீடித்து வருவதால், மக்களிடையே ஒருவித சலிப்பு ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள், விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, மற்றும் மதுரையில் எல்ஐசி அதிகாரி எரித்து கொல்லப்பட்ட கொடூரம் போன்ற சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு குரல் கொடுக்கத்தவறிவிட்டதாக தவெக மற்றும் அதிமுக தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, திருமாவளவன் தலைமையிலான விசிக தொண்டர்களில் பலர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி நகர தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியின் வாக்கு வங்கி என்பது வெறும் காகித அளவிலான பலமாகவே மாறி வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தனித்த அடையாளம் இன்றி திமுகவின் நிழலிலேயே இருக்கும் இக்கட்சிகளுக்கு தமிழகம் முழுவதும் வலுவான கட்டமைப்பு இல்லை என்பதே எதார்த்தமான உண்மை.
கூட்டணி பலத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் தமிழகம் முழுவதும் வலுவான பூத் கமிட்டி கட்டமைப்பை கொண்டுள்ளன. பாமக வட மாவட்டங்களிலும், அமமுக தென் மாவட்டங்களிலும், பாஜக நகர்ப்புறங்களிலும் என ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியான வாக்கு வங்கிகள் இருப்பதோடு, 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு சாவடிகளில் இவர்களுக்கென்று தனி முகவர்கள் உள்ளனர். விஜய் அல்லது சீமான் போன்ற தலைவர்கள் இன்னும் தமிழகம் முழுவதும் முழுமையான பூத் கமிட்டிகளை அமைக்காத நிலையில், அதிமுக கூட்டணியின் இந்த அடிமட்ட பலம் திமுகவிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் அதிமுக தொண்டருடன் பாஜக, பாமக மற்றும் அமமுக தொண்டர்கள் இணையும்போது, அந்த பலம் திமுகவின் பண பலத்தையும் ஊடக வலிமையையும் முறியடிக்க போதுமானதாக இருக்கும்.
தேமுதிகவை பொறுத்தவரை, பிரேமலதா விஜயகாந்த் தற்போது திமுகவிற்கு எதிரான ஒரு கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். கடலூரில் அவர் நடத்திய மாநாடு அந்த கட்சிக்கு இன்னும் வாக்கு வங்கி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நிர்வாகிகளிடையே சில முரண்பாடுகள் இருந்தாலும், தேமுதிக தொண்டர்கள் இயல்பாகவே திமுக எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் என்பதால், அவர்களும் இறுதியில் அதிமுக கூட்டணியிலேயே இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜான் பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களின் வரவும் இந்தக்கூட்டணியைச் சமூக ரீதியாகவும் பலப்படுத்தியுள்ளது.
இறுதியாக, எடப்பாடி பழனிசாமி ஒரு ஜனநாயகவாதியாக தன்னை முன்னிறுத்தி, மற்ற கட்சிகளை அரவணைத்து செல்வது 2026 தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். “இனி ஜென்மத்திற்கும் திமுக ஆட்சிக்கு வர முடியாது” என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ள இந்த கூட்டணி, மக்களின் ஆதரவை பெறுவதில் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு சிலையாக செதுக்குவது போல, ஒவ்வொரு கட்சியாக இணைந்து ஒரு பிரம்மாண்டமான அரசியல் கட்டமைப்பை எடப்பாடி உருவாக்கியுள்ளார். வரும் நாட்களில் மற்ற சிறு கட்சிகளும் இக்கூட்டணியில் இணையும்போது, திமுகவின் தேர்தல் வியூகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும். தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
