8வது ஊதியக்குழு: அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வாய்ப்பில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்.. ஊழியர்களின் பல ஆண்டு கோரிக்கை நிராகரிப்பு.. ஏன் இணைக்க தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்?

மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 8வது ஊதியக் குழு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய ஊதிய குழுவின் விசாரணைக்கான வரையறைகள் ஏற்கெனவே மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், ஊழியர்களின் முக்கிய…

மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 8வது ஊதியக் குழு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய ஊதிய குழுவின் விசாரணைக்கான வரையறைகள் ஏற்கெனவே மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்து மத்திய அரசு தற்போது எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. இந்த பதிலில், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதற்கான எந்தவொரு திட்டமும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி என்பது விலைவாசி உயர்வால் ஏற்படும் பணவீக்கத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அம்சமாகும். இது ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தின் உண்மையான மதிப்பை பாதுகாக்கும் ஒரு காப்பீடாக செயல்படுகிறது. இதன்மூலம், விலைவாசி உயர்வால் ஊழியர்களுக்கு ஏற்படும் பொருளாதார சுமை சமன் செய்யப்படுகிறது. இந்த அகவிலைப்படியின் விகிதங்கள், தொழில்துறை தொழிலாளர்களின் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக ஒரு கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. அதாவது, அகவிலைப்படி 50% ஐ தாண்டும்போது, அதனை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்பதே அக்கோரிக்கை. இவ்வாறு இணைப்பதன் மூலம், அடிப்படை ஊதியம் உயர்ந்து, எதிர்கால அகவிலைப்படி கணக்கீடுகளுக்கு அது சாதகமாக இருக்கும் என்றும், இதனால் ஒட்டுமொத்த வருமானம் அதிகரிக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். ஆனால், இந்த முக்கிய கோரிக்கையை இப்போதைக்கு ஆராயும் எந்த திட்டமும் இல்லை என்பதை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் மீண்டும் உறுதி செய்துள்ளது.

அகவிலைப்படி இணைப்பு குறித்து மத்திய அரசு மறுத்திருக்கும் நிலையிலும், 8வது ஊதியக்குழு அமைப்பதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் தொடங்கியுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான நீதியரசர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்கள் மற்றும் சேவை நிலைமைகள் ஆகியவற்றை மறுஆய்வு செய்வதுதான் இந்த குழுவின் முக்கிய பணி ஆகும்.

8வது ஊதியக் குழுவுக்கு அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகள், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊதிய குழுவின் பரிந்துரைகள் பொதுவாக பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகி, அடுத்த பத்தாண்டுகளுக்கான ஊதிய விகிதங்கள், படிகள் மற்றும் ஓய்வூதிய பலன்களை நிர்ணயம் செய்கிறது.

இந்த 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிட்டத்தட்ட 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை பாதிக்கும். இதன் பரிந்துரைகள் அவர்களின் சம்பள விகிதங்கள், வழங்கப்படும் பிற படிகள் மற்றும் ஓய்வுக்காலப் பலன்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு வடிவமைக்கும் என்பதால், இது இந்திய பொருளாதாரத்திலும், மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்திலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.