மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் தமிழகம் வர இருக்கிறார். அவரது வருகையின் போது, வரவிருக்கும் தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிகார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பாஜகவின் முழு கவனமும் தற்போது தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடிகூட, பிகாரின் காற்று தமிழகத்திலும் வீசுகிறதோ என்று உற்சாகமாக பேசியிருந்தார்.
தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் பாஜகவுக்கு சற்று யோசிக்க வைத்திருக்கிறது. ஏற்கனவே ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது செங்கோட்டையனும் நீக்கப்பட்டிருக்கிறார். இதனால், அதிமுகவுக்கு முழுமையாக கிடைக்கக்கூடிய வாக்குகள் சிதறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த வாக்கு சிதறலைத் தடுக்கவும், வெற்றியின் வாய்ப்பை அதிகரிக்கவும் அதிமுகவை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் பாஜக தலைமை உறுதியாக இருக்கிறது. ஓபிஎஸ்-ஸை அமித்ஷா சந்தித்ததால், பாஜக தலைமை மீது பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பிளவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமித்ஷா ஒரு வியூகம் வகுத்துள்ளார்.
ஓபிஎஸ் ஒரு புதிய கட்சியை தொடங்கிய பிறகு, அந்த கட்சியை பாஜக கூட்டணியில் சேர்க்க அமித்ஷா முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வேலைகள் முடிந்த பின்பு, ஓரிரு வாரத்தில் அமித்ஷா தமிழகம் வருவார் எனவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தி, திமுக கூட்டணிக்கு கடும் போட்டியை கொடுக்க வேண்டும் என்பதே அமித்ஷாவின் பிரதான திட்டம். கடந்த மக்களவை தேர்தலில், அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே போட்டியிட்டன. பல தொகுதிகளில் இந்த இரு கட்சிகளும் சேர்ந்து வாங்கிய வாக்குகளைவிட திமுக குறைவான வாக்குகளையே பெற்றிருந்தது. வாக்குகள் பிரிந்ததால் திமுக பல தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோன்ற நிலை வரக்கூடாது என்பதற்காக, திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறுவதை தடுக்க பல கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து, திமுகவை வீழ்த்த அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.
தமிழகம் வரும்போது, அமித்ஷா கூட்டணியை இறுதி செய்வதுடன், பின்வரும் முக்கிய கட்சித் தலைவர்களையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
கிருஷ்ணசாமி
ஜான் பாண்டியன்
ஏசி சண்முகம்
அமித்ஷா தனது வருகையின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் மெகா வடிவத்தை இறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
