அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் வாஷிங்டன் வட்டாரங்களில் எழுந்துள்ள ஒரு புதிய அமைப்பான ‘கோர் 5’ குறித்த கருத்து, உலக தலைநகரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவை ஓரங்கட்டி, ஜி7 கூட்டமைப்பை குறுக்கி, இந்தியாவை ஒரு முற்றிலும் புதிய அதிகார மையத்திற்குள் கொண்டுவரும் இந்த யோசனை, சர்வதேச உறவுகளை அடியோடு மாற்றியமைக்க கூடியதாக பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜி7 போன்ற பாரம்பரிய பன்முக மன்றங்கள் மெதுவாகவும், பயனற்றதாகவும் இருப்பதாக கருதும் டிரம்ப், அதிகாரத்தின் அடிப்படையில் நேரடியாக பேசக்கூடிய ஒரு சிறு குழுவை உருவாக்க விரும்புகிறார்.
இந்த முன்மொழியப்பட்ட C5 கூட்டமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இடம்பெறும். இந்த தேர்வு, ஜனநாயகம் மற்றும் செல்வ செழிப்பு போன்ற ஜி7 கூட்டமைப்பின் பாரம்பரிய கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
மாறாக, இந்த C5 என்பது உலகின் வல்லரசு நாடுகள் என்ற கருத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, மிக பெரிய மக்கள் தொகை, இராணுவ பலம், மற்றும் கணிசமான பொருளாதார நிலை கொண்ட நாடுகள் மட்டுமே இதில் இடம்பெற தகுதியானவையாக கருதப்படுகின்றன. சுருக்கமாக சொன்னால், உலகம் நிலையற்றதாக மாறும் போது, முடிவெடுக்கும் திறனை இந்த ஐந்து மட்டுமே பெற்றிருக்கும் .
இந்த C5 யோசனை, அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கொள்கையின் ஒரு நீண்ட, வெளியிடப்படாத வரைவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. வெள்ளை மாளிகை இதனை அதிகாரப்பூர்வமாக மறுத்தாலும், தேசிய பாதுகாப்பு கொள்கை வல்லுநர்கள் இந்த யோசனை டிரம்ப்பின் அணுகுமுறைக்கு மிகவும் நெருக்கமானது என்கின்றனர். இந்த அமைப்பின் முதல் விவாத பொருளாக, மத்திய கிழக்கு பாதுகாப்பு, குறிப்பாக இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையேயான உறவுகளை சீராக்குவது குறித்து முன்மொழியப்பட்டிருக்கிறது. இங்குதான் இந்தியா ஒரு சமநிலைப்படுத்தும் சக்தியாக அல்லாமல், முடிவுகளை வடிவமைக்கும் ஐந்து முக்கிய வல்லரசுகளில் ஒன்றாக காணப்படுவது கவனிக்கத்தக்கது.
இந்தியாவுக்கு இந்த C5 அமைப்பில் சேர்வதால் கிடைக்கும் நன்மைகள் வெளிப்படையானவை. ஐரோப்பாவின் ஆதிக்கம் இல்லாத ஒரு உயர்மட்ட அதிகார மன்றத்தில் நிரந்தரமான இடத்தை இந்தியா பெறும். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் சர்வதேச அரசியல் குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் நேரடி அணுகுமுறை கிடைக்கும். மேலும், இந்தியா வெறும் பிராந்திய முடிவுகளை எடுக்கும் நாடாக அல்லாமல், உலகளாவிய முடிவெடுக்கும் சக்தியாக அங்கீகரிக்கப்படும். எந்த ஒரு அணிக்கும் கட்டுப்படாமல், அனைவருடனும் இணக்கத்துடன் இருக்கும் இந்தியாவின் நீண்டகால சுயாட்சி நாடு என்ற நிலைப்பாட்டிற்கு இந்த C5 அமைப்பு கூடுதல் பலம் சேர்க்கும்.
எனினும், இந்த யோசனையில் இந்தியாவுக்கு சில அபாயங்களும் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். C5-ல் ரஷ்யா மற்றும் சீனா இணைவதுதான் அதற்கு காரணம். மேற்கு நாடுகள் மாஸ்கோவை தனிமைப்படுத்தவும், பெய்ஜிங்கை எதிர்க்கவும் முயலும் இக்காலகட்டத்தில், C5 இந்த இரு நாடுகளுக்கும் ஒரு முக்கிய இடத்தை கொடுக்கிறது. இது இந்தியாவின் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்ட வெளியுறவு கொள்கையில் சில சிக்கல்களை உருவாக்கலாம். இருப்பினும், இந்தியா இத்தகைய சரவதேச அரசியல் குழப்பங்களை தாண்டி, தனது தேசிய நலன்களை முன்னிறுத்தி செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஐரோப்பிய நாடுகள் இந்த C5 யோசனையைகுறித்து ஏற்கெனவே அச்சமடைந்துள்ளன. இந்த புதிய கூட்டணி, நேட்டோ கூட்டணியின் ஒற்றுமையை குறைத்து, மேற்கு நாடுகளின் ஒருங்கிணைப்பை நீர்த்து போக செய்யும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். மேலும், இது யதார்த்தவாதம் என்ற பெயரில் பலமான தலைவர்களின் அரசியலை சட்டப்பூர்வமாக்கி விடும் என்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் கருதுகின்றன.
தற்போதுவரை C5 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வாஷிங்டனில் இருந்து வெளியாகவில்லை. இருப்பினும், உலகளாவிய ஒழுங்கை மாற்றி அமைப்பதில் டிரம்ப் நிர்வாகத்தின் ஆர்வம், இந்தியாவுக்கு ஒரு முக்கியமான மற்றும் சவாலான வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த C5 முன்மொழிவு ஒரு கருத்தாக இருந்தாலும், இது உலக வல்லரசுகள் இந்தியாவை எந்த அளவிற்கு ஒரு மைய சக்தியாக கருதுகின்றன என்பதற்கான ஒரு வலுவான சமிக்ஞையாகும். இது நடைமுறைக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
