மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா, தனது தலைமை அதிகாரிகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாற்றத்திற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதே அந்த எச்சரிக்கை. இது ஒரு ஊக்கமளிக்கும் பேச்சு அல்ல, மாறாக ஒரு இறுதி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. பிசினஸ் இன்சைடர் அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட் தலைமைத்துவத்தில் AI மாற்றம் இனி ஒரு விருப்பத்தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயமான தேவையாக மாற்றப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு தலைமுறைக்கான வாய்ப்பாகவும், அதே சமயம் நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் பார்க்கப்படுகிறது. எந்தவொரு தயக்கத்தையும் நிறுவனம் இப்போது பொறுத்துக்கொள்ளாது என்பதில் நாதெல்லா உறுதியாக உள்ளார். இந்த அவசரநிலை நிறுவனத்திற்குள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சத்யா நாதெல்லா தனது பொறுப்புகளை பிரித்து வழங்கிவிட்டு, தொழில்நுட்ப ரீதியான பணிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக ஜட்சன் அல்தாஃப் போன்ற மூத்த அதிகாரிகளை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
நிறுவனத்தின் பல முக்கிய அம்சங்கள் இப்போது திட்டமிட்டு மாற்றப்பட்டு வருகிறது. வாராந்திர AI கூட்டங்களில் உயர்மட்ட அதிகாரிகளை தவிர்த்துவிட்டு, நேரடியாக பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுடன் நாதெல்லா ஆலோசனைகளை நடத்துகிறார். இந்த அமர்வுகள் சற்று குழப்பமாகவும், வேகம் நிறைந்ததாகவும் இருப்பதாக உள்ளே இருப்பவர்கள் விவரிக்கின்றனர். மூத்த தலைவர்கள் வெறும் நிர்வாகிகளாக இல்லாமல், நேரடியாக கோடிங் முறையிலும் வடிவமைப்பிலும் ஈடுபட வேண்டும் என்று நாதெல்லா வலியுறுத்தியுள்ளார்.
சத்யா நாதெல்லா, மாற்றங்களுக்கு ஏற்ப மாறாத காரணத்தால் வீழ்ந்த பெரிய நிறுவனங்களின் வரலாற்றை கொண்டு தனது ஊழியர்களை எச்சரித்து வருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தற்போதைய லாபகரமான தயாரிப்புகள் கூட, AI தொழில்நுட்பத்தை சரியாக கையாளாவிட்டால் எதிர்காலத்தில் பயனற்று போகலாம் என்ற அச்சம் அவரிடம் உள்ளது. இந்த தீவிரமான மாற்றங்களுக்கிடையில், மைக்ரோசாப்ட் தனது ‘AI ஸ்டார்ட்-அப்’களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க போராடுகிறது.
இருப்பினும், இந்த தீவிர மாற்றங்கள் ஒரு விலையை கோரியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஊழியர்களின் மனநிலை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. ஊழியர்கள் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை மிகவும் கண்டிப்பானதாகவும், இரக்கமற்றதாகவும் உணர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவிருக்கும் 2026-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும். நாதெல்லாவின் இந்த தீவிரமான பிடிவாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு செல்லுமா அல்லது ஊழியர்களுடனான விரிசலை அதிகப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
