பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினரும், கோத்தக் மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குநருமான நிலேஷ் ஷா, சமீபத்தில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் இந்தியாவின் தங்கம் குறித்து ஒரு முக்கியமான கட்டுரையை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய தகவல்கள் இதோ:
இந்திய வீடுகளில் சுமார் 35,000 டன் தங்கம் முடங்கி கிடப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் இன்றைய மதிப்பு சுமார் 420 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவின் முறையான நிதி அமைப்புக்கு வெளியே இருக்கும் மிகப்பெரிய சேமிப்பாகும்.
இவ்வளவு பெரிய அளவிலான தங்கம் வீடுகளில் ‘செயலற்ற நிலையில்’ இருப்பதால், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தப் பயனும் அளிப்பதில்லை என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த தங்கத்தை முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்குள் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் என்று அவர் கருதுகிறார். இதற்கு அவர் சில வழிகளையும் முன்வைத்துள்ளார்:
நேரடி மன்னிப்புத் திட்டம்: 30% வரி செலுத்தி தங்கத்தை முறைப்படுத்துவது. ஆனால் இது சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தலாம் மற்றும் மக்களிடம் பணப்புழக்கத்தை குறைக்கலாம் என்று அவரே சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்கக் கடன் : வங்கிகள் மற்றும் NBFC-கள் மூலம் தங்கத்தை அடமானமாக பெற்று கடன் வழங்குவது. இதன் மூலம் தங்கம் தற்காலிகமாக பொருளாதாரத்திற்குள் வரும்.
இந்தத் தங்கத்தை வெளியில் கொண்டு வருவதன் மூலம் அரசாங்கத்திற்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும், வர்த்தகர்களுக்கு நிதி புழக்கம் அதிகரிக்கும் மற்றும் ரூபாய் மதிப்பு வலுப்படும் என்று நிலேஷ் ஷா வாதிடுகிறார்.
ஆனால் அதே நேரத்தில் இந்த கருத்துக்கள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் தங்கத்தை விட்டுக்கொடுத்துவிட்டு அரசாங்கத்தின் காகித பத்திரங்களை ஏற்றுக்கொள்வார்களா என்பது மிகப்பெரிய சவால் என்பதையும் அவர் தனது கட்டுரையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் இந்த கட்டுரையை வைத்து அதிமேதாவிகள் என்று தன்னை தானே சொல்லி கொள்ளும் சிலர், மத்திய அரசு மக்களிடம் இருந்து தங்கத்தை பிடுங்க பார்க்கிறது, தங்கத்தை சேமித்து வைத்தவர்களுக்கு ஆபத்து என்று புரளியை கிளப்பி வருகின்றனர். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் எல்லோரும் தங்கள் தங்கத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூற முடியாது, கூறினாலும் யாரும் தர தயாராக இருக்க மாட்டார்கள். அப்படி இப்படி ஒரு திட்டம் இருந்தாலும், மக்கள் விரும்பினால் கொடுக்கலாம் என்ற ஆப்ஷன் தான் இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
