தமிழக அரசியல் வரலாற்றில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொடக்கம் என்பது ஒரு மிகப்பெரிய சூதாட்டமாகவே பார்க்கப்படுகிறது. அவர் முதல்வர் நாற்காலியை பிடிப்பார் அல்லது ஒரு சட்டமன்ற உறுப்பினராக கூட ஆக முடியாமல் படுதோல்வி அடைவார் என இருவேறு துருவ கருத்துக்கள் சமூக வலைதளங்களில் புயலென பரவி வருகின்றன. விஜய்யை பொறுத்தவரை, இது வெறும் அரசியல் பிரவேசம் மட்டுமல்ல; தனது 30 ஆண்டுகாலத் திரை சாம்ராஜ்யத்தையும், ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானத்தையும் பணயம் வைத்து அவர் இறங்கியுள்ள ஒரு ‘செய் அல்லது செத்து மடி’ யுத்தமாகும்.
விஜய் 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிவிட்டால், அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு தமிழக அரசியலில் அவரை அசைக்கவே முடியாது என்ற ஒரு வாதம் வலுவாக உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவராக அவர் உருவெடுப்பார் என்றும், அவரது வருகை திராவிட கட்சிகளின் அரை நூற்றாண்டுகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர். ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டால், அவர் முன்மொழியும் ‘மதச்சார்பற்ற சமூக நீதி’ மற்றும் புதிய நிர்வாக முறைகள் தமிழகத்தின் முகவரியையே மாற்றியமைக்கும் என்பது அவர்களின் கனவாக உள்ளது.
மறுபுறம், ஒருவேளை 2026 தேர்தலில் விஜய் படுதோல்வியை சந்தித்தால் என்ன நடக்கும் என்ற விவாதமும் காரசாரமாக நடைபெற்று வருகிறது. அவர் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை என்றால், அல்லது அவரே ஒரு தொகுதியில் தோற்றுப்போகும் நிலை ஏற்பட்டால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். விஜயகாந்த் போன்ற ஆளுமைகளே ஒரு கட்டத்தில் சறுக்கலை சந்தித்த போது, சினிமாப் புகழை மட்டுமே நம்பி வரும் விஜய், அந்த தோல்வியை தாங்கிக்கொள்வாரா என்ற ஐயம் பலருக்கு உண்டு. தோல்விக்கு பிறகு ஒரு எதிர்க்கட்சி தலைவராகவோ அல்லது சாதாரண அரசியல்வாதியாகவோ நீண்ட காலம் அவரால் களத்தில் இருக்க முடியாது என்பதே விமர்சகர்களின் கணிப்பு.
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், விஜய் தோல்வியைச் சந்தித்தால் 2031-ஆம் ஆண்டு தேர்தல் வரை அவர் பொறுமையாக காத்திருக்க மாட்டார் என்பதுதான். அரசியலில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், அவர் மீண்டும் தனது பழைய இடமான திரையுலகிற்கே சென்று விடுவார் என்று கூறப்படுகிறது. சினிமாவுக்காக அவர் கதவுகளை திறந்து வைத்திருப்பதும், ‘தளபதி 69’ படத்திற்கு பிறகும் அவர் நடிக்கக்கூடும் என்ற வதந்திகளும் இந்த வாதத்திற்கு வலு சேர்க்கின்றன. அரசியலில் தோல்வி அடைந்த ஒரு பிம்பத்தோடு மக்களிடையே இருக்க அவர் விரும்பமாட்டார் என்பதே பலரது எண்ணம்.
இன்னும் சில தீவிரமான வதந்திகள், தோல்வி ஏற்பட்டால் விஜய் ஒட்டுமொத்தமாக அரசியலை விட்டும், இந்தியாவை விட்டும் வெளியேறி வெளிநாடுகளில் செட்டிலாகிவிடுவார் என்று கூறுகின்றன. அவரது குடும்பத்தினர் மற்றும் முதலீடுகள் சில வெளிநாடுகளில் இருப்பதால், அங்கேயே அமைதியான வாழ்க்கையை தொடர அவர் முடிவெடுக்கக்கூடும் என்ற ஊகங்கள் உலவுகின்றன. ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்துவிட்டு, அரசியலில் அவமானத்தையோ அல்லது தொடர் தோல்விகளையோ சந்திக்க அவர் தயங்குவார் என்பதே இத்தகைய தகவல்களுக்கு பின்னணியாக உள்ளது.
எது எப்படியோ, 2026 சட்டமன்ற தேர்தல் என்பது விஜய்க்கு ஒரு ‘அக்னி பரீட்சை’. அவர் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக அரியாசனத்தில் அமருவாரா அல்லது தனது அரசியல் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு மீண்டும் கேமரா முன்னால் திரும்புவாரா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். வெற்றி பெற்றால் அவர் ஒரு ‘புரட்சியாளர்’, தோல்வி அடைந்தால் அவர் ஒரு ‘முயற்சியாளர்’ மட்டுமே. தமிழக மக்களின் தீர்ப்பு விஜய்யின் வாழ்க்கைப் பாதையை மட்டுமல்ல, அவரது இருப்பிடத்தையே மாற்றியமைக்கக் கூடிய வல்லமை கொண்டது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
