தவெக ஆட்சிக்கு வந்தால்.. பள்ளிகளில் தேர்வுகள் இருக்காது.. பாட திட்டங்கள் முழுமையாக மாற்றப்படும்.. நடைமுறை வாழ்க்கைக்கான பாடங்கள் சேர்க்கப்படும்.. புத்தக மூட்டை இல்லை.. எல்லாமே டிஜிட்டல் வகுப்பு தான்.. மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட்போன், லேப்டாப்.. டிஜிட்டல் ஸ்க்ரீன் மூலம் பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள்.. கல்வி துறையை மேம்படுத்த நவீன திட்டங்கள்.. தவெக நிர்வாகிகள் தரும் ஆச்சரியமான தகவல்கள்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகை, தமிழகத்தின் மிக முக்கியமான துறையான கல்வி அமைப்பில் அவர் கொண்டு வரவிருக்கும் புரட்சிகரமான மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தவெக நிர்வாகிகள்…

smart classroom

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகை, தமிழகத்தின் மிக முக்கியமான துறையான கல்வி அமைப்பில் அவர் கொண்டு வரவிருக்கும் புரட்சிகரமான மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தவெக நிர்வாகிகள் அளிக்கும் தகவல்களின்படி, விஜய் ஆட்சிக்கு வந்தால், தமிழக அரசு பள்ளிகளின் முகமே முற்றிலும் மாறப்போகிறது என்பது தெளிவாகிறது. கல்வியை வெறும் மதிப்பெண்களுக்காக அல்லாமல், நடைமுறை வாழ்க்கைக்கான அறிவை வழங்குவதை இலக்காக கொண்டே இந்த சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தவெகவின் கல்வி திட்டத்தில் இடம்பெற போகும் மிக முக்கியமான அம்சம், பள்ளி கல்வியில் இருந்து தேர்வுகளை நீக்குவது அல்லது அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைப்பதுதான். 10, 12ஆம் வகுப்பு தவிர அனேகமாக மற்ற வகுப்புகளின் தேர்வுகள் நிறுத்த வாய்ப்பு உள்ளது. மற்ற வகுப்புகளில் மாணவர்கள் மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்யும் நிலையை மாற்றி, புரிதலுக்கும், திறமைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படலாம். ஒருவரின் கற்றல் திறனை தொடர்ச்சியான ஆய்வு மற்றும் செயல்திட்டங்கள் மூலம் மதிப்பிடுவது இந்த சீர்திருத்தத்தின் நோக்கமாகும். மேலும், தற்போதுள்ள பாரம்பரியப் பாடத்திட்டங்கள் முழுமையாக மாற்றப்பட்டு, உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப புதிய, நவீனப் பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டு, மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையையும், பகுப்பாய்வு திறனையும் வளர்க்க உதவும்.

கல்வி என்பது வெறும் புத்தக அறிவோடு நின்றுவிடாமல், மாணவர்கள் வெளியே சென்றவுடன் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் புதிய பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, நிதி மேலாண்மை மற்றும் சட்ட அறிவு தொடர்பான பாடங்கள் கட்டாயமாக்கப்படும். உதாரணமாக, வங்கியில் சேமிப்புக் கணக்கு ஆரம்பிப்பது, ஆன்லைனில் கணக்குகளை திறப்பது, சொத்து வாங்குதல்/விற்பதற்கான சட்ட நடைமுறைகள், மற்றும் பணத்தை எந்த வழிகளில் சேமித்தால் பாதுகாப்பாக இருக்கும் போன்ற நடைமுறை சார்ந்த விஷயங்கள் கற்பிக்கப்படும்.

அதேபோல், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு குறித்த பாடங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்கள் அவற்றில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், மற்றும் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு, அதன் பயன்பாடுகள், மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய கல்வி கட்டாயமாக்கப்படும். இது மாணவர்களை நவீன உலகின் சவால்களுக்குத் திறம்பட எதிர்கொள்ளத் தயார் செய்யும்.

பள்ளி கல்வியை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்குவது, தவெகவின் திட்டங்களில் முதன்மையானது. மாணவர்கள் கனமான புத்தக மூட்டைகளை சுமந்து செல்லும் பழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும். அனைத்து பாடத்திட்டங்களும் டிஜிட்டல் வடிவத்தில் மாற்றப்பட்டுவிடும். மாணவர்களுக்கு படிப்பைத் தொடர ஏதுவாக, ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வழங்கப்படும். ஆசிரியர்களும் டிஜிட்டல் ஸ்க்ரீன் மூலம் பாடங்களை சொல்லி கொடுப்பார்கள். இது மாணவர்களுக்குக் காட்சிகளை கொண்டும், இன்டராக்டிவ் முறையிலும் கல்வியை கொண்டு சேர்க்க உதவும். மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியே மாற்றியமைக்கப்படும். உதாரணமாக ஒரு யானை புகைப்படத்தை காட்டி, அதை யானை என்று சொல்லி கொடுக்காமல், அது யானையின் புகைப்படம் என்று சொல்லி கொடுத்து அடுத்த நாளே அந்த மாணவர்களை அழைத்து சென்று உண்மையான யானையை காட்டுவது.

இந்த நவீன மாற்றங்களை வெற்றிகரமாக செயல்படுத்த, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது அவசியம். எனவே, ஆசிரியர்கள் டிஜிட்டல் வகுப்பறைகளை கையாள்வதற்கும், புதிய நடைமுறை வாழ்க்கை பாடங்களைச் சொல்லி கொடுப்பதற்கும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சமமான தரமான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், நகர மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கிடையே உள்ள கல்வி இடைவெளி களையப்படும்.

விஜய்யின் இந்த சீர்திருத்தங்கள், தற்போதுள்ள மனப்பாட முறையிலிருந்து தமிழக கல்வியை விடுவித்து, திறன் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஒரு புரட்சிகரமான அமைப்பை உருவாக்கக்கூடும் என்று தவெக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.