இந்திய வங்கிகளின் கடன் வழங்கல் வரலாற்றில் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான புள்ளிவிவரங்களின்படி, மொத்த கடன் தொகை முதல் முறையாக 200 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, 203.2 லட்சம் கோடி ரூபாயை எட்டி ஒரு புதிய மைல்கல்லை படைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 20.78 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் 13.18 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய பாய்ச்சலாகும். இந்தியர்கள் முன்பை விட அதிக அளவில் கடன் வாங்குவதை நோக்கிய இந்த மாற்றம், நாட்டின் பொருளாதார போக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக கருதப்படுகிறது.
இந்த அதீத கடன் வளர்ச்சியில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது ‘பிணையில்லா கடன்கள்’ ஆகும். கடந்த இருபது ஆண்டுகளில் இத்தகைய கடன்களின் பங்கு வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையின்படி, 2005ஆம் நிதியாண்டில் வெறும் 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பிணையில்லா கடன்கள், 2025-ஆம் நிதியாண்டில் 46.9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, மொத்த வங்கி கடன்களில் இத்தகைய பாதுகாப்பற்ற கடன்களின் பங்கு 17.7 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது பொருளாதார நெருக்கடி காலங்களில் வங்கி அமைப்பின் நிலைத்தன்மை குறித்த கவலையை தூண்டியுள்ளது.
இத்தகைய கடன்கள் இந்தியா முழுவதும் பரவலாக இல்லாமல், சில குறிப்பிட்ட பெருநகரங்களில் மட்டுமே குவிந்துள்ளன. குறிப்பாக, மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மட்டும் நாட்டின் மொத்த பிணையில்லா கடன்களில் 21 சதவீதத்தை கொண்டுள்ளன. அதனை தொடர்ந்து டெல்லி மற்றும் குருகிராம் 12 சதவீதமும், பெங்களூரு 4.36 சதவீதமும், சென்னை 3.73 சதவீதமும் பங்களிப்பு செய்கின்றன. நுகர்வோர் கலாச்சாரம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறைக்கு தேவையான நிதி தேவைகளுக்காக துரித கடன்களை பெறுவதில் பெருநகர மக்கள் காட்டும் ஆர்வமே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்தியர்கள் ஏன் அதிக கடன் வாங்குகிறார்கள் என்பதை பகுப்பாய்வு செய்தால், வீட்டுக் கடன்கள் அனைத்து துறைகளையும் விட முதலிடத்தில் உள்ளன. இதன் மதிப்பு சுமார் 42.1 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, வாகன கடன்கள் ஆண்டுக்கு 15 சதவீதம் வளர்ந்து 9.5 லட்சம் கோடி ரூபாயை தொட்டுள்ளன. தனிநபர் கடன்கள் 9 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன. மேலும், இன்றைய டிஜிட்டல் உலகில் ஃபின்டெக் நிறுவனங்கள் வழங்கும் கடன்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை எவ்வித பிணையமும் இல்லாத கடன்களாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி தனது நிதி நிலைத்தன்மை அறிக்கையில் இத்தகைய வேகமான கடன் வளர்ச்சியை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. உயர்தர கடன் வாங்குபவர்களே இப்போதும் பிணையில்லா கடன்களை பெறுவதில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது ஒரு ஆறுதலான விஷயமாக இருந்தாலும், வங்கியியல் அமைப்பில் அபாயங்கள் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் சுமார் 6.14 லட்சம் கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளதாக அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது இறுதியில் வரி செலுத்தும் சாமானிய மக்களின் சுமையாகவே மாறும் அபாயம் உள்ளது.
கடன் வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபுறம் பொருளாதார வளர்ச்சிக்கான அடையாளமாக காட்டப்பட்டாலும், மறுபுறம் இது ஒரு ‘கடன் பொறி’ நோக்கிய பயணமா என்ற கேள்வியும் எழுகிறது. வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு, நிலையான வருமான உயர்வு மற்றும் குறைவான கடன் நிலுவை தவறுகள் இருந்தால் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர். வங்கிகளின் ஆரோக்கியத்தை பேணி காப்பதோடு, மக்கள் தங்களின் திருப்பி செலுத்தும் திறனுக்கேற்ப கடன் வாங்குவதே நீண்டகால பொருளாதார சமநிலைக்கு உகந்ததாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
