2025-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஒரு சவாலான ஆண்டாகவே அமைந்தது. மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் நட்சத்திர பட்டாளங்களுடன் உருவான பல படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி, வசூலில் பெரும் பின்னடைவை சந்தித்தன.
அந்த வரிசையில் முதலாவதாக, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி – நித்யா மேனன் நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ மற்றும் பாலா – அருண் விஜய் கூட்டணியின் ‘வணங்கான்’ ஆகிய படங்கள் பொங்கல் ரிலீஸாக வந்து படுதோல்வி அடைந்தன. குறிப்பாக, ‘காதலிக்க நேரமில்லை’ 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி 20 கோடியை மட்டுமே வசூலித்தது. அதேபோல், நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு வெளியான ‘வணங்கான்’ 22 கோடி பட்ஜெட்டில் 18 கோடியை மட்டுமே பெற்று விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
பெரிய நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியடைந்ததுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அஜித்தின் ‘விடாமுயற்சி’ 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானாலும், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று 188 கோடி வசூலுடன் நஷ்டத்தை சந்தித்தது.
அதேபோல, ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘கூலி’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வி ஆனது. இந்த படத்தால் தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் நஷ்டமில்லை என்றாலும் எதிர்பார்த்த லாபமும் இல்லை.
சூர்யாவின் ‘ரெட்ரோ’ படமும் 65 கோடி பட்ஜெட்டில் ஓரளவு நல்ல தொகை வசூலித்தாலும், சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய வசூல் கிடைக்கவில்லை.
மல் – மணிரத்னம் கூட்டணியின் ‘தக்லைப்’ படமும் 260 கோடி பட்ஜெட்டில் 108 கோடியுடன் சுருங்கி ரசிகர்களின் கேலிக்குள்ளானது.
இளம் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களும் இந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. சிவகார்த்திகேயனின் ‘மதராசி’ 150 கோடி பட்ஜெட்டில் 110 கோடி மட்டுமே வசூலித்தது.
தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்னடி என்மேல் கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்கள் முறையே 12 கோடி மற்றும் 70 கோடி பட்ஜெட்டில் உருவாகி வசூலில் சொதப்பின.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி நடித்த ‘நேசிப்பாயா’ 50 கோடி பட்ஜெட்டில் வெறும் 8 கோடியை மட்டுமே வசூலித்து பெரும் நஷ்டத்தை தந்தது. கவின் நடித்த ‘கிஸ்’ மற்றும் ஜி.வி. பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’ ஆகிய படங்களும் வசூலில் தத்தளித்தன.
இரண்டாம் பாகங்களாக வெளிவந்த பல திரைப்படங்கள் முதல் பாகத்தின் வெற்றியை தக்கவைக்க தவறிவிட்டன. சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’, விமலின் ‘தேசிங்க ராஜா 2’ மற்றும் பிரபு சாலமனின் ‘கும்கி 2’ ஆகிய படங்கள் ரசிகர்களை கவராமல் படுதோல்வி அடைந்தன. ‘தேசிங்க ராஜா 2’ 18 கோடி பட்ஜெட்டில் வெறும் 3 கோடியை மட்டுமே வசூலித்தது ஒரு மிகப்பெரிய டிசாஸ்டர் ஆகும். அதேபோல சுந்தர் சி – வடிவேலு கூட்டணியின் ‘கேங்கர்ஸ்’ திரைப்படமும் 35 கோடி பட்ஜெட்டில் 11 கோடியை மட்டுமே பெற்று ரசிகர்களை ஏமாற்றியது.
மற்றொரு புறம், விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்றாலும் வசூல் ரீதியாக தோற்ற படங்களும் இந்த வரிசையில் உள்ளன. மாரி செல்வராஜின் ‘மாரிசன்’ மற்றும் ராம் இயக்கத்தில் வெளியான ‘பறந்து போ’ ஆகிய படங்கள் நல்ல ரிவ்யூக்களை பெற்றும் திரையரங்குகளில் மக்கள் கூட்டத்தை ஈர்க்கத் தவறின. விக்ரமின் ‘வீரதீர சூரன்’ பல தடைகளை கடந்து வந்தாலும் 60 கோடி பட்ஜெட்டை தாண்டி லாபம் ஈட்ட முடியாமல் தோல்வியடைந்தது. கவுண்டமணியின் மறுவருகையான ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படமும் 12 கோடி பட்ஜெட்டில் 80 லட்சத்தை மட்டுமே வசூலித்து பங்கம் வாங்கியது. 12 கோடி பட்ஜெட்டில் சுமோ மல்யுத்த வீரரை வைத்து எடுக்கப்பட்ட ‘சுமோ’ திரைப்படம் ஒரு கோடி வசூலுடன் இந்த ஆண்டின் மோசமான பிளாப் வரிசையில் இடம்பிடித்தது.
இறுதியாக, 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு பாடம் புகட்டிய ஆண்டாகவே இருக்கிறது. எவ்வளவு பெரிய பட்ஜெட் மற்றும் நட்சத்திரங்கள் இருந்தாலும், கதை மற்றும் திரைக்கதை பலமாக இல்லாவிட்டால் மக்கள் அந்த படங்களை நிராகரிப்பார்கள் என்பதை இந்தத் தோல்விகள் உணர்த்தியுள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
