ஈரோட்டில் நடைபெற்ற விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு, வெறும் சந்திப்பாக அல்லாமல் ஒரு மாநாடு போன்ற பிரம்மாண்டத்துடன் காட்சியளித்தது. இந்த நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் நிர்வாகத் திறன். ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு பிறகு, இவ்வளவு பெரிய கூட்டத்தை துல்லியமாக திட்டமிட்டு ஆர்கனைஸ் செய்யும் திறமையை செங்கோட்டையன் நிரூபித்து காட்டிவிட்டார். பெரிய மைதானத்தை தேர்வு செய்து, மக்கள் நெரிசலில் சிக்காதவாறு நான்கு பக்கமும் வழிகளை அமைத்து, கூட்டத்தை கட்டுக்கோப்பாக நடத்தியது ஒரு மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் ரசிகர்கள் தற்போது மெதுவாக தொண்டர்களாக மாறி வருவதை காண முடிகிறது. முன்பு குறுகிய இடங்களில் கூட்டம் நடத்தி சிரமப்பட்ட நிர்வாகம், தற்போது திறந்தவெளி மைதானங்களை தேர்வு செய்து முதிர்ச்சியுடன் செயல்படுகிறது. கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒரு லட்சம் பேர் கூடினாலும் நெரிசல் ஏற்படாதது போன்ற ஒரு தெளிவான திட்டமிடல் இந்த ஈரோடு கூட்டத்தில் இருந்தது. எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக செல்ல, விஜய் மாவட்ட வாரியாக தனது பலத்தை காட்டி வருகிறார். ஒரு பெரிய திரை நட்சத்திரத்திற்கான ஈர்ப்பு இங்கு தெளிவாக தெரிந்தது.
அரசியல் கொள்கைகளை பொறுத்தவரை, தவெக இன்னும் ஒரு தெளிவான நிலைப்பாட்டிற்கு வரவில்லை என்ற விமர்சனம் வலுவாக உள்ளது. விஜய் தனது உரையில் பெரியாரின் சமூக நீதியையும், அண்ணாவின் தேர்தல் அரசியலையும், எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கையும் இணைத்து பேசுகிறார்.
பெரியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் கொள்கை ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லை.” பெரியார் கடவுள் மறுப்பாளராக இருக்க, அண்ணா ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார்; எம்ஜிஆர் வழிபாட்டு முறைக்கு மாறினார்; ஜெயலலிதா தீவிர பக்தையாக இருந்தார். இந்த முரண்பட்ட பிம்பங்களை விஜய் எப்படி ஒன்றாக கையாள போகிறார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன், தற்போதும் தனது சட்டைப்பையில் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது. இது அதிமுகவின் வாக்குகளை கவர்வதற்கான ஒரு தந்திரமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களையும், நடுநிலையில் இருப்பவர்களையும் இழுக்கவே அண்ணா மற்றும் எம்ஜிஆரின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பதவி கிடைக்காத காரணத்தால் பிற கட்சிகளில் இருந்து வருபவர்களை விஜய் அரவணைத்து வருகிறார். செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் இணைந்தது தவெகவிற்கு ஒரு பெரிய “லக்கி பிரைஸ்” என்பது உண்மை. ஆனால் அதே நேரத்தில், திமுகவை ‘தீய சக்தி’ என்றும் ‘ஊழல் கட்சி’ என்றும் விமர்சிக்கும் விஜய், இன்னும் மக்கள் மத்தியில் ஒரு தெளிவான தரவை முன்வைக்கவில்லை. உணர்ச்சிப்பூர்வமான வசனங்களை தாண்டி, ஆழமான கொள்கை விவாதங்கள் விஜய் தரப்பிலிருந்து வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
இறுதியாக, விஜய் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. அவர் ஒரு கிங் மேக்கராகவோ அல்லது வாக்குகளை பிரிக்கும் ஒரு ‘ஸ்பாய்லராகவோ’ இருக்க போகிறாரா? அல்லது ஆட்சியை கைப்பற்றுவது அல்லது எதிர்க்கட்சியாக உருவாக போகிறாரா என்பதை இப்போதே கணிப்பது கடினம். ஆனால் தேர்தலுக்கு முன் நிச்சயம் இவற்றுக்கு விடை கிடைத்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
