தமிழ்த் திரையுலகின் ஈடு இணையற்ற அடையாளங்களில் ஒருவரும், புகழ்பெற்ற ஏவிஎம் திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளருமான எம். சரவணன் அவர்கள் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86. இவரது மறைவு தமிழ் திரையுலகுக்கும், ஒட்டுமொத்த இந்திய திரைப்படத் துறைக்கும் பேரிழப்பாகும். இவரது தந்தையான மெய்யப்ப செட்டியாரால் உருவாக்கப்பட்ட ஏவிஎம் நிறுவனத்தை, அவருக்கு பிறகு இவர் மிக திறம்பட நிர்வகித்து வந்தார். சென்னையில் பிறந்து வளர்ந்த சரவணன், தனது தந்தையின் வழியில் இந்த நிறுவனத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் வழிநடத்தினார்.
சரவணன் அவர்களின் தயாரிப்பு பயணம் பல தலைமுறை முன்னணி நடிகர்களையும் உள்ளடக்கியது. அவரது நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளன. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற பழம்பெரும் நட்சத்திரங்கள் நடித்த படங்களை தயாரித்த அவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்ற நவீன கால முன்னணி நடிகர்களின் படங்களையும் வெற்றிகரமாகத் தயாரித்து, திரையுலகின் மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை வழிநடத்தினார்.
திரைப்பட தயாரிப்பாளர் என்ற எல்லைகளை தாண்டி, பல்வேறு முக்கிய நிர்வாக பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர், அகில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டு கழக இயக்குநர் மற்றும் சென்னை மாநகர செரீப் போன்ற பொறுப்புகளை வகித்து இந்தியத் திரையுலகின் வளர்ச்சிக்கு அவர் பங்களித்துள்ளார்.
மேலும், அவர் பல உயரிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். அவற்றில் தமிழக அரசின் கலைமாமணி விருது, புதுவை அரசின் பண்பின் சிகரம் விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அத்துடன், ‘நானும் ஒரு பெண்’ மற்றும் ‘சம்சாரம் அது மின்சாரம்’ ஆகிய திரைப்படங்களுக்காகச் சிறந்த திரைப்படத்திற்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளால் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த ஏவிஎம் சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். திரைப்படத் துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏவிஎம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. அவரது மறைவு தமிழ்த் திரையுலகுக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
