தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களை மையமாக கொண்டு, தமிழ்நாட்டிற்கு அப்பாலுள்ள அண்டை மாநிலங்களிலும் கூட்டணி மற்றும் அதிகார பங்களிப்பு குறித்து பல கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. தவெகவின் இந்த கூட்டணி வியூகம், தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுடன் சமமான அதிகாரம் மற்றும் பரஸ்பர மரியாதை என்ற அடிப்படையில் அமைந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம், தேசிய அளவில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதில், ஒரு சமரசமான வியூகம் முன்வைக்கப்பட்டுள்ளது: வரவிருக்கும் தமிழகச் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு 40 சட்டமன்ற தொகுதிகளை விட்டுக்கொடுக்க தவெக தயாராக உள்ளது. இதற்கு ஈடாக, கேரள மாநிலத்திலும் தவெகவுக்கு சம அளவில் 40 சட்டமன்ற தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விஜய் தரப்பு நிபந்தனை விதித்துள்ளது. இந்த ’40க்கு 40′ திட்டம், தவெக தமிழ்நாட்டில் தலைமை பொறுப்பை எடுப்பதுடன், கேரளாவிலும் கணிசமான அங்கீகாரத்தை பெற வழிவகுக்கும்.
வெறும் தொகுதி பங்கீடு மட்டுமின்றி, அதிகாரப் பங்களிப்பிலும் சமத்துவத்தை நிலைநாட்ட விஜய் தரப்பு வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் தவெகவுடன் கூட்டணி சேரும்பட்சத்தில், முதல்வர் பதவி தவெகவுக்கு வழங்கப்பட்டு, துணை முதல்வர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு கேட்கப்பட்டால், அதனை ஏற்றுக்கொள்ள தவெக தயாராக உள்ளது. அதேபோன்ற நிலை, கேரளாவிலும் நீடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கேரளாவில் காங்கிரஸ் கட்சி முதல்வர் பொறுப்பை எடுத்தால், தமிழக வெற்றி கழகத்திற்குக் கேரளாவில் துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரு புதிய கட்சியின் இத்தகைய துணிச்சலான கோரிக்கை வித்தியாசமான அரசியல் வியூகமாகும்.
புதுச்சேரி அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் என்.ஆர். காங்கிரஸின் தலைவர் மற்றும் முதல்வரான ரெங்கசாமியுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்களின்படி, புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய இரு கட்சிகளும் தலா 15 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பேசப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டணி வெற்றிபெற்றால், ரெங்கசாமி அவர்கள் புதுச்சேரியின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்றும், தமிழக வெற்றி கழகத்திற்குக் துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக புதிதாக ஆரம்பிக்கும் மாநில கட்சிகள் உள்ளூர் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலையில், விஜய் மற்றும் அவரது முக்கிய வியூக குழுவினர், தமிழ்நாட்டிற்கு வெளியேயுள்ள அண்டை மாநிலங்களின் ஆட்சி அதிகாரத்திலும் பங்குபெற வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்படுகின்றனர். தேசிய அளவில் கூட்டணிகளின் முக்கியத்துவத்தை பயன்படுத்தி, பிற மாநிலங்களில் கணிசமான இடங்களையும், முக்கிய அதிகார பொறுப்புகளையும் பெறுவதன் மூலம், தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் செல்வாக்கையும் தேசிய அளவில் உயர்த்த அவர்கள் திட்டமிடுகின்றனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள், தென்னிந்திய அரசியலில் தவெகவின் வரவிருக்கும் தேர்தல்களுக்கான தீவிரத்தையும், அதன் ‘வேற லெவல்’ அதிகார பங்களிப்பு கனவுகளையும் வெளிப்படுத்துகின்றன. இந்த விரிவான கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிகார பங்களிப்புக் கோரிக்கைகளின் உண்மைத்தன்மை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இந்த செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாகவும் சலசலப்பாகவும் மாறியுள்ளன.
தமிழக வெற்றி கழகத்தின் இந்த வியூகம் குறித்து, தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் புதுச்சேரியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து என்ன பதில் வரும் என்பதை அரசியல் பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
