தற்போது தமிழக அரசியல் களம் மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கு கட்சியில் கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதால் அவர் தீவிரமாக கட்சியின் வெற்றிக்காக உழைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வின் மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் த.வெ.க.வில் இணைய போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு வந்ததையடுத்து, கே.ஏ. செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புடன் கூடுதலாக, கொங்கு பகுதியான திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட செங்கோட்டையன், அந்த நான்கு மாவட்டங்களிலும் வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் நியமனம் போன்ற அனைத்து முடிவுகளும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் பேரிலேயே கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது.
செங்கோட்டையன் இவ்வாறு செயல்பட்டால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் இயக்கத்தில் பயணித்த நிர்வாகிகளுக்கு என்ன அங்கீகாரம் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பி, இந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் தங்கள் அதிருப்தியை தலைமைக்குத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக வந்த செங்கோட்டையனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது, தங்களை இத்தனை நாள் மதித்தவர்கள் மதிக்காமல் போவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் புலம்பியுள்ளனர். ஆனால் அதிருப்தியாளர்களை அழைத்த விஜய், செங்கோட்டையன் என்ன தான் வேட்பாளர் பட்டியல் கொடுத்தாலும் இறுதி முடிவு எடுக்க போவது நான் தான் என கூறி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.
செங்கோட்டையனின் வரவுக்கு பிறகு நாஞ்சில் சம்பத் போன்ற முக்கிய பிரமுகர்கள் த.வெ.க.வில் இணைந்த நிலையில், தற்போது அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்தவருமான ஒருவர் விரைவில் த.வெ.க.வில் இணையப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். காலத்தில் அதிருப்திக்கு உள்ளாகி, மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதில் இருந்து, அ.தி.மு.க.வின் தற்போதைய தலைமை மீது மிகுந்த அதிருப்தியில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலை சரியாக பயன்படுத்திக்கொண்ட செங்கோட்டையன், அந்த முன்னாள் அமைச்சரை தொடர்பு கொண்டு, மீண்டும் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பொறுப்பும், தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியும் உறுதி என முழுமையான உத்தரவாதம் அளித்து கட்சிக்கு அழைத்துள்ளாராம். செங்கோட்டையனின் இந்த திட்டம், அ.தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள மற்ற நபர்களுக்கும் த.வெ.க.வுக்கு வர ஒரு ‘ரூட் மேப்’ ஆக அமையும் என்றும், இதன் மூலம் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தலாம் என்றும் த.வெ.க. தலைமை கருதுகிறது.
இதேபோல் அதிமுகவிலேயே தொடரலாமா? அதிமுகவில் தொடர்ந்தால் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? என ஊசலாட்டத்தில் இருக்கும் 4 முன்னாள் அமைச்சர்களுடனும் செங்கோட்டையன் பேசி வருவதாகவும், விரைவில் அதிமுகவின் 5 முன்னாள் அமைச்சர்கள் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் நிகழ்வு நடக்கும் என்றும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
