அண்மையில் அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகளும் முக்கிய தலைவர்களும் விலகி சென்றபோது காட்டாத அதிர்ச்சியையும் பரபரப்பையும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விலகி, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வெளிப்படுத்துவதாக அரசியல் களத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. செங்கோட்டையன் விலகலுக்கு பிறகு அதிமுக தரப்பு வெளியிட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான அறிக்கைகள் மற்றும் கருத்துகளுக்கு, த.வெ.க. தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் ஆவேசமான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், மருது அழகுராஜ், அன்வர் ராஜா போன்ற முக்கிய தலைவர்கள் கடந்த காலங்களில் அதிமுகவை விட்டு விலகி சென்றனர். ஆனால், அவர்களின் விலகலின்போது எடப்பாடி பழனிசாமி தரப்போ, செங்கோட்டையன் விலகலுக்கு பிறகு வெளிப்படுத்தும் அதே தீவிரமான உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினையை ஏன் காட்டவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
த.வெ.க. தொண்டர்கள் முன்வைக்கும் முக்கிய வாதம் என்னவென்றால், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் போன்ற தலைவர்கள் விலகியபோது, அவர்கள் அனைவ்ரும் திமுகவை நோக்கியே நகர்ந்தனர். அந்த சமயங்களில், அதிமுக தனது முக்கிய எதிரியான திமுகவோடு மட்டுமே நேரடியாக போட்டியிடுவதாக நம்பியது. ஒரு நிர்வாகி வெளியேறுவது அதிமுகவின் எதிர்கால வெற்றி வாய்ப்பை பாதிக்காது என்ற எண்ணம் மேலோங்கியது.
ஆனால், செங்கோட்டையன் சென்றது தமிழக வெற்றி கழகம் என்னும் புதிய கட்சிக்கு. த.வெ.க. நேரடியாக அதிமுகவின் வாக்கு வங்கியை பிளவுபடுத்தக்கூடிய மாற்று சக்தியாக உருவெடுத்து வருகிறது. ‘மற்றாவர்கள் திமுகவுக்கு போனபோது கதறாதவர்கள், செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு போனதும் கதறுவது ஏன்? ஏனெனில், அவர்கள் எல்லாம் திமுகவுக்கு போனார்… செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு போனார். அந்த ஒரு காரணம் தான்!’ என த.வெ.க. தொண்டர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.
அதிமுகவில் சுமார் 52 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவராக கே.ஏ. செங்கோட்டையன் திகழ்ந்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் உள்பட பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த அவர், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் ஆணிவேராக கருதப்பட்டவர். செங்கோட்டையன் தனது அத்தனை ஆண்டு அரசியல் மற்றும் நிர்வாக அனுபவத்தையும் த.வெ.க.வுக்காக பயன்படுத்தினால், அது தேர்தலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதிமுக தலைமைக்கு எழுந்துள்ளது.
“செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவரின் 52 ஆண்டு அரசியல் அனுபவம் த.வெ.க.வுக்காக பயன்படுத்தப்பட்டால், அதிமுக நிச்சயம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்” என்ற கருத்தை த.வெ.க. தொண்டர்கள் வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கின்றனர். அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளை இழந்துவிட்ட அதிமுகவுக்கு அது மிகப்பெரிய சவாலாக அமையக்கூடும் என்ற அச்சமே, செங்கோட்டையன் விலகல் விவகாரத்தில் ஈபிஎஸ் தரப்பின் உணர்ச்சிபூர்வமான எதிர்வினைக்கு காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
