சர்வதேச சந்தையில் வெள்ளி உலோகத்திற்கான இருப்பு வேகமாக குறைந்து வருவதாகவும், உலகளவில் கிடைக்கும் பெரும்பாலான வெள்ளியை இந்தியா ஒட்டுமொத்தமாக தன்வசப்படுத்தி வருவதாகவும் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் ஒரு விவாதம் எழுந்துள்ளது.
வரலாற்று ரீதியாக தங்கம் மட்டுமே பாதுகாப்பான முதலீட்டு சொத்தாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வெள்ளியின் முக்கியத்துவம் அதன் தொழில்துறை பயன்பாட்டால் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தங்கம் பெரும்பாலும் வங்கி பெட்டகங்களில் முடங்கி கிடக்கும் சூழலில், வெள்ளி என்பது தொழில்துறை, தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்களில் ஒரு நுகர்வு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மதிப்பு தங்கத்தை விடக் குறைவு என்பதால், இதனை முழுமையாக மறுசுழற்சி செய்வதில் உள்ள சிரமங்கள் வெள்ளியின் கையிருப்பு குறித்த கவலையை உலக நாடுகளில் அதிகரித்துள்ளது. நவீன உலகில் வெள்ளி என்பது வெறும் விலைமதிப்பற்ற உலோகம் மட்டுமல்ல, அது ஒரு முக்கியமான ‘தொழில்துறை உலோகம்’ என்ற புதிய அடையாளத்தை பெற்றுள்ளது.
வெள்ளியின் உற்பத்தி மற்றும் தேவைக்கு இடையிலான இடைவெளி என்பது மிகவும் சிக்கலானது, ஏனெனில் உலகளவில் 70 சதவீத வெள்ளி மற்ற உலோகங்களின் சுரங்க பணிகளின் போது ஒரு துணை பொருளாகவே கிடைக்கிறது. எனவே, தேவை அதிகரிக்கும் போது வெள்ளியின் உற்பத்தியை உடனடியாக தன்னிச்சையாக அதிகரிக்க முடியாது. குறிப்பாக, உலகம் தற்போது மேற்கொண்டு வரும் பசுமை எரிசக்தி மாற்றம் வெள்ளியின் தேவையை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
ஒரு ஜிகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு தேவையான சோலார் பேனல்களை தயாரிக்க சுமார் 20 முதல் 25 டன் வெள்ளி தேவைப்படுகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் சூரிய சக்தி இலக்குகளை அடைய ஆண்டுக்கு 1200 முதல் 1500 டன் வெள்ளி தேவைப்படும் சூழலில், மின்சார வாகனங்கள், பாதுகாப்பு உணர்விகள் மற்றும் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களின் தயாரிப்பிலும் வெள்ளியின் பங்கு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
இந்தியாவின் வெள்ளி இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்கள் வியப்பை அளிக்கின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான வெள்ளியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் சுமார் 7.7 பில்லியன் டாலர் மதிப்பிலான வெள்ளி வாங்கப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 129 சதவீத வளர்ச்சியாகும். சில காலாண்டுகளில் இந்த வளர்ச்சி 400 சதவீதத்தைத் தொட்டுள்ளது.
சாதாரணமாக ஆண்டுக்கு 1 முதல் 2 பில்லியன் டாலர்களுக்கு மட்டுமே வெள்ளி இறக்குமதி செய்து வந்த இந்தியா, இப்போது சில மாதங்களிலேயே பல மடங்கு அதிக வெள்ளியை தன்வசப்படுத்துகிறது. இந்திய சந்தையின் சராசரி தேவை 6,000 முதல் 7,000 டன்களாக இருக்கும் நிலையில், தற்போது 15,000 முதல் 20,000 டன் வரை கையிருப்பை குவித்து வருவது இது ஒரு சில்லறை முதலீடு அல்ல, மாறாக ஒரு ‘ஸ்டாக்பைலிங்’ தந்திரம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த மிகப்பெரிய அளவிலான வெள்ளி கொள்முதல் நேரடியாக அரசாங்கத்தால் செய்யப்படாமல், பொதுத்துறை நிறுவனங்கள், பெரிய சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் சோலார் நிறுவனங்கள் மூலமாக ‘அரசு ஆதரவுடன்’ முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு பின்னால் ஒரு முக்கியமான சர்வதேச அரசியல் காரணம் ஒளிந்துள்ளது. தற்போது வெள்ளியின் சுத்திகரிப்பு பணிகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. எதிர்காலத்தில் சீனாவுடன் ஏதேனும் மோதல் போக்கோ அல்லது வர்த்தக கட்டுப்பாடுகளோ ஏற்பட்டால், இந்தியாவின் சோலார் மற்றும் மின்னணு துறைகள் முடங்கிவிட கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
எனவே, விநியோக சங்கிலியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்கவும், சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கவும் இந்தியா முன்கூட்டியே வெள்ளியை சேமித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போன்ற உலக தலைவர்களின் வர்த்தகக் கொள்கை மாற்றங்களும் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குக் காரணமாகின்றன.
மேற்கத்திய நாடுகள் பெரும்பாலும் ‘பேப்பர் சில்வர்’ எனப்படும் காகித அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபடும் நிலையில், இந்தியா நிஜமான ‘ஹார்டு மெட்டல்’ எனப்படும் நேரடி வெள்ளியை வாங்குவதில் கவனம் செலுத்துகிறது. தங்கம் வாங்கும் போது சர்வதேச நாடுகளின் கவனம் உடனடியாக திரும்பும் என்பதால், ‘சைலண்ட் டி-ரிஸ்கிங்’ முறையில் வெள்ளியை சேமிப்பதன் மூலம் டாலருக்கு நிகரான ஒரு வலுவான இருப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. இதற்காக பெரு, சிலி போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா கொண்டுள்ள நிதி மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்கள் சீனாவை சார்ந்திருக்காமல் வெள்ளியை பெறுவதற்கு பெரும் உதவியாக இருக்கின்றன. இது வெறும் லாப நோக்கத்திற்காக செய்யப்படும் முதலீடு அல்ல, மாறாக இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தேவையைப் பாதுகாக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகும்.
இறுதியாக, வெள்ளியை ஒரு செயல்பாட்டு இருப்பு மதிப்பாக இந்தியா மாற்றியுள்ளது. எதிர்காலத்தில் எரிசக்தி உபகரணங்களுக்கான வர்த்தக பேச்சுவார்த்தைகள் அல்லது அவசரகால கொடுப்பனவுகளின் போது வெள்ளியை ஒரு பிணையமாகவோ அல்லது பண்டமாற்று பொருளாகவோ பயன்படுத்த முடியும். பெட்ரோலிய பொருட்களின் மீதான சார்பை குறைத்து மின்சார மயமாகும் பாதையில் இந்தியா பயணிக்கும் போது, வெள்ளி இல்லாமல் அந்த இலக்கை அடைய முடியாது என்பதை தலைவர்கள் உணர்ந்துள்ளனர். சர்வதேச சந்தையில் வெள்ளியின் தட்டுப்பாடு வரும்போது பிற நாடுகளிடம் கையேந்தாமல் இருக்க, இப்போதே உலக தட்டுகளில் உள்ள வெள்ளியை இந்தியா காலி செய்து வருகிறது. இது ஒரு சிறந்த பொருளாதார உத்தியாக பார்க்கப்படுகிறது, இது வரும் காலங்களில் இந்தியாவின் விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
