தமிழக அரசியலில் 2025-ஆம் ஆண்டு பல அதிரடி திருப்பங்கள், புதிய கட்சிகளின் உதயம் மற்றும் எதிர்பாராத மோதல்களுடன் நிறைவடைந்தது. இந்த ஆண்டின் மிக முக்கியமான 10 அரசியல் நிகழ்வுகள் இதோ:
ஆளுநர் உரை மற்றும் வெளிநடப்பு : ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தேசிய கீதத்தை முதலிலேயே பாட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்காததால், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில், திமுக வேட்பாளர் சந்திரசேகர் வெற்றி பெற்றார். சீமானின் ‘பெரியார் குறித்த பேச்சு’ பெரும் விவாதத்தை கிளப்பியது.
தமிழ் ‘ரூ’ சின்னம் மற்றும் தொகுதி மறுவரையறை : தமிழக பட்ஜெட்டில் இந்திய ரூபாயின் குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான ‘ரூ’பயன்படுத்தப்பட்டது. மேலும், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகள் குறைவதை தடுக்க அனைத்து கட்சி குழுவை முதல்வர் ஸ்டாலின் கூட்டினார்.
அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உறுதி : உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள் கைகோர்த்து, 2026 தேர்தலுக்கான கூட்டணியை மீண்டும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.
பாமக பிளவு : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீதான அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியதால் பாமக இரண்டாக பிளந்தது.
மதுரை முருக பக்தர்கள் மாநாடு : இந்து முன்னணி மற்றும் பாஜக முன்னிலையில் நடந்த இந்த மாநாட்டில், திராவிட கொள்கைகளுக்கு எதிரான வீடியோக்கள் திரையிடப்பட்டது மற்றும் அண்ணாமலையின் பேச்சுகள் பெரும் மத ரீதியான விவாதங்களை உருவாக்கின.
மதிமுக பிளவு மற்றும் மல்லை சத்யா நீக்கம்: வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்து, மல்லை சத்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
கரூர் பெருந்துயரம் : தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தின் போது கரூரில் ஏற்பட்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இது தமிழகத்தையே உலுக்கியதுடன், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அக்டோபர் இறுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்தார்.
செங்கோட்டையன் தவெக-வில் இணைவு : அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது மிகப்பெரிய அரசியல் அதிர்வலையாக அமைந்தது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : மசூதி அருகே உள்ள தீபத்தூணில் விளக்கேற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் அதற்கு அரசு தரப்பில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு டிசம்பர் அரசியலை மத ரீதியான பேசுபொருளாக மாற்றியது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
