சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனைத்துவிதமான மேற்கத்திய அழுத்தங்களையும் மீறி இந்தியாவுக்கு வந்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது, சர்வதேச அரசியல் அரங்கில் ஒரு வலுவான திருப்புமுனையாக அமைந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டு சந்திப்பு, இந்தியா தனது சுயாட்சி கொள்கையில் உறுதியாக இருக்கிறது என்பதையும், இந்தியாவின் தேசிய நலன்களுக்காக எந்த வல்லரசுக்கும் கட்டுப்படாது என்பதையும் ஆணித்தரமாக உலகிற்கு உணர்த்தியது.
புடின் உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மேற்குலக நாடுகள் தீவிரமாக முயலும் இச்சமயத்தில், உலகளாவிய தெற்கின் முக்கிய தலைவராக விளங்கும் மோடி, புடினை வரவேற்று மரியாதை அளித்தது என்பது, இந்தியா-ரஷ்யா இடையேயான நீண்டகால, நிலையான உறவுக்கு இந்தியா கொடுக்கும் மதிப்பை தெளிவுபடுத்தியது.
புடின் இந்தியா வந்திறங்கிய சில மணி நேரங்களிலேயே, அமெரிக்காவின் வர்த்தக குழு மற்றும் வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்று இந்தியாவிற்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது, இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. மாறாக, புடின் வருகையின் வீரியத்தை உணர்ந்த அமெரிக்காவின் பதற்றம் மற்றும் அவசரத்தின் வெளிப்பாடு ஆகும். இந்தியாவுடனான உறவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை விரைந்து சரிசெய்யாவிட்டால், இந்தியா ரஷ்யாவுடன் மேலும் நெருங்கக்கூடும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்களின் மீது 25% கூடுதல் வரியை விதித்து வஞ்சித்து வந்தாலும், புடின் வருகைக்கு பின் உடனடியாகத் தூதுக்குழுவை அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டிரம்ப் ஒருபுறம் ரஷ்ய அதிபர் புடின் உடன் சமாதானத் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது, ரஷ்யாவில் அமெரிக்க முதலீடுகளைத் தூண்டுவது எனப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால், இந்தியா மட்டும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என்று அவர் நினைப்பது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
அதேவேளையில், தற்போதைய சர்வதேச அரசியல் சூழலில், வல்லரசுகளில் சீனா இந்தியாவுக்கு ஒரு நம்பகத்தன்மையற்ற அச்சுறுத்தலை அளித்து வருகிறது. எல்லை பிரச்சினைகள், ஆக்கிரமிப்பு மனப்பான்மை மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மூலம் சீனா தனது உண்மையான முகத்தை காட்டுகிறது. இந்த நெருக்கடியான சூழலில், இந்தியாவுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த சலனமும் இல்லாமல், பாதுகாப்பு மற்றும் அணுசக்தி நலன்களுக்கு ஆதரவாக இன்று வரை இருக்கும் ஒரே வல்லரசு ரஷ்யா மட்டுமே.
எனவே, ரஷ்யாவுடனான உறவுகளை வலுப்படுத்துவது என்பது, சர்வதேச அரசியல் சதுரங்க பலகையில் இந்தியாவுக்கு அத்தியாவசியமான மற்றும் உறுதியான பாதுகாப்பு கேடயமாக அமைகிறது. இந்தியா ரஷ்யாவுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் பலப்படுத்தினால், அது அமெரிக்காவின் வர்த்தக நலன்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக, டிரம்ப் 25% கூடுதல் வரி விதித்த போதிலும், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியில் 8.3% வளர்ச்சியை கண்டுள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தால், இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்தை பல்வகைப்படுத்தலில் கவனம் செலுத்தி, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மாற்றுச் சந்தைகளை நோக்கி நகர்கின்றனர்.
இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து பொருளாதார உறவுகளை வலுப்படுத்தினால், இந்தியாவின் இவ்வளவு பெரிய சந்தையை அமெரிக்கா இழக்க நேரிடும் என்ற அச்சம்தான், புடின் வருகைக்கு பின் உடனடியாக அமெரிக்கக் குழு இந்தியாவுக்கு வர காரணம். வர்த்தக ஒப்பந்தம் குறித்து, ஜூலை மாதத்திலேயே இந்தியா ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்த நிபந்தனைகளே இப்போதும் செல்லுபடியாகும்; அதற்கு மேல் எந்த சலுகையையும் இந்தியா தரப்போவதில்லை என்ற வலிமையான ராஜதந்திர அணுகுமுறையை இந்தியா கையாண்டு வருகிறது. இது, ‘நீங்கள் விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது விலகி செல்லலாம்’ என்ற தெளிவான செய்தியை அமெரிக்காவுக்கு அனுப்புகிறது.
புடின் வருகைக்கு பின் இந்தியா வந்த அமெரிக்க குழு, நிச்சயம் டிரம்ப் நிர்வாகத்திற்கு இந்திய சந்தையின் முக்கியத்துவம் மற்றும் ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவின் அசைக்க முடியாத தன்மை குறித்த அறிக்கையை அளித்திருக்கும். இந்தியா ஒருபுறம் ரஷ்யாவுடனான பாரம்பரியமான, நம்பகத்தன்மை வாய்ந்த உறவை பலப்படுத்தி, மறுபுறம் அமெரிக்கா போன்ற வல்லரசின் அநியாயமான அழுத்தங்களுக்கு அசைந்து கொடுக்காமல் நிற்பதன் மூலம், சர்வதேச அரங்கில் தனது தனிப்பட்ட ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.
பொருளாதார வளர்ச்சியிலும் ராஜதந்திரத்திலும் இந்தியா அடைந்துள்ள இந்த தன்னம்பிக்கையும், வெளிப்படையான துணிச்சலும்தான் இது மோடியின் ராஜதந்திர வெற்றி என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
