தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே புதிய கூட்டணி துளிர்விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சி பகிர்வு தொடர்பாக தொடர்ந்து புகைச்சல் நிலவி வரும் சூழலில், காங்கிரஸ் மேலிடம் விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பிரியங்கா காந்தி இந்த விவகாரத்தில் நேரடியாத் தலையிட்டு, விஜய்க்கு ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளதாகவும், அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியங்கா காந்தி விதித்த அந்த ஒரே நிபந்தனை, “தேசிய அளவிலான பாஜக எதிர்ப்பு மற்றும் சித்தாந்த ரீதியான பிரச்சாரத்தை மட்டுமே காங்கிரஸ் முன் வைக்கும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் திமுகவுடன் பல ஆண்டுகள் கூட்டணியில் இருந்துவிட்டு திமுக அரசை விமர்சித்தால், மக்களுக்கு நெருடல் ஏற்படும் என்பதால் திமுகவை பட்டும் படாமல் மட்டும் பிரச்சாரத்தில் விமர்சிப்போம், எங்கள் குறி அதிமுக, பாஜகவை மட்டுமே என கூறியுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், தமிழகத்தில் திமுகவை எதிர்கொள்ளும் முழுப் பொறுப்பையும் வியூகங்களையும் விஜய்யிடமே விட்டுவிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. “தமிழக அரசியல் விவகாரங்களை நீங்கள் கவனித்து கொள்ளுங்கள், தேசிய அளவிலான விவகாரங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த கூட்டணியின் பிரச்சார வியூகம் மிகவும் நுணுக்கமாக திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் இரண்டு வெவ்வேறு கோணங்களில் பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தனது பிரச்சாரத்தை மத்திய அரசின் தோல்விகள், மதச்சார்பின்மை மற்றும் தேசிய நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி மேற்கொள்ளும். அதே நேரத்தில், விஜய் தனது பிரச்சாரத்தை மாநில சுயாட்சி, ஊழல் எதிர்ப்பு மற்றும் திராவிட மாடல் அரசின் மீதான விமர்சனங்களை மையமாக வைத்து முன்னெடுப்பார். இதன் மூலம் இரு கட்சிகளும் வெவ்வேறு தரப்பு வாக்காளர்களை தன்பால் ஈர்க்க முடியும் என பிரியங்கா காந்தி கணக்கு போடுகிறார்.
பிரியங்கா காந்தியின் இந்த வியூகம், திமுகவின் ‘திராவிட மாடல்’ மற்றும் பாஜகவின் ‘தேசிய மாடல்’ ஆகிய இரண்டிற்கும் மாற்றாக ஒரு புதிய அம்சத்தை முன்வைப்பதாக இருக்கும். விஜய்யின் இளைய தலைமுறை வாக்கு வங்கியை பயன்படுத்தி, காங்கிரஸின் பலவீனமான இடங்களை சரிசெய்யவும், அதே நேரத்தில் விஜய்க்கு ஒரு தேசிய கட்சியின் அங்கீகாரத்தை தரவும் இக்கூட்டணி உதவும். இந்த புதிய பிரச்சார முறையானது, பழைய பாணியிலான அரசியல் மேடை பேச்சுகளைத் தாண்டி, நவீனத் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்படும் என கூறப்படுகிறது.
விஜய்யை பொறுத்தவரை, அவர் தனது அரசியல் பயணத்தில் ஒரு தேசிய கட்சியின் ஆதரவை மிக முக்கியமானதாக கருதுகிறார். பிரியங்கா காந்தியின் இந்த நிபந்தனை அவருக்கு ஒரு வகையில் சுமையை குறைப்பதாகவே அமையும். ஏனெனில், தேசிய அளவிலான சிக்கல்களில் சிக்கிக்கொள்ளாமல், தனது முழு கவனத்தையும் தமிழக அரசியலிலும் திமுகவை வீழ்த்துவதிலும் அவர் செலுத்த முடியும். “நாங்கள் உங்களுக்காக டெல்லியில் போராடுகிறோம், நீங்கள் எங்களுக்காக தமிழகத்தில் களமாடுங்கள்” என்ற பிரியங்காவின் வார்த்தைகள் விஜய்க்கு மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளதாக தெரிகிறது.
விரைவில் பிரியங்கா காந்தி தமிழகம் வரவுள்ள நிலையில், விஜய்யுடனான சந்திப்பு மற்றும் அதிகாரப்பூர்வ கூட்டணி அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஒருவேளை இந்த கூட்டணி உறுதியானால், அது தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வரும் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும். விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கும், காங்கிரஸின் பாரம்பரிய வாக்குகளும் இணைந்து 2026 தேர்தலில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
