2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரண்டு அணிகளுமே தங்களது கூட்டணி கட்சிகளின் விசித்திரமான மற்றும் பிடிவாதமான கோரிக்கைகளால் கடும் திணறலுக்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக, விஜயகாந்த் காலத்திற்கு பிறகு தனது செல்வாக்கை தக்கவைக்க போராடும் தேமுதிக, இந்த முறை ராஜ்யசபா சீட் ஒன்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்ற ஒற்றை இலக்கில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. ராஜ்யசபா சீட் கொடுத்தால் எந்த சித்தாந்த வேறுபாடும் இன்றி யார் கூட வேண்டுமானாலும் கைகோர்க்கத் தயார் என்ற தேமுதிகவின் நிலைப்பாடு, திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
மறுபுறம், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, இந்த முறை எக்காரணத்தை கொண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட போவதில்லை என்பதில் மிக உறுதியாக உள்ளது. “சொந்த சின்னமான பம்பரத்தில்தான் நிற்போம்” என வைகோ மற்றும் துரை வைகோ அடம் பிடிப்பது திமுக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தல்களில் கூட்டணி சின்னத்தில் போட்டியிட்டது கட்சியின் தனித்துவத்தை பாதித்துள்ளதாக மதிமுகவினர் கருதுகின்றனர்.
அதேபோல், “நான்தான் உண்மையான பாமக, என்னை தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்” என்று அப்பா ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி உரிமை கோருவதும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கியுள்ளது.
இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு மிகப்பெரிய ஊசலாட்டத்தில் உள்ளது. ராகுல் காந்தியுடன் நெருக்கம் காட்டும் விஜய், தமிழக வெற்றி கழகத்தின் மூலம் காங்கிரஸை ஈர்க்க முயல்கிறார். இதனால் திமுகவா அல்லது தவெகவா என்ற குழப்பத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த முறை வழக்கமான சீட் எண்ணிக்கையை தாண்டி, “ஆட்சியில் பங்கு” என்ற மிக முக்கியமான கோரிக்கையை முன்வைக்க வாய்ப்புள்ளது. இத்தனை காலம் கூட்டணிக்கு விசுவாசமாக இருந்துவிட்டு, இனிமேலும் வெறும் சில தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு ஒதுங்க முடியாது என்பதில் திருமாவளவன் தெளிவாக உள்ளார். “பூனைக்கு மணி கட்டும்” விதமாக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வெளிப்படையாகவே முழங்கி வருகிறார். இது திமுக தலைமையிலான அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பதாக பார்க்கப்படுவதால், திமுக இதனை எப்படி சமாளிக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை, பிரிந்து கிடக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு தரப்பு அழுத்தமும், கூட்டணி கட்சியான பாஜக அதிகப்படியான தொகுதி ஒதுக்கீடு கோரிக்கையும் எடப்பாடி பழனிசாமியை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்க முயன்றாலும், ஒவ்வொரு கட்சியும் தங்களது நிபந்தனைகளை முன்வைப்பதால் பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே நீடிக்கின்றன. குறிப்பாக, தேமுதிக மற்றும் பிற சிறிய கட்சிகளின் ராஜ்யசபா சீட் எதிர்பார்ப்புகள் அதிமுகவின் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது ஒரு இருமுனை போட்டியாக இல்லாமல், தவெக என்ற புதிய வரவால் பலமுனை போட்டியாக மாறியுள்ளது. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரம் கொடுக்க முன்வருமா அல்லது மதிமுகவின் சின்னம் தொடர்பான பிடிவாதத்தை தணிக்குமா என்பது சஸ்பென்ஸாக உள்ளது. அதேபோல், தவெகவின் பக்கம் காங்கிரஸ் சாயும் பட்சத்தில் தமிழக அரசியலின் சமன்பாடுகள் முற்றிலும் தலைகீழாக மாறும்.
ஒட்டுமொத்தத்தில், கூட்டணி கட்சிகளின் அதிரடி நிபந்தனைகள் மற்றும் பிடிவாதமான கோரிக்கைகளால் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் பெரும் அரசியல் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
