தமிழக அரசியல் களம் 2026-ஐ நோக்கி நகரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அனைத்து கட்சிகளையும் திகைக்க வைத்துள்ளது. லேட்டஸ்ட் கணிப்புகளின்படி, விஜய்யின் வருகையால் எந்த ஒரு குறிப்பிட்ட மண்டலமும் தப்பவில்லை; மாறாக, வட தமிழகத்தில் பாமகவின் வாக்கு வங்கியில் தொடங்கி, கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டை வரை அனைத்து இடங்களிலும் வாக்கு சிதறல்கள் எதிரொலிக்கின்றன. குறிப்பாக, சென்னை, மதுரை, மற்றும் திருச்சி போன்ற நகர்ப்புறங்களில் இளைஞர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக விஜய்யின் பக்கம் சாய்வது, திராவிட கட்சிகளின் பாரம்பரிய ‘கோர்’ வாக்கு வங்கியில் 10% முதல் 15% வரை சரிவை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.
விஜய் வகுத்துள்ள ரகசிய தேர்தல் வியூகம் என்பது வெறும் ‘ஸ்டார் பவர்’ மட்டுமல்ல; அது மிக நுணுக்கமான ஒரு கட்டமைப்பாகும். பூத் கமிட்டிகளை மண்டல வாரியாக தெற்கு, வடக்கு, டெல்டா, கொங்கு என பிரித்து, ஒவ்வொரு பூத் மட்டத்திலும் ஒருவர் விஜய்க்கு விசுவாசமானவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது ரகசிய ஆயுதம் அமைதிப் புரட்சி. அதாவது, மேடைகளில் ஆவேசமாக பேசுவதை விட, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைஞர்கள் மூலமாக அந்த வீட்டின் பெரியவர்களின் வாக்குகளை மாற்றும் ‘உள்நாட்டுப் பிரச்சாரம்’ தான் அவரது பிரதான வியூகம். இதற்காகவே அவர் மிக மூத்த அரசியல் தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் போன்றவர்களின் ஆலோசனைகளையும், தேர்தல் மேலாண்மை நிபுணர்களின் தரவுகளையும் பயன்படுத்தி வருகிறார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளையும் ஒரே நேரத்தில் எதிர்க்கும் துணிவு விஜய்க்கு எதனால் வந்தது என்ற கேள்விக்கு அவரது ‘ன்றாம் வழி சித்தாந்தமே பதிலாக உள்ளது. “திராவிட மாடல்” என்று திமுகவையும், “பாஜகவின் நிழல்” என்று அதிமுகவையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பதன் மூலம், இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு சுத்தமான சக்தியை எதிர்பார்க்கும் நடுநிலை வாக்காளர்களை தன் பக்கம் ஈர்க்கிறார். இந்த இரு கட்சிகளின் மீதும் நிலவும் ‘ஆட்சி எதிர்ப்பு’ மற்றும் ‘அரசியல் சலிப்பு’ ஆகியவற்றை தனக்கான முதலீடாக விஜய் மாற்றியுள்ளார்.
இரு திராவிட கட்சிகளை எதிர்ப்பது கூட சரி தான்.. விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்தபோதும் இதை தான் செய்தார்கள். ஆனால் இரு திராவிட கட்சிகள் மட்டுமின்றி மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் விஜய்க்கு எப்படி ஏற்பட்டது என்பது பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. “பிளவுவாத அரசியல்” என பாஜகவை அடையாளப்படுத்திய விஜய், நீட் தேர்வு முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ வரை மத்திய அரசின் கொள்கைகளை மிக தீவிரமாகச் சாடி வருகிறார். இது அவர் ஒரு ‘பி-டீம்’ என்ற விமர்சனத்தை தகர்ப்பதற்கான உத்தி மட்டுமல்ல, தமிழகத்தின் மாநில சுயாட்சி மற்றும் தமிழ் தேசிய அடையாளத்தை பாதுகாக்கும் ஒரு ‘போராளி’ பிம்பத்தை உருவாக்குவதற்கும் உதவுகிறது.
இந்த துணிச்சல் அவருக்கு பின்னால் இருக்கும் மில்லியன் கணக்கான இளைஞர்களின் ஆதரவால் பிறந்தது என்பதே நிதர்சனம். விஜய் பின்னால் இருக்கும் உண்மையான ‘பவர் சென்டர்’ எது என்ற கேள்விக்கு விடை – அது எந்த ஒரு தனி நபரல்ல, மாறாக அவர் உருவாக்கியுள்ள ‘டிஜிட்டல் மற்றும் களப்பணி ஒருங்கிணைப்பு. திரைக்குப் பின்னால் மிக வலுவான ஒரு சட்ட வல்லுநர்கள் குழு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த தேர்தல் உத்தியோகஸ்தர்கள் இயங்கி வருகின்றனர். நிதி ஆதாரங்களை பொறுத்தவரை, அவர் திரையுலகில் ஈட்டிய வருவாய் மற்றும் வெளிப்படையான உறுப்பினர் சந்தாக்கள் மூலமே தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளார். எந்த ஒரு பெரிய சக்தியிடமும் அடகு போகாமல் தனித்து நிற்பதுதான் அவரது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
முடிவாக, 2026 தேர்தல் என்பது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ‘டிஸ்ரப்டர்’ ஆக விஜய் இருப்பதை உறுதி செய்கிறது. இரு திராவிட கட்சிகளும் இத்தனை காலம் பயன்படுத்தி வந்த அதே வியூகங்களை அவர்களுக்கு எதிராகவே அவர் திருப்பி விட்டுள்ளார். மக்களின் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதையும், ஊழலையும் தன் பிரதான ஆயுதமாக ஏந்தி அவர் நடத்தும் இந்த போர், தமிழகத்தின் 60 ஆண்டு கால அரசியல் வரலாற்றை மாற்றியமைக்கக் கூடியது. இந்த மும்முனை போட்டியில் வெற்றி யாருக்கு என்பது புதிராக இருந்தாலும், அரசியல் அதிகாரத்தின் மையம் இப்போது ஒரு புதிய திசையை நோக்கி நகர தொடங்கியுள்ளது என்பது மட்டும் உறுதி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
