மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஒரு திரைப்பட விழாவாக மட்டும் அமையாமல், நடிகர் விஜய்யின் 33 ஆண்டு கால திரைப்பயணத்தின் நெகிழ்ச்சியான விடைபெறுதலாகவும், ஒரு புதிய அரசியல் பயணத்தின் தொடக்கமாகவும் அமைந்தது.
புக்கிட் ஜலீல் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ‘தளபதி’ என்று முழக்கமிட்டபடி உணர்ச்சி வசப்பட, இசை மற்றும் கரகோஷங்களுக்கு இடையே மேடை ஏறிய விஜய், “என் நெஞ்சில் குடியிருப்பவர்களே” என்று தனது வழக்கமான பாணியில் உரையை தொடங்கினார்.
உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும், இலங்கைக்கு அடுத்தபடியாக தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, தமிழ்நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இன்றும் உயிர்ப்புடன் வைத்திருப்பதை கண்டு அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.
தன்னுடைய திரைப்பயணத்தின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் முக்கியத்துவத்தை பகிர்ந்த விஜய், திரையுலகில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் மற்றும் அவமானங்களை பற்றி வெளிப்படையாக பேசினார். தான் ஒரு கடற்கரையோரம் மணல் வீடு கட்டவே ஆசைப்பட்டதாகவும், ஆனால் ரசிகர்கள் அதனை ஒரு மாபெரும் மாளிகையாக மாற்றி தந்துவிட்டதாகவும் அவர் நெகிழ்ந்து கூறினார். கடந்த 33 ஆண்டுகளாக தியேட்டர்களில் தனக்காக காத்திருந்த ரசிகர்களுக்காக, அடுத்த 30 ஆண்டுகளை அவர்களின் வீட்டு பிள்ளையாக இருந்து பணியாற்றுவதற்காகவே சினிமாவிலிருந்து விலகி மக்கள் பணிக்கு வருவதாக அவர் ஒரு வலிமையான அரசியல் செய்தியை முன்வைத்தார்.
தனது உரையின் ஒரு பகுதியாக அவர் சொன்ன ‘ஆட்டோக்காரர் மற்றும் கொடை’ பற்றிய குட்டி கதை, உதவி செய்யும் பண்பு ஒரு சங்கிலி தொடர் போல எப்படி மீண்டும் உதவி செய்தவருக்கே வந்து சேரும் என்பதை அழகாக விளக்கியது. “முடிந்தவரை எல்லோருக்கும் சின்ன சின்ன நல்லது செய்யுங்கள், வாழ்க்கை ஜாலியாக இருக்கும்” என்று அறிவுறுத்திய அவர், பிறரை பழிவாங்குவதை விட மன்னிப்பதே வாழ்நாள் முழுதும் நிம்மதியை தரும் என்று குறிப்பிட்டார். வெள்ளத்தில் தவிப்பவருக்கு படகு கொடுத்தால், அது பாலைவனத்தில் நாம் தவிக்கும்போது ஒட்டகமாக வந்து நிற்கும் என்ற தத்துவத்தின் மூலம், நாம் செய்யும் நன்மைகள் எதிர்காலத்தில் நிச்சயம் கை கொடுக்கும் என்பதை ஆழமாக பதிவு செய்தார்.
தொழில்நுட்ப கலைஞர்களை பற்றி பேசும்போது, இசையமைப்பாளர் அனிருத்தை ‘மியூசிக்கல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்’ என்று வர்ணித்தார். அனிருத்தின் இசையில் எப்போதுமே அன்லிமிடெட் மேஜிக் இருக்கும் என்று பாராட்டிய அவர், இயக்குனர் வினோத்தின் சமூக பொறுப்புணர்வையும், வில்லனாக நடித்த பாபி தியோலின் திரை இருப்பையும் சிலாகித்தார். குறிப்பாக, நடிகர் பிரகாஷ்ராஜுடன் தனக்கு இருக்கும் ‘கெமிஸ்ட்ரி’ கில்லி மற்றும் போக்கிரி காலத்திலிருந்தே தொடர்வதையும், இந்த திரைப்படத்திலும் அது சிறப்பாக அமைந்திருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். தயாரிப்பாளர் கே.வி. பிரசாத், தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகும் எவ்வித தயக்கமும் இன்றி படத்தை தயாரித்ததற்கு அவர் தனிப்பட்ட முறையில் நன்றி கூறினார்.
அரசியல் களத்தில் தன்னை சுற்றி எழும் கேள்விகளுக்கு பதிலளித்த விஜய், “நான் எப்போதுமே தனியாக இல்லை, கடந்த 33 ஆண்டுகளாக மக்களுடன்தான் இருக்கிறேன்” என்று தெளிவுபடுத்தினார். வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் நாம் எந்தளவுக்கு வலிமையானவர்கள் என்பது தெரியும் என்றும் அவர் கூறினார். பேச்சில் மட்டும் நிப்பாட்டாமல் செயலில் காட்ட வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறிய அவர், 2026-ஐ நோக்கிய தனது இலக்கை ‘கப்பு முக்கியம்’ என்ற நகைச்சுவையான மற்றும் உறுதியான வார்த்தைகள் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்தினார்.
விழாவின் இறுதியில் ரசிகர்களுடனான கேள்வி-பதில் பகுதியில், “தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை – துரோகம்” என்றும், “வெற்றிக்கு தேவை பணிவு, தோல்விக்கு பின் தேவை தொடர் முயற்சி” என்றும் தனது வாழ்வியல் தத்துவங்களை பகிர்ந்து கொண்டார். மைதானமே அதிரும் வகையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டு, “நீ பற்ற வைத்த நெருப்பொன்று ஒளி பிறக்கும்” என்ற வரிகளுடன் விடைபெற்றார். இந்த மலேசிய பயணம் விஜய்யின் திரை வாழ்க்கைக்கு ஒரு கௌரவமான நிறைவாகவும், தமிழக அரசியல் வானில் ஒரு புதிய சூரியன் உதிக்கப்போவதற்கான கட்டியமாகவும் அமைந்தது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
