தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தனது கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இமாலய இலக்கினை நிர்ணயித்துள்ளார். அது, “ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தவெக-வுக்கு குறைந்தது இரண்டு வாக்குகளை பெற்றுத் தாருங்கள், அதுவே போதும். கூட்டணி இல்லாவிட்டாலும், நாம் நிச்சயம் ஆட்சி அமைப்போம்” என்பதாகும். இந்த திடமான நம்பிக்கை, தொண்டர்களிடையே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சியின் அடுத்த ஆறு மாதகால செயல் திட்டத்தை முழுவதுமாக வகுத்துள்ளது.
தவெக தலைவர் விஜய், கட்சி கூட்டங்களின்போதும் தனிப்பட்ட உரையாடல்களின்போதும் தனது நிர்வாகிகளிடம் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக கூறி வருகிறார்: “நாம் மற்ற கட்சிகளை நம்பி செயல்படக் கூடாது. தவெக-வின் வலிமை என்பது மக்களின் ஆதரவில்தான் உள்ளது. கூட்டணி அமைத்துத்தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நிலை நமக்கு வர கூடாது.”
இந்தக் கூற்று, தவெக தமிழகத்தின் இரண்டு பிரதான திராவிட கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு ஒரு பலமான சவாலை முன்வைக்க தயாராகிவிட்டது என்பதை காட்டுகிறது. தமிழக அரசியல் களத்தில், மூன்றாவது அணியை தலைமையேற்று செல்லும் விஜய்யின் இந்த தன்னம்பிக்கை, தொண்டர்களை மேலும் உழைக்க தூண்டும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
விஜய் நிர்ணயித்திருக்கும் ‘வீட்டுக்கு இரண்டு வாக்குகள்’ என்ற இலக்கு சாதாரணமாக தோன்றினாலும், அதற்கு பின்னால் பலமான மக்கள் ஆதரவு குறித்த ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. தவெக நிர்வாகிகள் குறிப்பிடுகையில், “தமிழ்நாட்டில் விஜய் ரசிகர் இல்லாத வீடே இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும். எனவே, ஒரு வீட்டிலிருந்து இரண்டு வாக்குகளை பெறுவது என்பது மிகப்பெரிய கடினமான விஷயம் அல்ல. ரசிகர் ஒருவரும், அவரது குடும்பத்தில் உள்ள மற்றொரு நபரின் வாக்கும் நமக்குக் கிடைத்தால், போதும். நாம் வெற்றியை பெற்றுவிடலாம்.” என்று ஆவேசத்துடன் கூறுகின்றனர்.
சினிமா பிரபலம் என்ற ஆழமான அடித்தளத்தை அரசியல் வாக்குகளாக மாற்றும் தவெக-வின் இந்த தனித்துவமான வியூகம், தமிழக வெற்றி கழகத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.
தவெக தனது நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கடுமையான ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அடுத்த ஆறு மாத காலம் அவர்கள் பம்பரமாய் உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நொடி கூட வீணாக்க கூடாது. அரசியல் பணிகளை நிறுத்திவிட கூடாது என்று விஜய் நேரடியாக உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆறு மாத காலமே தவெக-வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால், இந்த இலக்கினை அடைய வீடு வீடாச் சென்று மக்களை சந்திப்பது, புதிய வாக்காளர் பட்டியலில் உள்ள இளைஞர்களை ஈர்ப்பது, அரசின் தவறுகளை எடுத்துரைப்பது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
விஜய் இட்ட இந்த சவாலை தவெக தொண்டர்கள் ஒரு சபதமாகவே ஏற்றுக்கொண்டுள்ளனர். தலைவரின் உத்தரவு எங்களுக்கான வேத வாக்கு. அவரது எதிர்பார்ப்பைவிட அதிகமாக உழைத்துக் காட்டுவோம் என்று அவர்கள் சூளுரைத்துள்ளனர். இதன்படி, ஒவ்வொரு தொண்டரும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கான இரண்டு வாக்குகளை விட அதிகமாக பெற்று தருவதாகவும், கட்சியின் கொள்கை மற்றும் சமூக நீதி செயல்பாடுகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்க்க போவதாகவும் உறுதியளித்துள்ளனர். இந்த சபதம், விஜய்யின் தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் தற்போது ஒரு பலமான அரசியல் இயந்திரமாக மாறி வருவதை சுட்டிக் காட்டுகிறது.
வாக்கு வேட்டை ஒருபுறமிருக்க, தவெக தனது பிரதான பிரச்சாரங்களை சமூக நீதி மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகிய கொள்கைகளை மையப்படுத்தியே முன்னெடுக்கிறது. அம்பேத்கரின் கொள்கைகள், மாநில உரிமை, டாஸ்மாக் மூடல், ஊழல் அரசியல்வாதிகள் சொத்து பறிமுதல் போன்ற திட்டங்கள் குறித்த விஜய்யின் வாக்குறுதிகளை பற்றிய ஆழமான தகவல்களை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்ப்பது தொண்டர்களின் மிக முக்கிய பணியாகும். இரண்டு வாக்குகளை பெறுவதென்பது வெறும் கோரிக்கை மட்டுமல்ல, கட்சியின் ஆழமான கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் வரும் அங்கீகாரம் என்பதை தொண்டர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
