எல்லா மொபைல்களிலும் மத்திய அரசின் இந்த செயலி கட்டாயம் இருந்தே ஆக வேண்டும்.. ஆப்பிள், சாம்சங், கூகிள், விவோ, ஒப்போ, சியோமி என அனைத்து மொபைல்களுக்கும் இந்த விதி பொருந்தும்.. இந்த செயலியை வைக்காவிட்டால் நடவடிக்கை.. ஒவ்வொரு இந்தியனும் கண்காணிக்கப்படுவார்களா?

சைபர் மோசடிகளை எதிர்த்து போராடுவதற்கும் தொலைத்தொடர்பு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் மத்திய தொலைத்தொடர்புத் துறை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi) செயலியை முன்கூட்டியே இன்ஸ்டால்…

sanchar

சைபர் மோசடிகளை எதிர்த்து போராடுவதற்கும் தொலைத்தொடர்பு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் மத்திய தொலைத்தொடர்புத் துறை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi) செயலியை முன்கூட்டியே இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உண்மையான சாதனங்களை சரிபார்க்கவும், தொலைத்தொடர்பு சேவைகளின் தவறான பயன்பாட்டை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 28, அன்று வெளியிடப்பட்ட இந்த உத்தரவு, எந்தவொரு புதிய கைபேசியின் ஆரம்ப அமைவின் போதும், ‘சஞ்சார் சாத்தி’ செயலி தெளிவாக தெரியும்படியும், பயன்படுத்த எளிமையாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இந்த உத்தரவுக்கு இணங்க நிறுவனங்களுக்கு 90 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 120 நாட்களுக்குள் இணக்க அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். கடைகளில் ஏற்கெனவே உள்ள சாதனங்களில், சாப்ட்வேர் அப்டேட்டுகள் மூலம் இந்த செயலியை சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செல்போன் உற்பத்தியாளர்கள் இந்த செயலியின் எந்தவொரு அம்சத்தையும் மறைக்கவோ, முடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த உத்தரவு ஆப்பிள், சாம்சங், கூகிள், விவோ, ஒப்போ, சியோமி உள்ளிட்ட அனைத்து முக்கிய செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

‘சஞ்சார் சாத்தி’ என்பது சைபர் மோசடியை தடுக்கும் ஒரு முயற்சியாகும். இதன் மூலம் பயனர்கள் மொபைல் கைபேசி உண்மையானதா என்பதை அதன் IMEI எண்ணை பயன்படுத்தி சரிபார்க்க முடியும், மோசடி அழைப்புகள் அல்லது சந்தேகத்திற்கிடமான செய்திகளை புகாரளிக்கலாம். மேலும், தொலைந்த அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளை புகாரளிக்கவும், தங்கள் பெயரில் வழங்கப்பட்ட அனைத்து மொபைல் இணைப்புகளையும் காணவும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான நம்பகமான தொடர்பு விவரங்களை அணுகவும் இது உதவுகிறது. இந்த முயற்சி, தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகளின் ஆதரவுடன் செயல்படுகிறது.

இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம், ஒரே IMEI எண் பல சாதனங்களில் ஒரே நேரத்தில் தோன்றும் போலியான அல்லது மோசடி செய்யப்பட்ட IMEI எண்கள் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால்தான். மேலும், இந்தியாவில் திருடப்பட்ட அல்லது கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்ட கைபேசிகள் விற்கப்படும்போது, அதனை அறியாமல் வாங்குபவர்களும் குற்ற செயல்களில் ஈடுபட நேரிடுகிறது. செல்போன்களின் 15 இலக்க IMEI எண் உட்பட தொலைத்தொடர்பு அடையாளங்களை திருத்துவது என்பது ஜாமின் வழங்க முடியாத குற்றங்கள் என்றும், இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் தொலைத்தொடர்புச் சட்டம் 2023-இன் கீழ் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சஞ்சார் சாத்தி’ செயலியை முன்கூட்டியே இன்ஸ்டால் வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை காங்கிரஸ் கட்சி கடுமையாக நிராகரித்துள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, உடனடியாக உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், இந்த நடவடிக்கை குடிமக்களின் தனியுரிமைக்கு எதிரானது என்றும், தனியுரிமை என்பது அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 21-இன் கீழ் உள்ள அடிப்படை உரிமை என்றும் குறிப்பிட்டார்.

“நிறுவப்பட்ட பின் நீக்க முடியாத ஒரு அரசு செயலி, ஒவ்வொரு இந்தியரையும் கண்காணிக்க பயன்படும் ஒரு மோசமான கருவியாகும்” என்று வேணுகோபால் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ஒவ்வொரு குடிமகனின் அசைவுகள், தொடர்புகள் மற்றும் முடிவுகளை கண்காணிக்க ஒரு வழியாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை, இந்திய குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகள் மீதான தாக்குதல் என்று அவர் குற்றம் சாட்டினார். சிவசேனாவை சேர்ந்த ஆதித்யா தாக்கரேயும், இந்த நடவடிக்கையை சர்வாதிகாரம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.