தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு மக்கள் சந்திப்பை தொடர்ந்து அடுத்தகட்டமாக சேலம், மதுரை, திருச்சி ஆகிய முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார். அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு மண்டலத்திலும் தனது பலத்தை நிரூபிக்க விஜய் இந்த நகரங்களை தேர்ந்தெடுத்துள்ளார்.
குறிப்பாக, திருச்சியில் நடைபெறும் கூட்டம் கட்சியின் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் மற்றும் மதுரையில் உள்ள கோட்டைகளை அசைத்து பார்க்கத் திட்டமிடும் தவெக, அங்குள்ள இளைஞர்களையும் நடுநிலை வாக்காளர்களையும் ஈர்ப்பதற்கான பிரத்யேக உத்திகளை வகுத்து வருகிறது. இந்த கூட்டங்களுக்கான இடங்கள் மற்றும் அனுமதி குறித்த பூர்வாங்க பணிகளை மாநில நிர்வாகிகள் இப்போதே தொடங்கிவிட்டனர்.
கட்சியின் இந்த அதிரடி திட்டங்களுக்குப் பின்னால் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையனின் பங்கு மிக முக்கியமானது என கருதப்படுகிறது. அதிமுகவில் பல தேர்தல்களை கண்டு தேர்ந்தவரான செங்கோட்டையன், இப்போது விஜய்யின் அரசியல் ஆலோசகராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சேலம், மதுரை மற்றும் திருச்சி கூட்டங்களுக்கான மேடை அமைப்பு, தொண்டர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் செங்கோட்டையன் தலைமையிலான குழுவே கவனித்து கொள்ளப் போகிறது. ஒரு பெரிய மாநாட்டை அல்லது கூட்டத்தை எவ்வித குளறுபடியும் இன்றி எப்படி நடத்துவது என்பதில் செங்கோட்டையன் ஒரு வல்லுநர் என்பதை அவர் ஈரோட்டில் நிரூபித்துவிட்டதால் விஜய் அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் மிகவும் கண்டிப்பான சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்கள் இனி எந்த இடத்திலும் நடக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். “மக்கள் பாதுகாப்புதான் நமக்கு முதல் முக்கியத்துவம், அதில் சமரசம் செய்யும் நிர்வாகிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நீக்கப்படுவார்கள்” என்று அவர் நேரடியாகவே எச்சரித்துள்ளார். மேலும், மேடையில் பேசுவது முதல் அடிமட்ட தொண்டர்களிடம் பழகுவது வரை ஒரு கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கக் கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
விஜய் விரைவில் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக மலேசியா செல்லவுள்ள நிலையில், அவர் அங்கிருந்து திரும்பியவுடன் கட்சியின் வேகம் இருமடங்காக இருக்கும் என தெரிகிறது. மலேசிய பயணம் முடிந்து வந்ததும், வாரத்திற்கு ஒரு முக்கிய பொதுக்கூட்டம் அல்லது மக்கள் சந்திப்பு என்ற ரீதியில் அவர் பயணத்திட்டத்தை மாற்றியமைத்துள்ளார். இது மற்ற அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் இருப்பதன் மூலம் ஒரு வலுவான மாற்று சக்தியாக தன்னை நிலைநிறுத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் இந்தப் பக்கா பிளான், திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை ஒருவித பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் “தீய சக்தி” விமர்சனம் மற்றும் அவர் ஆளுங்கட்சியை தாக்கும் வேகம் திராவிட மாடல் அரசியலுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. வழக்கமான அரசியல் பாணியில் இருந்து விலகி, மிக நவீனமான மற்றும் கார்ப்பரேட் பாணியிலான திட்டமிடலுடன் விஜய் களம் இறங்கியிருப்பது மற்ற தலைவர்களை தூங்க விடாமல் செய்கிறது. விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்படுவதால், அவருக்கு பதிலடி கொடுக்க முடியாமல் ஆளுங்கட்சி அமைச்சர்கள் திணறி வருகின்றனர்.
விஜய்யின் இந்த அதிரடி அரசியல் ஆட்டம் வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும் என்பதில் ஐயமில்லை. திராவிட அரசியலின் பிதாமகர்களாக தங்களை கருதிக்கொள்ளும் கட்சிகளுக்கு மத்தியில், ஒரு புதிய நேரேட்டிவை விஜய் வெற்றிகரமாக உருவாக்கி வருகிறார்.
சேலம், மதுரை, திருச்சி என அவர் அடுத்தடுத்து வைக்கப்போகும் அடிகள் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என தவெக நிர்வாகிகள் உற்சாகத்துடன் கூறுகின்றனர். சினிமா புகழைத் தாண்டி, ஒரு தேர்ந்த அரசியல் தலைவராக தன்னை அவர் செதுக்கிக் கொண்டுள்ள விதம், வரவிருக்கும் 2026 தேர்தல் களம் ஒரு அனல் பறக்கும் மும்முனை போட்டியாக அமையும் என்பதை இப்போதே உறுதி செய்துவிட்டது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
