ரூ.50 லட்சம் தான் பட்ஜெட்.. ரூ.114 கோடி வசூல்.. 2000% லாபம்.. 2025ல் மிகப்பெரிய வசூல் மழை பொழிந்த இந்திய திரைப்படங்கள்..!

2025-ஆம் ஆண்டு இந்திய திரையுலகிற்கு ஒரு பொற்காலமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களும் மொழி சுவர்களை தகர்த்து எறிந்து உலக அளவில் பிரம்மாண்ட வசூலைப்…

2025 entertainment

2025-ஆம் ஆண்டு இந்திய திரையுலகிற்கு ஒரு பொற்காலமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களும் மொழி சுவர்களை தகர்த்து எறிந்து உலக அளவில் பிரம்மாண்ட வசூலைப் பெற்றுள்ளன.

இந்த ஆண்டில் ‘பான்-இந்தியா’ டிரெண்ட் மேலும் வலுவடைந்ததோடு, பல பிராந்திய திரைப்படங்கள் நேரடியாக சர்வதேச பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்தன. அமீர் கான் நடிப்பில் வெளியான ‘ஜாரே ஜமீன் பர்’ திரைப்படம், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் உணர்ச்சிகரமான கதையை மையமாக கொண்டு 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மனதை நெகிழ செய்தது.

அதேபோல் மலயாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ‘எம்புரான்’ திரைப்படம் பெரும் அரசியல் அதிரடி திரைப்படமாக திரையரங்குகளை ஆக்கிரமித்து 260 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து அந்த மொழியின் இரண்டாவது பெரிய வெற்றியாக மாறியது.

தெலுங்குத் திரையுலகில் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’ திரைப்படம், குடும்ப ஆடியன்ஸை கவர்ந்ததன் மூலம் 260 கோடி ரூபாய்களை ஈட்டி அவரது திரைப்பயணத்தில் புதிய சாதனையைப் படைத்தது.

மற்றொரு புறம் பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரின் ‘ஹவுஸ்ஃபுல் 5’ திரைப்படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும், நட்சத்திர அந்தஸ்து காரணமாக 280 கோடி ரூபாய் வசூலை பெற்றது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படம் ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் கதையாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று 295 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

இதே காலகட்டத்தில் மலையாளத்தில் வெளியான ‘லோகா சாப்ட்டர் 1 சந்திரா’ திரைப்படம், தனது தனித்துவமான கற்பனை கதையால் 310 கோடி ரூபாய்களை ஈட்டி மலையாள திரையுலகின் ஆல்-டைம் சாதனைகளை முறியடித்தது.

இந்திய அனிமேஷன் திரைப்பட வரலாற்றில் ‘மஹாவதார் நரசிம்மா’ ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பொதுவாக அனிமேஷன் படங்கள் இந்தியாவில் பெரிய அளவில் வசூலிப்பதில்லை என்ற பிம்பத்தை உடைத்து, இத்திரைப்படம் 325 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

அதேபோல் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்த ‘வார் 2’ திரைப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை மிரள வைத்து 365 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலைப் பெற்றது.

இந்தி திரையுலகில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் அவரது கேரியரிலேயே மிகப்பெரிய வசூல் சாதனையாக உருவெடுத்து 870 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி உலக திரையுலகின் கவனத்தை ஈர்த்தது.

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், அவரது மாறாத திரை வசீகரத்தாலும் அனிருத்தின் துடிப்பான இசையாலும் உலகம் முழுவதும் 518 கோடி ரூபாய் முதல் 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது. கதையில் சில குறைபாடுகள் இருந்தபோதிலும், ரஜினியின் ஸ்டைல் மற்றும் லோகேஷ் கனகராஜின் இயக்கம் உலகளாவிய வசூலுக்கு வழிவகுத்தது.

இதற்கிடையில் பாலிவுட்டில் புதுமுகங்களின் நடிப்பில் வெளியான ‘சையாரா’ என்ற காதல் காவியம் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் பிரபலமாகி 570 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து 2025-ன் டாப் 5 இடங்களுக்குள் நுழைந்தது.

மேலும் மராட்டிய வீரர் சம்பாஜி மகாராஜின் கதையை மையமாகக் கொண்ட ‘சாவா’ திரைப்படம் விக்கி கௌஷலின் அபார நடிப்பால் 800 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டி மெகா ஹிட் ஆனது.

2025-ஆம் ஆண்டின் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக திகழ்ந்தது ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: ஏ லெஜண்ட் சாப்டர் 1’ திரைப்படமாகும். இந்திய பண்பாட்டையும் புராண கூறுகளையும் உள்ளடக்கிய இத்திரைப்படம் உலகளவில் 852 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து முதலிடத்தை பிடித்தது. ஓடிடியில் இது முன்கூட்டியே வெளியாகாமல் இருந்திருந்தால் 1000 கோடி ரூபாய் இலக்கை எளிதில் கடந்திருக்கும் எனத் திரை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்றொரு ஆச்சரியமான வெற்றியாக குஜராத்தி மொழியில் வெளியான ‘லாலோ கிருஷ்ணா சதா சஹா’ திரைப்படம் அமைந்தது. வெறும் 50 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் 114 கோடி ரூபாய்களை வசூலித்து 2000 சதவீதத்திற்கும் மேலான லாபத்தை ஈட்டி இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் 240 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமைந்தது. 2024-ல் வெளியான ‘புஷ்பா 2’ மற்றும் ‘கல்கி’ போன்ற படங்கள் 1000 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், 2025-ல் எந்த ஒரு இந்தியத் திரைப்படமும் அந்த இலக்கை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், 2026-ஆம் ஆண்டு வெளிவரவுள்ள பிரம்மாண்ட படங்களின் வரிசை மீண்டும் இந்திய திரையுலகை 1000 கோடி கிளப்பிற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், 2025-ஆம் ஆண்டு இந்திய திரைப்படங்கள் கதையிலும் வசூலிலும் ஒரு புதிய உத்வேகத்தை பெற்றுள்ளன என்பதில் ஐயமில்லை.