தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், ஒரு மிக முக்கியமான மைல்கல்லாக அமையப்போகிறது. இதுவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களை சுற்றியே சுழன்று வந்த தமிழக அரசியல், தற்போது நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ வருகையால் ஒரு மும்முனை போட்டியாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2016-ல் உருவான மக்கள் நல கூட்டணி ஏற்படுத்திய சலசலப்பை விட, தற்போதைய விஜய்யின் வருகை 10 மடங்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவு விஜய்க்கு இருப்பது, பாரம்பரிய திராவிடக் கட்சிகளுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
திராவிட கட்சிகள் இதுவரை பல மூன்றாவது அணிகளை சந்தித்துள்ளன. ஆனால், அவை அனைத்தும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காணாமல் போயின. ஆனால் விஜய், “ஆட்சியில் பங்கு” என்ற புதிய முழக்கத்தை முன்வைத்து, திமுகவின் “தீய சக்தி” பிம்பத்தையும், ஊழல் குற்றச்சாட்டுகளையும் நேரடியாக தாக்கி வருகிறார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் வெறும் சினிமா கவர்ச்சியை மட்டும் நம்பி இல்லாமல், ஒரு வலுவான கொள்கை ரீதியான கட்டமைப்பை நோக்கி நகர்வதை கண்டு திராவிட கட்சிகள் முதல்முறையாக அச்சமடைந்துள்ளன. குறிப்பாக, திமுகவிற்கு எதிரான வாக்குகளை விஜய் அறுவடை செய்தால், அது அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்ற கவலை அக்கட்சியினரிடையே எழுந்துள்ளது.
விஜய்யின் வருகை தமிழக அரசியலில் ஒரு நீண்ட கால மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். இனி வரும் 15 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மும்முனை போட்டி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாற வாய்ப்புள்ளது. திராவிட அரசியலுக்கு மாற்றாக தேடிக்கொண்டிருந்த நடுநிலை வாக்காளர்கள் மற்றும் திராவிட அதிருப்தியாளர்களுக்கு விஜய் ஒரு நம்பிக்கை கீற்றாக தெரிகிறார். கூட்டாட்சி தத்துவத்துடன் கூடிய சமூக நீதி என்ற விஜய்யின் நிலைப்பாடு, திராவிட கட்சிகளின் பாரம்பரிய வாக்குகளை கவர்வதற்கான ஒரு தந்திரமான உத்தியாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை, ஜெயலலிதாவுக்கு பிறகு ஒரு வலிமையான மக்கள் செல்வாக்குள்ள தலைவர் இல்லாத நிலையில், விஜய்யின் வருகை அந்த இடத்தை சரியாக நிரப்புவதாக தெரிகிறது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் போன்ற மூத்த தலைவர்கள் தவெக-வை நோக்கி ஈர்க்கப்படுவது, அதிமுகவின் வாக்கு வங்கியில் ஒரு மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தும். அதே சமயம், திமுகவின் 50 ஆண்டுகால குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வாக்காளர்களுக்கு, விஜய் ஒரு மாற்று சக்தியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார்.
விஜய்யால் திராவிட கட்சிகளை முழுமையாக வீழ்த்த முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தாலும், அவர் பெரும் வாக்கு சரிவை ஏற்படுத்துவார் என்பது உறுதி. ஒருவேளை தவெக 15 முதல் 20 சதவீத வாக்குகளை பெற்றால் கூட, அது தமிழகத்தின் ஆட்சி அமைப்பை தீர்மானிக்கும் சக்தியாக மாறும். இது ஒரு “தொங்கு சட்டமன்ற” சூழலுக்கு கூட வழிவகுக்கலாம். திராவிட அரசியலில் புரையோடிப்போயுள்ள ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக ஒரு சாமானியனின் குரலாக விஜய் தன்னை முன்னிறுத்துவது அவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
முடிவாக, 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, அது தமிழக அரசியலின் புதிய அத்தியாயத்திற்கான தொடக்கம். திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிருப்தியாளர்களுக்கு முதல்முறையாக கிடைத்துள்ளது. விஜய்யின் மக்கள் செல்வாக்கு வாக்குகளாக மாறுமா அல்லது வெறும் கூட்டத்தோடு நின்றுவிடுமா என்பது 2026 மே மாத முடிவுகளில் தெரிந்துவிடும். ஆனால், இன்று நிலவும் பரபரப்பு தமிழக அரசியல் களம் ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்துகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
