தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்தும், அவர் மீது திமுகவின் சமீபத்திய விமர்சனங்கள் குறித்தும் அரசியல் விமர்சகர் மதிவாணன் அவர்கள் சில கருத்துக்களை சமீபத்தில் யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விஜய் தனது கட்சிக்காக யாருடைய கூட்டணியையும் தேடி செல்லவில்லை என்றும், மாறாக பல கட்சிகள் தான் அவரது கூட்டணியில் சேர முண்டியடித்து கொண்டிருப்பதாகவும் அரசியல் விமர்சகர் மதிவாணன் தெரிவிக்கிறார்.
விஜய்யின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. அதாவது என்னுடைய தலைமையை ஏற்றுக்கொண்டு, என்னுடைய கொள்கை கோட்பாடுகளை ஒப்புக்கொண்டு என்னோடு கரம் குவிக்க வருபவர்களுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன், கூட்டணியிலும் சேர்த்துக்குவேன், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுப்பேன்” என்று கூறியுள்ளார். இதன் பொருள், அவர் கூட்டணி அமைக்கத் தயாராக இருந்தாலும், அது தன் தலைமையில்தான் இருக்கும் என்ற நிபந்தனையை அவர் வைத்துள்ளார்.
திராவிட வெற்றி கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறித்து தனது கருத்தை கூறிய மதிவாணன், இது திமுகவின் “ஸ்லீப்பர் செல்” அல்லது ப்ராக்ஸி என குற்றம் சாட்டுகிறார். இது, த.வெ.க. (தமிழக வெற்றி கழகம்) என்ற கட்சியின் பெயரை ஒத்த குழப்பத்தை ஏற்படுத்தி, மக்களை அச்சப்படுத்துவதற்காக திமுக கையாளும் ஒரு “தர்ட் ரேட் மெத்தட்” என்றும், இது திமுகவின் பதற்றத்தை காட்டுவதாகவும் அவர் கூறுகிறார்.
திமுகவின் இந்த தாக்குதலுக்கும் பதற்றத்திற்கும் முக்கிய காரணம், “தங்களுக்கு எதிராக களத்தில் நிற்பது எடப்பாடியோ, பாஜகவோ அல்ல” என்ற தகவல் அவர்களுக்குத் தெரிந்துவிட்டதுதான் என்று அவர் வலியுறுத்துகிறார். கடந்த சில மாதங்களாக த.வெ.க. மீதான தாக்குதல் அதிகரித்திருப்பதற்கு இதுவே அடிப்படை என்றும் மதிவாணன் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
விஜய் தனித்து போட்டியிடுவதாக ஒருபோதும் சொல்லவில்லை; அவர் எப்போதும் கூட்டணிக்கு தயாராகவே இருப்பதாக மதிவாணன், தெளிவுபடுத்துகிறார். “இன்று 20% முதல் 25% வரை ஓட்டு அவர் கையில் இருக்கிறது” என்று குறிப்பிடும் மதிவாணன், இந்த கணிப்பானது தற்போதுள்ள கருத்துக்கணிப்புகள் மற்றும் சர்வேக்களின் அடிப்படையில் கணக்கிடப்படுவதாகவும், இதுவே திமுகவின் அச்சத்திற்குக் காரணம் என்றும் கூறுகிறார்.
மேலும், பாஜகவுடன் இதுவரை கூட்டணி வைக்காத அல்லது ஆதரிக்காத ஒரே கட்சி என்று வரும்போது அது தவெக மட்டுமே என்றும், 100% பாஜக எதிர்ப்பு வாக்குகளும் விஜய் பக்கம் திரளும் என்றும் மதிவாணன் தெரிவித்தார். மேலும் Gen Z வாக்காளர்கள் சுமார் 80% அவருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று அவரது கட்சியினர் நம்புவதாகவும் மதிவாணன் கூறுகிறார்.
அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது அக்கட்சிக்கு பலவீனமே என்று விமர்சகர் மதிவாணன் கருதுகிறார். பாஜகவுடன் கூட்டணி வைக்கும்போது, 30% வரை உள்ள மைனாரிட்டி, தலித் மற்றும் சிறுபான்மை இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போய்விடுகின்றன என்றும், இதுவே அதிமுகவின் பலவீனத்திற்கு காரணம் என்றும் அவர் வாதிடுகிறார்.
எனவே, தற்போது தமிழ்நாட்டில் திமுக பயப்படுவது பாஜகவையோ அல்லது அதிமுகவையோ பார்த்தல்ல, மாறாக தமிழக வெற்றி கழகத்தை பார்த்துத்தான் என்று மதிவாணன் இறுதியாக கூறியுள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
